கார்த்தியின் நடிப்பில், அ.வினோத் இயக்கத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. கார்த்தியின் திரைப்பயணத்தில் ‘தீரன்’ ரொம்பவே ஸ்பெஷலான படம். இந்தப் படத்தில் போலீஸின் துப்பறியும் திறனையும், மூர்க்கக் குற்றவாளிகளின் தொழில்நுட்பத்தையும் கச்சிதமான கலவையில் பரபரப்பாகப் படமாக்கியிருப்பார் அ.வினோத். ‘கமர்ஷியல் போலீஸ்’ படங்களில் காண்பிக்கப்படுகிற முறையிலிருந்து சற்று விலகி, நிறைய யதார்த்த விவரங்களோடும், ஆவணப் பதிவுகளோடும் கதை விரியும்.
பத்து வருடங்களுக்கும் மேல் தமிழகக் காவல் துறைக்குச் சவாலாக இருந்த Highway Dacoits-ஐ பிடிக்க நடந்த தேடலும், துரத்தலும் நிறைந்த படத்தில் ஐ.பி.எஸ் தீரன் ஆக கார்த்தி நடித்திருப்பார். விரைவில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என்ற பேச்சும் இருக்கிறது. இப்போது கமல் படத்தை இயக்க உள்ள அ.வினோத்திடம் ‘தீரன்’ இரண்டாம் பாகத்திற்கான கதை லைன் ரெடியாக இருக்கிறது என்றும், விரைவில் முழுக்கதையையும் தயார் செய்யவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
தீபாவளிக்கு வெளியான ‘ஜப்பான்’ படத்தை அடுத்து கார்த்தி இப்போது நலன் குமாரசாமி, ’96’ பிரேம்குமார் ஆகியோரின் இயக்கத்தில் படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். நலனின் படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு ஷெட்யூல் முடிந்துவிட்டது. அடுத்த ஷெட்யூல் அடுத்த மாதம் தொடரவிருக்கிறது.
இதற்கிடையே பிரேம்குமார் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். இதன் பூஜை கடந்த வாரம் கார்த்தியின் அலுவலகத்தில் சத்தமில்லாமல் நடைபெற்றது. இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள். படத்தின் நாயகி, இதர நடிகர்கள் தேர்வாகிவிட்டனர். ’96’ல் எமோஷனலான காதலைச் சொன்ன, பிரேம் இந்தக் கதையில் இன்னும் நெகிழ்வான ஓர் உணர்வுபூர்வ விஷயத்தைத் தொடவிருக்கிறார். கதையின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு காட்சிகளும் இடம்பெறுகின்றன. பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ’96’ கோவிந்த் வஸந்தாவே இதற்கும் இசையமைக்கிறார்.
இம்மாதம் இறுதியில் கும்பகோணத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். அங்கே ஒரு ஷெட்யூலுக்கானப் படப்பிடிப்பு நடக்கிறது. கும்பகோணம் ஷெட்யூலை முடித்துவிட்டு நலன் குமாரசாமியின் படப்பிடிப்பில் கார்த்தி பங்கேற்பார் என்றும் சொல்கிறார்கள்.
+ There are no comments
Add yours