பார்ட்டி, மதகஜராஜா, நரகாசூரன் – திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் – என்னதான் பிரச்னை?

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, டீசர், டிரெய்லர்கள் வெளியாகி, ரிலீஸ் தேதி அறிவித்தும் பல வருடங்கள் கடந்தும் இன்னமும் ரிலீஸ் ஆகாத படங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

அந்தப் பட்டியலில் விஷாலின் ‘மதகஜராஜா’, அரவிந்த் சாமியின் ‘நரகாசூரன்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, பிரபுதேவாவின் ‘எங் மங் சங்’, ‘ஃப்ளாஷ்பேக்’ அருண் விஜய்யின் ‘வா டீல்’, விஜய் சேதுபதி, விஷ்ணு விஷாலின் ‘இடம் பொருள் ஏவல்’, வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’, சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’, பிரஷாந்தின் ‘அந்தகன்’, தங்கர் பச்சான் மகன் விஜித் பச்சான் நடித்த ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’, விஜய் ஆண்டனியின் ‘அக்னிச் சிறகுகள்’, விமல் நடித்த ‘ரெண்டாவது படம்’ எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் சில படங்களை அதில் நடித்தவர்களே மறந்திருப்பார்கள். இப்படிப் படங்கள் ரெடியாகியும் திரைக்கு வராமல் இருப்பதால் பலநூறு கோடிகள் முடங்கிக் கிடக்கின்றன. இதன் பின்னணி என்ன? இந்தப் படங்களின் தற்போதைய நிலை என்ன?

மதகஜராஜா

மதகஜராஜா

இப்படி ஒரு படத்தை அனைவருமே மறந்து போயிருப்பார்கள். சுந்தர்.சி. இயக்கத்தில் ஜெமினி நிறுவனம் தயாரிப்பில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி நடித்த படம் ‘மதகஜராஜா’. இதனைச் சுருக்கமாக ‘எம்.ஜி.ஆர்’ என அழைத்து வந்தனர். 2012ல் இதன் டீசர் வெளியானது. 2013ம் ஆண்டு பொங்கல் வெளியீடாகப் படம் திரைக்கு வருமென அறிவித்தனர். ஆனால் அப்போது விஷாலின் ‘சமர்’ படம் வெளியானதால் இதனைத் தள்ளிவைத்தனர். ஜெமினி நிறுவனம் அப்போது மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தைத் தயாரித்தது. அதன் பிறகு கடன் பிரச்னையில் ஜெமினி நிறுவனம் மாட்டிக்கொள்ள, ‘மதகஜராஜா’ வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே ஆஸ்திரேலியா படப்பிடிப்பு விஷயத்திலும் பேமென்ட் பாக்கி ஆனதில், பெரும் சிக்கலாகிப் போனது. படத்தை வெளியே கொண்டு வருவதற்கு ஒரு கட்டத்தில் படத்தின் ஹீரோவான விஷாலும் சில முயற்சிகள் எடுத்தார். அதன்பின், அவரும் கைவிட்டுவிட்டார்.

நரகாசூரன்

நரகாசூரன்

கௌதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்த படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா, இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன், ஆத்மிகா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்த படம் இது. கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் இப்படம் பிரச்னையில் மாட்டியது. ஒரு கட்டத்தில் கார்த்திக் நரேனுக்கும், கௌதம் மேனனுக்குமே மோதல் ஆகி, படத்தின் வெளியீட்டை மேலும் சிக்கலாக்கியது. 2020-ல் நிச்சயம் வெளியாகிவிடும் என அறிவிப்பெல்லாம் செய்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை.

அரவிந்த் சாமி நடித்து அடுத்து வெளியாகாமல் இருக்கும் படங்கள் இன்னும் இரண்டு – ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’. இதில் ‘சதுரங்க வேட்டை 2’வை சமீபத்தில் மறைந்த மனோபாலா தயாரித்திருந்தார். அ.வினோத் கதையை ‘சலீம்’ நிர்மல் குமார் இயக்கியிருக்கிறார். த்ரிஷா ஹீரோயின். இப்படத்தை மனோபாலா கைமாற்றிவிட்ட விவகாரத்தில் படம் ரெடியாகியும், ஹீரோவுக்கான பேமென்ட் நிலுவையில் உள்ளது. அதனால் ஹீரோ இன்னமும் டப்பிங் பேசாமல் இருக்கிறார். இப்போது மனோபாலாவின் நண்பர்கள் சேர்ந்து இந்தப் படத்தை வெளிக்கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறார்கள்.

எங் மங் சங்

எங் மங் சங்

ஜாக்கி சான் பட ஸ்டைலில் டைட்டில் அமைந்த படம் ‘எங் மங் சங்’. பிரபுதேவா, லட்சுமிமேனன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கியிருக்கும் படம் இது. பீரியட் ஃபிலிம். பிரபுதேவா ‘தேவி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கேட்ட கதையிது. ஆர்.ஜே.பாலாஜி, ‘கும்கி’ அஸ்வின் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தக் கதையில் பிரபுதேவா குங்ஃபூ மாஸ்ட்ராக நடித்துள்ளார். பிரபுதேவாவின் அப்பாவாக தங்கர் பச்சான் நடித்துள்ளார். சில பொருளாதார சிக்கல்களால் இன்னமும் வெளிவராமல் இருக்கிறது.

பார்ட்டி

பார்ட்டி

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், ஷாம், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, நாசர் எனப் பலரும் நடித்த படம் ‘பார்ட்டி’. லாக்டௌன் காலகட்டத்திற்கு முன்னதாக ஃபிஜி தீவில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. கடந்த 2020-ல் ஓ.டி.டி-யில் நேரடியாக வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

“ஃபிஜி தீவில் படப்பிடிப்பு நடத்தியதால், அங்குள்ள அரசு மானியம் கொடுப்பார்கள் என்பதால், முழுப்படபிடிப்பையும் அங்கே நடத்தினார்கள். ஆனால் லாக்டௌவுன் வந்துவிட்டதால், அந்நாட்டு அரசு மானியத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டது. இந்நிலையில் படத்தை வெளியிட்டுவிட்டால் மானியத் தொகை கிடைக்காது என்பதால், அதைப் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்” என்கிறார்கள்.

மேற்கண்ட படங்கள் தாண்டி இன்னும் பல படங்கள், குறிப்பாகப் பெரிய பட்ஜெட் படங்களே கோலிவுட்டில் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் தமிழ்த் திரைத்துறைக்குப் பல கோடிகள் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இந்தப் படங்கள் அனைத்தும் விரைவில் வெளியாகக் காலம் கைகொடுக்கும் என நம்புவோமாக!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours