"ஷூட்டிங் ஸ்பாட்டுல சாப்பிடறதுல பிரச்னை; `கயல்’ சீரியல்ல இருந்து தூக்கிட்டாங்க!" – பிர்லா போஸ்

Estimated read time 1 min read

சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் `கயல்’. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் உள்ளிட்டோர் நடித்து வருகிற இந்தத் தொடரை இயக்குநர் செல்வம் இயக்கி வருகிறார்.

சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரில் நடிகர் பிர்லா போஸும் நடித்து வந்தார். வஜ்ரவேல் என்கிற போலீஸ் அதிகாரி வேடம் இவருக்கு.

இந்தச் சூழலில் தற்போது இவருடைய கேரக்டரில் இவருக்குப் பதிலாக வேறொரு ஆர்ட்டிஸ்ட்டைக் கமிட் செய்து விட்டார்களாம். சீரியலிலிருந்து தன்னைத் தூக்கியது குறித்துத் தனக்கு முறைப்படி எந்தத் தகவலும் சொல்லவில்லை எனக் குமுறிய பிர்லா போஸிடம் என்ன நடந்தது எனக் கேட்டோம்.

‘கயல்’ சைத்ரா

“இருபது வருஷத்துக்கு மேல டிவியில நான் இருக்கேன். சன் டிவியைப் பொறுத்தவரைக்கும் எந்தவொரு கேரக்டருக்கும் சேனல்ல ஒரு தடவைக்கு நாலு தடவை பேசித்தான் ஆர்ட்டிஸ்ட்டை இறுதி செய்றாங்க. இந்த சீரியல்ல வஜ்ரவேல் கேரக்டருக்கு நானுமே அப்படித்தான் செல்கட் ஆனேன்.

வஜ்ரவேல் கேரக்டர் வந்த பிறகு சீரியலின் ரேட்டிங்குமே நல்ல ரேட்டிங்தான். இந்தப் பின்னணியில் இப்ப திடீர்னு என் கேரக்டர்ல வேற ஆர்ட்டிஸ்டைக் கமிட் செய்திருக்காங்க.

பொதுவாகவே ஷூட்டிங்கில் எந்தவொரு பிரச்னையும் பண்ணாத ஆள் நான். பிரச்னை செய்ற ஆளா இருந்த தொடர்ந்து ஃபீல்டுல இருக்க முடியுமா?

பதினைஞ்சு நாள் தேதி வாங்கிட்டு நாலு நாள் மட்டுமே ஷூட்டிங் நடந்ததெல்லாம் சந்திச்சிருக்கேன். அப்பெல்லாம் நான் எதுவுமே சொன்னதில்லை. ஏன்னா, சில சமயம் சூழல் அப்படி அமைஞ்சிடும். அதுக்காக யாரையும் புகார் சொல்றதுல அர்த்தமில்லை.

‘கயல்’ சீரியல் பிரச்னையைப் பொறுத்தவரை, ஒரு நாள் எனக்கு ஒரு படத்தின் ஷூட்டிங். சீரியல் யூனிட்ல முறைப்படி சொல்லி அனுமதி வாங்கிட்டுதான் போனேன். அங்க போன இடத்துல கொஞ்சம் தாமதமாகிடுச்சு. அதைச் சரி செய்ய மறுநாள் சீரியலுக்குத் தனியே நேரம் ஒதுக்கி ஃப்ரீயாகவே நடிச்சுக் கொடுத்துட்டேன்.

பிர்லா போஸ்

அதை ஏத்துக்கிட்டதா எங்கிட்டச் சொன்னாங்க. ஆனா பின்னாடி அதையே பிரச்னையாக்கி சின்னத்திரை நடிகர் சங்கத்தில் என் மீது புகார் தந்திருக்காங்க. சங்கத்துல நானுமே கமிட்டி மெம்பர். சங்கத்தைப் பொறுத்தவரை எந்தவொரு புகாரும் எழுத்து பூர்வமா தந்தா மட்டுமே தலையிடுவாங்க. ஆனா இவங்க எழுத்து பூர்வமா புகார் தரலை. ஏன்னா எழுத்துப் பூர்வமாத் தந்தா அந்தப் புகார் நிக்காதுன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு.

புகார் தந்த பிறகு என்னை ஷூட்டிங் கூப்பிடவே இல்லை. நானும் வெயிட் பண்ணிட்டிருந்தேன். திடீர்னு பார்த்தா என் கேரக்டர்ல இன்னொரு ஆர்ட்டிஸ்ட்டைக் கமிட் செய்து ஷூட்டிங் பண்ணியிருக்காங்க.

நான் நடிச்சதுக்கான சம்பளமும் இன்னமும் பாக்கி இருக்கு. விகடன் உட்படப் பல தயாரிப்பு நிறுவனங்கள்ல நான் நடிச்சிருக்கேன். இதுவரை எங்கேயும் இந்த மாதிரி ஒரு சிக்கலைச் சந்திச்சதே இல்லை.

இங்குமே தயாரிப்புத் தரப்பிடமோ சேனல் மீதோ எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை. இயக்குநர்தான் கேம் ஆடியிருக்கார். அதுதான் அதிர்ச்சியா இருக்கு” என்றவரிடம் இயக்குநருடன் உங்களுக்கு என்ன பிரச்னை எனக் கேட்டோம்.

பிர்லா போஸ்

“அவர் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தா காலை டிபனா இருந்தாலும் சரி மதிய உணவா இருந்தாலும் சரி, அவர் சாப்பிட்ட பிறகே மத்தவங்க சாப்பிடணும். இப்படி ஒரு விநோதமான ரூல் வச்சிருக்கார். எனக்கு இது புதுசா இருந்தது. காலையில சீக்கிரம் சாப்பிட்டுட்டு ஷூட்டிங் தயாராகலாம்னு போனா டைரக்டர் வந்து சொன்னாதான் பிரேக்பாஸ்ட் தொடங்கும்னு சொன்னாங்க. இது எனக்குச் சரிப்பட்டு வரலைனு சொன்னேன். அதுல அவருக்கு என் மீது கோபம். இன்னும் வேற ஏதும் கோபம் இருக்கான்னு அவரைத்தான் கேக்கணும்.

எந்தக் கோபம்னாலும் எங்கிட்ட கூப்பிட்டுப் பேசியிருக்கலாம். என்னைத் தூக்கறதா இருந்தாகூட கூப்பிட்டுச் சொல்லிட்டுச் செஞ்சிருக்கலாம். அதை விட்டுட்டு எனக்கே தெரியாம என் கேரக்டருக்கு வேற ஆர்ட்டிஸ்ட் போட்டது உண்மையிலேயே பெரிய மன உளைச்சலா இருக்கு” என முடித்தார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours