விஜய் டிவியில் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘கண்ணே கலைமானே’. பகல் நேர சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்ற தொடர்.
இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த நந்தா மாஸ்டர் சில தினங்களுக்கு முன்பு திடீரென மாற்றப்பட்டார். ஷூட்டிங்கின் போது கீழே விழுந்ததில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் அவர் தொடரிலிருந்து வெளியேறியதாகத் தகவல் வெளியானது. நந்தா தற்போது ஜீ தமிழ் சேனலின் சீரியல் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது இந்த சீரியலை இயக்கி வந்த இயக்குநர் ராஜா தனுஷும் திடீரென மாற்றப் பட்டிருக்கிறார்.
தொடரை ஆரம்பத்திலிருந்து இயக்கி வந்த ராஜா தனுஷ் மாற்றப்பட்டதற்கு, கேமரா மேனுடன் ஏற்பட்ட தகராறுதான் காரனம் எனத் தெரிய வருகிறது
இது தொடர்பாக சீரியலின் யூனிட்டைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.
”ரொம்ப நாளா இந்த சீரியலை இயக்கிட்டு வந்தது இவர்தான். ஆனா ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன்களிடம் ஃப்ரண்ட்லியா நடந்துக்க மாட்டார். அது ஒண்ணுதான் இவர்கிட்ட பிரச்னை. சில மாதங்களுக்கு முன் ஹீரோ நந்தா மாஸ்டர் தொடரிலிருந்து மாறியதுல கூட இவருக்குப் பங்கிருக்குனுதான் பேச்சு அடிபட்டது.
விபத்துக்குள்ளான நந்தா சில நாட்கள் ஓய்வு தேவைப்பட்டு கேட்டதாகவும் அதை இவர் அனுமதிக்க மறுத்து விட்டதாலேயே அவர் வெளியேறியதாகவும் பேசிக்கிட்டாங்க.
இப்ப நடந்த பிரச்னை என்னன்னா, தொடரில் கேமரா மேனாகப் பணிபுரிந்து வந்தவருக்கும் இவருக்கும் ஷூட்டிங்கின் போது ஏதோ பிரச்னை உண்டாகியிருக்கு. அது வளர்ந்து ஒரு கட்டத்துல கேமரா மேனை தொடரிலிருந்து தூக்கிட்டதா இவரே அவர்கிட்டச் சொல்லியிருக்கார். சேனல் மற்றும் தயாரிப்புத் தரப்பின் கவனத்துக்குச் செல்லாமலே இவர் அப்படியொரு முடிவை எடுத்தார்னு சொல்றாங்க. அந்தக் கேமரா மேன் ‘கேமரா மேன் அசோசியேஷனுக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு போயிட்டார். தொடர்ந்து கேமரா மேன் அசோசியேஷன் செகரட்டரியா இருக்கிற நடிகர் இளவரசு இந்த விவகாரத்துல தலையிட்டு கேமரா மேன் பாதிக்கப்பட்டதாகவும் இதுல ஒரு நல்ல தீர்வு கிடைக்காவிட்டால், சீரியல் ஷூட்டிங்கை கேமரா மேன்கள் மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டி வரும் எனவும் சொல்லியிருக்கார்.
இதைத் தொடர்ந்து சீரியலின் தயாரிப்பு தரப்பு மற்றும் சேனல் மட்டத்துல பேசியதன் விளைவாக இயக்குநர் தொடரிலிருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டிருக்கிறார்’ என்கிறார்கள். ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இளவரசுவிடம் இந்த விவகாரம் தொடர்பாகக் கேட்ட போது,
‘சினிமா, சீரியல் ஷூட்டிங்கில் இந்த மாதிரி பிரச்னைகள் வர்றது சகஜம்ங்க. அதைத் திரும்பத் திரும்ப பேசி பெரிசாக்க விரும்பல. அப்படியே கடந்து போவோமே’ என முடித்துக் கொண்டார். ராஜா தனுஷுக்குப் பதில் தொடரை தற்போது பஷீர் என்பவர் இயக்கத் தொடங்கியிருக்கிறார்.
+ There are no comments
Add yours