திரைப்படங்களும், பாடல்களும் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டவை. ஒரு வசனம், ஒரு காட்சி நம் உறக்கத்தைக் கலைத்திருக்கும். எங்கோ ஒலிக்கும் ஒரு பாடல் நம் நினைவின் அடுக்குகளில் புதைந்துகிடந்த நம் உறவை, காதலை, நட்பை நினைவூட்டி அரவணைத்திருக்கும்.
இப்படி, 30 ஆண்டுகால வாழ்க்கையை 3 மணி நேர சினிமா மாற்றியிருக்கிறது என்கிற கதைகளை நாம் கேட்டிருப்போம், அனுபவத்திருப்போம். நமக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்த திரைப்படங்களுடன் எப்போதும் தனி மதிப்புண்டு. ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படம் இதுபோன்றதொரு நிரந்தரமான இடத்தை பல ஆண்டுகள் கழித்தும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகளானாலும் அடுத்தடுத்த தலைமுறை ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துக் கொண்டே வருகிறது.
இயக்குநர் வெற்றி மாறன் ஒரு பேட்டியில் ‘எனக்கு புகைபிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கு, வாரணம் ஆயிரம் திரைப்படம் ஒரு முக்கியக் காரணம்’ எனக் கூறியிருந்தார். இது போல பலரின் வாழ்க்கை மாற்றத்திற்கு இத்திரைப்படம் வித்திட்டிருக்கிறது. இதற்கெல்லாம் முழு முக்கிய காரணம் இத்திரைப்படத்தின் பாத்திர படைப்புகள்தாம்.
சூர்யா: கிருஷ்ணன் – சூர்யா
இரட்டை வேடங்களில் சூர்யா நடித்திருப்பார். கிருஷ்ணன் தனது கல்லூரி நாட்களுக்கும், காதல் காலத்திற்கும் நம்மை அழைத்துச் சென்றிருப்பார். இவையெல்லாம் 70களின் கல்லூரிப் பருவ பிம்பத்தை நம் கண் முன்னே கடத்திச் செல்லும். இதனைத் தொடர்ந்து இந்த கிருஷ்ணன் கதாபாத்திரம், தந்தை என்கிற நண்பனாக மகன் சூர்யாவை தோழோடு சேர்த்துக் கொள்வார். பருவ வயதில் ஆண்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென அந்த வயதிற்கேற்ற அளவுகோல்களுடன் மகன்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது தந்தையின் தலையாய கடமை. பலர் எதிர்பார்பது போலவே மிகவும் மென்மையான, தன்மையான தந்தையாக கிருஷ்ணன் சூர்யாவை வழிநடத்தியிருப்பார். இதுமட்டுமின்றி ஆங்காங்கே சூர்யாவின் கதாபாத்திரம் நிகழ்த்தும் சில சம்பவங்களை முதிர்ச்சியுடன் அதனைக் கடந்து அடுத்தக் கட்டத்திற்கு செல்ல பாதை அமைத்திருப்பார்.
இதற்கிடையில் தன் மனைவியுடனான காதலை குறையாது பாதத்திலிருந்து தாங்கிப் பிடித்திருப்பார், இந்த கிருஷ்ணன். அடுத்ததாக மகன் சூர்யாவின் வாழ்க்கையின் தருணத்தை போன்று நாமும் பலவற்றை கடந்து வந்திருப்போம். அதாவது பருவ வயதை எட்டிய 90-களில் பிறந்த ஆண்மகன் இயல்பு வாழ்வின் பிரதிபலிப்பாகத்தான் இந்தக் கதாபாத்திரம் அமைந்திருக்கும். பள்ளிகாலத்தில் காதலிக்காக எதிர் கேங்குடன் சண்டையிடும் பொழுதுகள், கல்லூரி காலத்தை எதிர்கொண்ட பக்கம் என நாம் அனுபத்த பல விஷயங்களின் தொகுப்பே இளம் வயது சூர்யாவின் கதாபாத்திரம். ‘ஏத்தி ஏத்தி’ பாடலில் வரும் காட்சியமைப்புகள் அனைத்தும் நாம் அனுபவத்திருக்கக்கூடிய அல்லது எதிர்பார்த்திருக்கக்கூடிய பொழுதுகள்தான்.
நாம் அனைவரும் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு பொழுதில் தவறாது சந்தித்திருக்கக்கூடிய முக்கியமான தருணம், காதல். பள்ளிப் பருவத்தின் ஒருதலைக் காதல் எனத் தொடங்கி பல காதல்களை மனிதர்கள் சந்தித்திருப்பார்கள். அப்படிதான் இயல்பாக இதிலும் வந்தடைந்தது ‘சூர்யா – மேக்னா’வின் காதல் கதை. தந்தையின் ஊக்கத்துடன் கிட்டாரை எடுத்துக் கொண்டு கிளம்பும் சூர்யாவைப் போன்றொரு வாழ்க்கையை பலர் ஏங்கியிருப்பார்கள். இத்தனை மைல் தூரங்களைக் கடந்து தேடிச் சென்ற காதலி தன் காதலை ஏற்றுக்கொள்கிறாள். உலகின் மிக மகிழ்ச்சியான ஒருவனாக அவன் மாறுவான். காதல் கைகூடிய சில நாட்களிலேயே ஒரு விபத்தில் மேக்னா இறந்துபோகிறாள். `இங்க இருக்குடா அமெரிக்கா. போ!’ எனச் சொல்லி அனுப்பிய பெற்றோருக்கு போன் செய்து, காதலி மரித்துப் போன விஷயத்தைச் சொல்லி கதறி அழுவான். `சூர்யா அம்மாட்ட வா!’ என ஆறுதல் சொல்கிற தாயின் வார்த்தைகளும், தந்தையின் ஆசுவாசப்படுத்தலோ அவனை மீட்டெடுக்க முடியாத ஒரு காலம் அவனுக்கு ஏற்படுகிறது. ‘ என் அஞ்சல மச்சா அவ…’ என ஏங்கும் பொழுதுகளெல்லாம் காதலியை இழந்த வலியை பார்பவர்களிடமும் கடத்தி கலங்கச் செய்யும்.
இதனைத் தொடர்ந்து எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி சூர்யாவின் கடினமான நிலைகளில் பார்த்துக் கொள்வதாக ஆங்காங்கே வரும் சிறிய நண்பர்களின் கதாபாத்திரங்கள். துன்பம் மிகுந்த சூழலில் தோன்றி சூர்யாவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் அறிமுகமில்லாத பாத்திரமெல்லாம் நாம் நிதர்சனத்தில் ஏதோ ஒரு தருணத்தில் சந்தித்திருக்கக்கூடியவர்கள்தான். இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும் இதில் சூர்யாவின் கதாபாத்திர ஆர்க்கை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். காதலில் இழப்பு என்கிற துன்பமான நிலை ஏற்பட்ட பின்பு பலர் நிவாரணமாக தேடிச் செல்லும் ஒரே வழக்கம் போதைதான். ஆனால், இத்திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தின் மூலமாக இப்படியான சோகத்திற்கு போதை பொருட்கள் தீர்வல்ல. அதன் பின்புதான் வாழ்வின் பல பக்கங்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது என நமது நெஞ்சில் அழுத்தமாகச் சொல்லும்.
இதன் மறுபுறம் அழகுற அமைந்த பெண் கதாபாத்திரங்களும் இத்திரைப்படத்திற்கு முக்கியமான தூண். மாலினியாக வாழ்க்கை முழுவதையும் கிருஷ்ணனுடன் காதல் குறையாமல் நகர்த்தியிருப்பார். தாய், மனைவி என காலத்திற்கேற்ப முதிர்ந்த பக்குவங்களையும் மாலினி கதாபாத்திரம் சரியாகப் பின் தொடர்ந்திருப்பார். இதனையடுத்து மார்டன் காலகட்டத்திற்கேற்ப வரும் மேக்னா கதாபாத்திரம் நாம் அன்றாட வாழ்க்கையில் பேருந்திலோ, ரயிலிலோ சந்தித்திருக்கக்கூடிய பெண்களில் ஒருவர்தான்.
ஒரு ஆணின் வாழ்க்கை மாற்றத்தை எட்டுவதற்கு முக்கிய உந்து சக்தியாக ஒரு பெண் திகழ்வார் எனப் படித்திருப்போம். இதிலும் இளம் வயது சூர்யா நற்செயல்கள் பக்கம் திரும்புவதற்கு புள்ளி வைப்பது ப்ரியா கதாபாத்திரம்தான். ஒவ்வொரு கசப்பான சூழலை எதிர்கொண்ட பிறகு அழகான வாழ்க்கையின் ஒளி பிறக்கும் என சூர்யாவுக்கு புரிய வைப்பதும் ப்ரியாவின் காதல் தான். இப்படியான நம்முடைய பிம்ப வடிவிலான கதாபாத்திரத்தை வெளிப்படுத்துவதினாலும் பல அனுபவங்களை நமக்கு கற்பிப்பதாலும்தான் இந்த ‘வாரணம் ஆயிரம்’ நமது ரசனையின் உச்சாணிக் கொம்பில் ஏறி நிற்கிறது.
வாழ்வின் அத்தனை தருணங்களிலும் உடனிருந்த அப்பா இறந்துபோன தருணத்தில், சூர்யா கலங்கி நிற்க அவனின் தாய் அவனைத் தேற்றும் காட்சியுடன் படம் முடிவடையும். `Whatever happens life has to go on…’ என கிருஷ்ணன் சொல்கிற வசனம் நம் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இத்திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சியைக் கமென்ட்டில் பதிவிடுங்கள் !
+ There are no comments
Add yours