“நீ விஷ்ணுவிடம் போய் பேசுவது அவனுக்குத்தான் அட்வான்டேஜ். இவ்வளவு நேர்மையா பேசியெல்லாம் ஆட வேண்டாம். அவன் என்ன உன் புருஷனா?” என்றெல்லாம் ஜாலியாகப் பேசி தன்னுடைய கடுமையான ஆட்சேபத்தை பூர்ணிமாவிடம் வெளிப்படுத்தினார் மாயா. ‘அவரவர்களின் ஆயுதங்களை எப்போதுமே மூடி மறைத்திருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு அவற்றை சிறிது கூட லீக் செய்து விடக்கூடாது’ என்று கருதுகிற மாயாவின் சிந்தனை முறைதான் இந்த ஆட்டத்திற்குப் பொருத்தமானது. இந்த வகையில் பூர்ணிமாவின் தத்தளிப்பு அவருக்கே பின்னடைவைக் கொண்டு வரலாம்.
பரஸ்பரம் பிறாண்டிக் கொண்ட போட்டியாளர்கள்
மார்னிங் ஆக்டிவிட்டி. ‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்க்கில் என்ன செய்தோம், எவை விடுபட்டது, போன்ற விஷயங்களை ஒவ்வொருவரும் வந்து சபையில் சொல்ல வேண்டும். முதலில் வந்த நிக்சன், “எனக்கு நேச்சுரலா அப்படி வராது. ஆனால் விசித்ரா கேரக்டரில் போயிட்ட பிறகு சில விஷயங்களை ஜாலியா பண்ண முடிஞ்சது. முன்னாடி சிரிச்சு பேசிட்டு பின்னாடி வேற மாதிரி அவங்கபேசுவாங்க. லோக்கல் மொழியில் சொன்னால் ‘ஒருத்தரை முடிச்சு விடறது’. அதை ஜாலியா பண்ணேன்” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். இதைக் கேட்டு விசித்ராவின் முகத்தில் அதிருப்தி தெரிந்தது.
அடுத்ததாக கூல் சுரேஷ் பாத்திரத்தை ஏற்ற விசித்ரா எழுந்து வந்தார், “சுரேஷின் கேவலமான கலர் சென்ஸ் எனக்குப் பிடிக்காது. அழுக்கான டிரஸ்ஸை எனக்குக் கொடுத்தாரு. தனியா தெரியணும்னு என்னென்னமோ காமெடியை அவரு பண்ணுவாரு. தேவையில்லாம உள்ள புகுந்து பேசுவாரு. அதெல்லாம் எனக்கு வராது. மத்தபடி சிறப்பா செய்தேன்” என்று சொன்னதெல்லாம் சுரேஷின் மீது குத்தப்பட்ட நகைச்சுவை முலாம் பூசப்பட்ட கடப்பாறைகள்.
+ There are no comments
Add yours