இந்த வாரத்தில் சில கூட்டணிகள் மாறியிருக்கின்றன. விஷ்ணுவிற்குள் மறுபடியும் ரொமான்ஸ் பூ பூக்க ஆரம்பித்திருக்கிறது. பிராவோவும் மாயாவும் ‘நண்பேன்டா’ மோடில் இறங்கியிருக்கிறார்கள்.
பாத்திரங்களை வைத்து பூர்ணிமா தர முயன்ற ஒரு ‘கன்டென்ட்’ சொதப்பலாகி அவரது பாத்திரத்தையே அபத்தமாக சித்தரித்தது. இனிப்பை வைத்து கசப்பான விஷயங்களை வளர்ப்பதில் தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்தார் பிக் பாஸ்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
திருமணத்தின் வாசனையோடு ஒரு பாடலை காலையில் ஒலிக்க விட்டார் பிக் பாஸ். போட்டியாளர்கள் காலை உணவாக ஒரு வாரத்திற்கு ரவா உப்புமா சாப்பிட வேண்டுமென்று பார்வையாளர்களின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். எதிரிக்கும் கூட கிடைக்கக்கூடாத தண்டனை. இதெல்லாம் உண்மையிலேயே பார்வையாளர்கள் சொல்கிறார்களா, பிக் பாஸ் இடையில் புகுந்து கோத்து விடுகிறாரா என்று தெரியவில்லை. கடந்த வாரத்தில் வீடு கலவர பூமியாக இருந்த போது விஷ்ணு இரண்டு காரியங்களை மட்டுமே செய்து கொண்டிருந்தார்.
ஒன்று, பாதுகாப்பான ஏரியாவில் பாதிக்கப்படாமல் உலவிக் கொண்டிருந்தார். இரண்டு, பூர்ணிமாவுடன் தொடர்ச்சியாக சண்டை இழுத்துக் கொண்டிருந்தார். இந்த வாரத்தில் அவருடைய வியூகம் மாறி விட்டது. சண்டைக்கோழி பாணியை அக்ஷயாவின் பக்கம் திருப்பி விட்டு விட்டு ‘இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி?’ பாணியை பூர்ணிமாவை நோக்கித் திருப்பியிருக்கிறார்.
ஏதாவது ஒரு ஸ்பெஷல் அயிட்டத்தைக் கேட்டு விட்டு அதற்காக வாரக்கணக்கில் பஞ்சாயத்து செய்ய வேண்டியிருக்கும் தலைவிதி அக்ஷயாவிற்கு ஏற்பட்டிருக்கிறது. ‘ஆயில் இல்லாத சப்பாத்தியை’ சுரேஷிடம் ஒரு முறை கேட்டு விட்டு பிறகு ஆயுள் முழுக்க அதற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. இந்த முறை ஸ்பெஷல் பால். அதையும் அக்ஷயா பிராவோவிடம்தான் கேட்டார். அக்ஷயா கேட்டால் புலிப்பாலையே கொண்டு வரும் மூடில் பிராவோ இருக்கிறார்.
அக்ஷயாவிடம் மல்லுக்கட்டிய விஷ்ணு
ஆனால் இடையில் புகுந்த விஷ்ணு “தப்பு. அதெல்லாம் நீ கேட்கக்கூடாது. அப்படில்லாம் தனியா கொடுக்க முடியாது” என்று கட்டையைப் போட்டார். “அந்தப் பொண்ணு காலைல இருந்து ரெண்டு முறை கேட்டுச்சுப்பா” என்று ஒரு நியாயஸ்தனாக உள்ளே புகுந்தார் தினேஷ். வர வர தினேஷின் கிராஃப் ஏறிக் கொண்டே போகிறது. தெளிவாகவும் திறமையாகவும் ஸ்கோர் செய்கிறார். தினேஷ் சொன்னாலும் விஷ்ணுவின் ரிவேன்ஜ் மோட் அடங்காமல் அழிச்சாட்டியம் செய்தார்.
