சென்னை: ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘பார்க்கிங்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த ‘எல்ஜிஎம்’ படம் எதிர்மறை விமர்சனங்களால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘பார்க்கிங்’. அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ஐடி கம்பெனி வேலை, புதிய வீடு என அமைதியாக தொடங்கும் ட்ரெய்லர் ஹரிஷ் கல்யாண் கார் வாங்கிய பிறகு டாப் கியரில் பறக்கிறது. தான் வாங்கிய காரை வீட்டு வாசலில் பார்க் செய்யும்போது அவருக்கும் – எம்.எஸ் பாஸ்கருக்குமான மோதல் வெடிக்கிறது. ஒரு கார் பார்க்கிங்குக்கு இப்படியோர் போர்க்களமா என்பதை எண்ணும் வகையில் காட்சிகள் வந்து செல்கின்றன. பெரும்பாலான ட்ரெய்லர் இந்த சிக்கலை நோக்கியே நகர்கிறது.
பகைமை வளர, ஹரிஷ் கல்யாண் – எம்.எஸ்.பாஸ்கரின் பழிவாங்கல் ஒருபுறம், இதற்கு இடையில் இந்துஜாவின் தவிப்பு என காட்சிகள் நகர சாம்.சி.எஸின் பின்னணி இசை கவனம் பெறுகிறது. பிலோமின் ராஜின் விறுவிறுப்பான ட்ரெய்லர் கட்ஸ் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது. விட்டுக் கொடுத்தல் மனப்பான்மை குறைந்து வரும் சூழலில், பார்க்கிங்கால் ஏற்படும் பிரச்சினையை களமாக கொண்டிருக்கும் இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணனின் ‘பார்கிங்’குக்கு மக்கள் மனதில் இடம் கிடைக்குமா என்பதை டிசம்பர் 1-ல் பார்க்கலாம். ட்ரெய்லர் வீடியோ:
+ There are no comments
Add yours