இதைப் பற்றிய பஞ்சாயத்தில் பூர்ணிமா உள்ளே வந்தவுடன் விஷ்ணுவின் முகம் அப்படியே தலைகீழாகி ரொமான்ஸிற்கு மாறி விட்டது. “அவ என் செல்லம்டா. என் தனலஷ்மிடா.. என் சாமிடா’ என்கிற ‘கில்லி’ பிரகாஷ்ராஜ் ரேஞ்சிற்கு மாறி இளிக்க ஆரம்பிக்க, நம்முடைய மைண்ட் வாய்ஸை சரியாகப் படித்த அக்ஷயா, ‘அது என்ன, பூர்ணிமாவைப் பார்த்தா முகத்துல லைட் எரியுது. என்னைப் பார்த்தா ஆஃப் ஆகுது’ என்று உடனே கேட்டது நல்ல டைமிங்.
சுரேஷ் முன்பு சொன்ன அதே பாணியில் ‘நீ ஏதோ ஷூட்டிங் வந்த மாதிரியே இருக்க. உன்னை ஸ்பெஷலா கவனிக்க முடியாது’ என்று அக்ஷயா மீது புகார் மழை பொழிந்தார் விஷ்ணு. ஆனால் பேச வந்த அக்ஷயாவிடம் உரையாடலைத் தொடராமல் நகர்ந்துகொண்டே சென்றார். பிரச்னையை ஆரம்பித்த விஷ்ணுவே ‘நீ என்னைக் கிண்டல் பண்ற மாதிரி பேசினா, நானும் அப்படித்தான் பேசுவேன்’ என்று வம்பு செய்தார். அக்ஷயாவிற்கு சரியாக சண்டை போடும் திறமையில்லை. ‘அங்கிள்.. நான் ஒரு ரைம்ஸ். சொல்லட்டுமா’ என்கிற மாதிரி தலையை அசைத்து அசைத்து அவர் கான்வென்ட் மழலையில் விளக்க ஆரம்பிப்பதற்குள் அடுத்த எபிசோட் வந்து விடுகிறது.
கலங்கிய அக்ஷயாவிற்கு ஆறுதல் சொன்னார் பூர்ணிமா. ‘இப்ப சொல்லு.. யாருக்கும் தெரியாம கேஸ் ஸ்டவ்வையே தூக்கிட்டு வந்து உங்கிட்ட கொடுத்துடறேன்” என்று சமயா சந்தர்ப்பமில்லாமல் பிராவோ ரொமான்ஸ் வாக்குறுதியைக் கொடுத்துக் கொண்டிருக்க ‘டேய்.. அது என் ஏரியா. நீ உள்ளே வராதே’ என்பது மாதிரியே தூரத்தில் இருந்து காண்டுடன் பார்த்துக் கொண்டிருந்தார் விக்ரம்.
பிரிவினைக்கோடு அழிக்கப்பட்டது தற்காலிகம்தான்
‘இவங்க கேமில் இருப்பதே வெளில தெரியல. சும்மாவே இருக்காங்க’ என்கிற கமெண்ட் தொடர்ந்து வருவதால் மணியும் ரவீனாவும் ஏதாவது செய்து வெளியில் தெரிய முடிவு செய்து விட்டார்கள். ஏதாவதொரு குறளி வித்தையைச் செய்து காமிராவின் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது பிக் பாஸ் ஆட்டத்தின் முக்கியமான அம்சம். இதற்காக இவர்கள் சென்ற பாதைதான் விசித்திரம். ‘கூல்’ சுரேஷ் மாதிரி இருவரும் ஒப்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு சுரேஷையே வீட்டில் தாங்க முடியவில்லை. ஒலி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அழைக்கலாமா என்கிற அளவிற்கு சத்தம் போடுகிறார். அதிலும் பென்குயின் போல் ‘க்விய்ங்.. க்விய்ங்’ என்று காதுகளில் மென்மையாக வந்து குத்தும் ரவீனாவின் குரலின் இம்சை வேறு சுரேஷின் ‘ஹைடெசிபல்’ பாணிக்கு பொருந்தாது.
இரண்டு வீட்டையும் ஒன்றாக்கி பிக் பாஸ் வரலாற்று சாதனை படைத்து அமைதிக்கான நோபல் பரிசை இந்த வருடம் வாங்குவார் என்று பார்த்தால், இல்லை. இது தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. இந்த வாரம் மட்டும்தான் வீடு ஒன்றாக இருக்கும். இதற்கான அறிவிப்பு டிவியில் வந்தது. பிக் பாஸா கொக்கா?! சண்டை அதிகம் நடப்பதற்கான வாய்ப்பிற்கான கதவை அத்தனை எளிதில் மூடி விடுவாரா?!
“இந்த வாரம் மாயா எப்படியோ நாமினேஷன்ல இருந்து மிஸ் ஆயிடுச்சேப்பா?” என்று சுரேஷ் ஆதங்கப்பட “மத்தவங்க போடுவாங்கன்னு ஒவ்வொருவருத்தரும் விட்டுட்டாங்க போல” என்றார் ரவீனா. கல்யாண வீட்டு சாம்பாரில் உப்பு போட்ட கதைதான்.
‘நீயெல்லாம் ஒரு ஆளே இல்லை’ என்று அக்ஷயாவிடம் விஷ்ணு அலட்டலாக சொன்ன பஞ்சாயத்தைப் பற்றி ‘அப்படில்லாம் சொல்லக்கூடாதுங்க’ என்று பூர்ணிமா சொல்ல, ஜெஃனிபர் டீச்சரைக் கண்ட சின்னப்பதாஸ் மாதிரி பம்மிய விஷ்ணு “அது என் பேச்சு பாணி. ஆனா, நீங்க சொன்னா எது வேணா செய்வேன் டீச்சர். உங்களுக்காக என் டிக்ஷனரியையே அழிச்சுட்டு மாத்தி எழுதறேன்” என்று வழிந்தார். இது எங்கே போய் முடியப் போகுதோ?!
சொதப்பலான கன்டென்ட் தந்த பூர்ணிமா
‘தள்ளுங்கடா’ என்று தானும் ஒரு கன்டென்ட் கொடுக்க ஆவேசமாக முடிவு செய்தார் பூர்ணிமா. ஆனால் அது கன்டென்ட்டே இல்லாத கன்டென்ட்டாக இருந்தது. “கிச்சன்.. டீம்.. உங்க கிட்ட ஒரு புகார் சொல்லணும். பாத்திரங்கள்ல இருக்கற உணவையெல்லாம் க்ளீன் பண்ணிட்டு தர மாட்டீங்களா. இப்படி தந்தா எப்படி வாஷ் பண்றது?” என்று பூர்ணிமா ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிக்க “என்னது உணவா… காட்டுங்க” என்றார் தினேஷ். உப்புமா செய்த குக்கரின் அடியில் ஒரே ஒரு பச்சை மிளகாய் பரிதாபமாக ஒட்டிக் கொண்டிருந்தது. அவ்வளவுதான்.
நம்முடைய வீடுகளில் கூட இதுதான் இயல்பாக நடக்கும். உணவு சமைத்த பாத்திரங்களின் அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவு மிச்சங்களை சுரண்டியெடுத்து குப்பையில் வீசி விட்டு பாத்திரங்களை கழுவத் துவங்குவார்கள். பூர்ணிமா கேம் ஆடுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட தினேஷ், “நியாயமான விஷயமா இருந்தா நான் உங்க கூட நிப்பேன். இது சாதாரண விஷயம். நீங்க சொல்றது baseless point. கண்ணாடி மாதிரி துடைச்சா பாத்திரங்களை வைப்பாங்க?” என்றெல்லாம் அவர் நியாயமாகப் பேசியும் பூர்ணிமா மசியவில்லை.
‘இல்லை. எனக்கு சண்டை போட்டே ஆகணும்’ என்கிற அழிச்சாட்டிய மோடில் இருந்தார். ஒரு சண்டையை எப்படி திறமையாக ஆரம்பித்து வளர்ப்பது என்பது குறித்து மாயாவிடமிருந்து பூர்ணிமா பயிற்சி பெறலாம்.
ஷாப்பிங் பில் கட்டுவதற்கான நேரம். அதிலும் இந்த முறை அனைவருமே சென்று பை நிறைய அள்ளிக் கொண்டு வந்ததால் கட்டணத் தொகை கூடியிருக்கும். இந்த டாஸ்க்கில் தோற்றால் பெரிய வீட்டின் பெட்ரூம் கதவுகள் ஒரு வாரத்திற்கு மூடப்படும். எனவே தகுதியான பிளேயர்களை அனுப்புங்கள் என்று முன்கூட்டியே எச்சரித்தார் பிக் பாஸ். நான்கு போட்டியாளர்களில் மூவர் பஸ்ஸர் அடிக்கு வரை தாக்குப் பிடிக்க வேண்டும். ஆண்கள்தான் இந்த டாஸ்க்கில் தாக்குப் பிடிப்பார்கள் என்று பார்த்தால் இல்லை. பிராவோவும் நிக்சனும் அடுத்தடுத்து அவுட் ஆக, மாயாவும் பூர்ணிமாவும் தாக்குப் பிடித்து நின்றார்கள். இந்த டாஸ்க்கில் தோற்றதால் பெட்ரூம் கதவு அடைக்கப்படும் என்று கறாராக அறிவித்தார் பிக் பாஸ்.
மாயா, பூர்ணிமா செய்த விதிமீறல்கள்
“சின்ன வீட்டுப்பக்கம் யாரும் வந்துடக்கூடாது.. இங்க வர்றதுக்குத்தானே முன்ன பயந்தீங்க.. இப்ப மட்டும் இனிக்குதா?” என்று வந்தேறிகளை துரத்தும் பூர்விகவாசி போல பிரிவினைவாதம் பேசிக் கொண்டிருந்தார் சுரேஷ். மாயாவும் பூர்ணிமாவும் மைக்கை கழற்றி வைத்து விட்டு ஸ்கீரின் பின்னால் சட்டென்று மறைந்து ரகசியம் பேசினார்கள். ‘மைக்கை மாட்டுங்க. மைக்கை மாட்டுங்க’ என்று அவர்களிடம் ரோபோ மோடில் மாதிரி திரும்பத் திரும்ப சொன்னார் பிக் பாஸ். அப்படிச் சொல்லியும் அவர்களின் மண்டையில் உறைக்கவில்லை என்கிற கிண்டல் போல. விதிமீறல்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
கதவு சாத்தும் வேலை என்றால் அதை விக்ரமிற்கு ஒதுக்கி பங்கப்படுத்துகிறார் பிக் பாஸ். ‘விக்ரம். பெட்ரூம் கதவை மூடிட்டு வாங்க’ என்று அறிவிப்பு வர `ஏன்.. பிக் பாஸ்.. ஏற்கெனவே என்னைக் கலாய்க்கறாங்க’ என்று சலித்துக் கொண்டே எழுந்த விக்ரம், பின்பு சற்று சுதாரித்துக் கொண்டு கதவை மூடி விட்டு ‘இந்த மிஷனை நான் வெற்றிகரமா முடிச்சிட்டேன். பொறுப்பான வேலையை பொறுப்பான ஆளுங்க கிட்டதான் கொடுப்பாங்க’ என்று ஜேம்ஸ்பாண்ட் ரேஞ்சிற்கு பேசி சமாளித்தார். (சூனா.. பானா.. இப்படித்தான் பேசி நம்மள இந்த ஊரு அசிங்கப்படுத்துது!)
கேப்டனுக்கான காயின் தரப்படும் நேரம். காயின் என்ற சொல் கேட்டவுடனேயே காது விறைத்து அதை வாங்குவதற்குத் தயாராக வந்து நின்று விடுகிறார் சுரேஷ். “சரி.. வாங்க’ என்று அழைத்த தினேஷ் ‘இதை உங்க கையாலேயே என் பாக்ஸ்ல போட்டு விடுங்க’ என்று பங்கம் செய்தார்.
லட்டுகளை வைத்து ‘எதிரி’ டாஸ்க்
தீபாவளி தினத்தன்று லட்டுகளை வைத்து ஒரு டாஸ்க் வைத்தார் பிக் பாஸ். ‘அது மக்கள் சாப்பிடுவதற்காக. எனவே ஒழுங்காக செய்யவும்’ என்று அப்போது எச்சரிக்கையும் தந்தார். ஆனால் அந்த லட்டுக்கள் போணியாகவில்லை போல. அவை அப்படியே திரும்பி விட்டதால் இவர்களிடமே தள்ளி விடுவோம் என்று முடிவு செய்த பிக் பாஸ், லட்டுக்களை வைத்து ஒரு டாஸ்க் ஆரம்பித்தார்.
ஒரு லட்டை தனக்கு எடுத்துக் கொண்டு நண்பன் என்று கருதுபவருக்கு ஒரு லட்டும், எதிரி என்று கருதுபவருக்கு ஒரு லட்டும் காரணத்தைச் சொல்லி தர வேண்டும். மூன்று லட்டுகளின் உள்ளே மட்டும் ஸ்டார் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதிக ஸ்டார்களைப் பெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு ‘அடுத்த வாரத்தில் இரண்டு நபர்களை எவிக்ஷன் பட்டியலில் சேர்ப்பதற்கான’ பவர் வழங்கப்படுமாம்.
யார் நண்பன், யார் எதிரி என்பதை ஒவ்வொருவரும் பொதுவில் சொல்ல வேண்டிய கட்டாயம். இதனால் நட்புணர்ச்சி வளர்கிறதோ இல்லையோ, விரோதம் பெருகும் என்பது பிக் பாஸின் நல்லெண்ணம். இதில் விசித்ராவிற்கு இரண்டு அதிர்ஷ்ட ஸ்டார்கள் கிடைத்தன. மணிக்கு ஒன்று. ஜோவிகாவிற்கு ‘எதிரி’ பட்டத்தைத் தந்து விரோதத்தை நீடித்தார் விசித்ரா. இளம் வயதினர் முதிரா அனுபவம் காரணமாக எதிர்த்துப் பேசும் போது அந்தச் சமயத்தில் கோபம் வருவது இயல்புதான். ஆனால் சமநிலைக்கு வந்தவுடன் அவர்களை மன்னித்து விடுவதுதான் அனுபவத்திற்கு அழகு.
விசித்ராவும் அர்ச்சனாவும் ஒருவருக்கொருவர் ‘நண்பேன்டா’ பதக்கத்தை வழங்கி ‘தேவா – சூர்யா’ ரேஞ்சிற்கு பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டணி உடைந்து விரைவில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ‘எதிரி’ யார் என்கிற தேர்வு குறித்து அர்ச்சனா பேசிக் கொண்டிருந்தார். அதில் ‘மாயா..’ என்கிற சொல் வந்தவுடனேயே சட்டென்று எழுந்து வந்து விட்டார் மாயா. ஆனால் அது மாயா இல்லையாம். பூர்ணிமாவாம். இதனால் சபை வெடித்துச் சிரித்தது. மாயா வெளிப்படையான எதிரி, பூர்ணிமா மாறுவேடமிட்ட எதிரி என்பது அர்ச்சனாவின் கருத்து.
தொடரும் ஜோவிகா – விசித்ரா மோதல்
ஜோவிகாவிற்கு ‘எதிரி’ பட்டத்தை வழங்கிய பிராவோ, ‘எல்லோருக்குமே ஒரு எதிரி இருக்கணும். அப்பத்தான் முன்னேற முடியும்’ என்கிற மாதிரி சுயமுன்னேற்ற வகுப்பு எடுக்க `சரியான காரணத்தைச் சொல்லுங்க’ என்று அரித்தெடுத்து விட்டார் பிக் பாஸ். ‘நேத்திக்கு பென்சில் வெடியை ஜோவிகா கொடுத்தது எனக்கு ஹர்ட் ஆச்சு’ என்று சங்கடத்துடன் உண்மையைப் போட்டு உடைத்த பிராவோ, பிறகு ‘எதிரியை மாத்திக்கலாமா?’ என்று கேட்டு மணியைத் தேர்ந்தெடுத்தார். இதிலுமா குழப்பம்?! பிராவோவும் மாயாவும் புதிய நட்புக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இதுவும் என்னவாகப் போகிறதோ?!
‘மம்மி. பாதுகாவலர்..வேஷம்லாம் போடுவாங்க. அது உண்மையில்லன்னு பக்கத்துல போய்ப் பார்ததாதான் தெரியும்’ என்று எதிரி பட்டத்தை விசித்ராவிற்கு வழங்கினார் பூர்ணிமா. இதேதான் ஜோவிகாவின் நிலைப்பாடும். ‘விசித்ரா கேம் ஆடுவாங்களாம். பதிலுக்கு நாம ஆடக்கூடாதாம். அவங்க பாசமெல்லாம் போலி’ என்று இறங்கி அடித்தார்.
ஒருவழியாக இந்த ‘லட்டு’ டாஸ்க் அதிக கசப்புகளுடன் இனிதாக முடிந்தது. ‘ஜோவிகா சொன்ன பாயிண்ட்டை கவனிச்சீங்களா?’ என்று தினேஷ் விசித்ராவிடம் கேட்க, அது என்னவென்று விசாரிக்காமல் `வந்த நாள் முதலே அப்படித்தான் இருக்கா. படிப்பு பத்தி யதார்த்தமா கேட்டதுக்கு என்னை பொதுவில வெச்சு பதார்த்தமாக்கிட்டா. அவ சேர்ந்திருக்கிற இடம் அப்படி. அந்தக் கூட்டமே வெஷம்.’ என்று பொங்கித் தள்ளினார் விசித்ரா.
‘விசித்ராவின் கேம் பாணி ரொம்ப பழசு’
இந்தப் பக்கம் பார்த்தால் விசித்ராவைப் பற்றி ஆவேசமாக புறணி பேசிக் கொண்டிருந்தார் ஜோவிகா. `பிக் பாஸிற்கு முன்னாடி எனக்கு பர்சனலா தெரிஞ்ச போட்டியாளர் அவங்க மட்டும்தான். அவங்க எங்க அம்மாவோட பிரெண்டு. அத வெச்சு அவங்க பண்றது எனக்கு நல்லாத் தெரியுது. ஆனா அதுக்கு ரியாக்ட் பண்ற உள்ளுணர்வுல எனக்கே சந்தேகம் வருது. அப்படியொரு கேம் ஆடறாங்க’ என்று விசித்ராவின் ஆட்ட பாணியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார். அன்பு, பாதுகாவலர் போன்ற வேடங்களின் மூலம் விசித்ரா செயல்படுகிறார் என்பது மாயா தலைமையில் நிகழ்ந்த இந்த உரையாடலின் சாரம்.
“விசித்ராவை வீக்கான பிளேயர்ன்னு நெனச்சேன். ஆனா கிளவரா பண்றாங்க” என்று பூர்ணிமா பகைமையுடன் பாராட்ட, “அது கிளவர்ன்ஸ்லாம் கிடையாது. சித்தி, அத்தை மாதிரி சீரியல் காரெக்ட்டர் பண்ற அதே மேட்டர்தான். எமோஷன்களோட விளையாடறாங்க. ‘ஐ லவ் யூ சைல்ட்’ன்னு சொல்லிட்டு பின்னாடி நாமினேஷன் பண்ணுவாங்க. இது ரொம்ப ஓல்ட் மெத்தட்’ என்பது மாதிரி மாயா விளக்கம் சொல்லி விசித்ராவின் ஆட்ட பாணி அப்படியொன்றும் புத்திசாலித்தனமானது அல்ல என்பதை நிறுவ முயன்றார். ஆனால் சமயங்களில் ஓல்ட் ஈஸ் கோல்ட். ‘சீரியல் அத்தை’ டெக்னிக்கூட வெற்றி பெறலாம். இத்தனை நாட்கள் விசித்ரா தாக்குப் பிடிப்பதே ஒரு திறமைதான்.
‘தோழா. தோழா. ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா அது காதலாகுமா?’ என்கிற ‘பாண்டவர் பூமி’ திரைப்படத்தின் பாடலை பூர்ணிமா, மாயா. பிராவோ ஆகியோர் இணைந்து பாடிக் கொண்டிருக்க “துணிச்சல் இருந்தா பூர்ணிமாவோட இதைச் சேர்ந்து பாடுங்க” என்று விஷ்ணுவை ஜாலியாக கோர்த்து விட்டார் மாயா. அவரும் இந்த வரிகளை அரை மனதோடு பாடியதோடு எபிசோட் நிறைவடைந்தது
+ There are no comments
Add yours