கோவையில் ராயல் ஜூவல்லர்ஸ் எனும் நகைக்கடையில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. அந்தத் திருட்டு நடந்த விதத்தை வைத்து அது பிரபல கொள்ளையன் ‘ஜப்பான்’னின் கைவரிசையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு, அவனைத் தேட இரண்டு தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. இதே ஜப்பான் ஒரு பேன் இந்தியா திருடன் மட்டுமல்ல, ஒரு பார்ட் டைம் நடிகரும்கூட!
இப்படியான ஒரு கதாபாத்திரத்தின் உண்மையான பின்னணி என்ன, அவருக்கு இருக்கும் பிரச்னை என்ன, உண்மையாகவே இந்தத் திருட்டைச் செய்தது யார், ஒரு திருடன் எப்படி நடிகனாகவும் இருக்க முடியும், போலீஸ் ஏன் அவனை வெளியில் விட்டு வைத்திருக்கிறது என அடிஷனல் ஷீட் போட்டுக் கேட்கும் அளவுக்கு இருக்கும் கேள்விகளுக்கு விடைகள் (!) காண்பதே இப்படத்தின் கதை.
வாழ்வில் எதைப்பற்றியும் கவலையில்லாத, நக்கலும் நையாண்டியும் கலந்த கில்லாடி திருடனாக கார்த்தி. பல இடங்களில் அவரின் நகைச்சுவை ஒன் லைனர்கள் ரசிக்க வைக்கின்றன. ஆக்ஷன் காட்சிகளிலும் வழக்கம் போலச் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். ஆனால் இழுத்து இழுத்துப் பேசும் அந்த வித்தியாசமான வாய்ஸ் மாடுலேஷனைத்தான் ஒரு எல்லைக்கு மேல் ரசிக்க முடியவில்லை. ‘சிறுத்தை’ வைப் இருந்தாலும் இதில் கொஞ்சம் ஓவர்டோஸ் பாஸ்! கதாநாயகி கதாபாத்திரம் வழக்கம்போல தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியாக அந்தரத்தில் விடப்பட்டு இருப்பதால் அதற்காக எவ்வளவு தூரம் பறக்க முடியுமோ அதனை மட்டும் செய்துள்ளார் நாயகி அனு இமானுவேல்.
வாகை சந்திரசேகருக்குப் படம் முழுக்க கார்த்தியோடு பயணம் செய்யும் கதாபாத்திரம். பைபிள் வசனங்கள் சொல்வது போல அவர் போடும் சில ‘பன்ச்’கள் ரசிக்க வைக்கின்றன. போலீஸ் அதிகாரிகளாக விஜய் மில்டன் மற்றும் சுனில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர். குறிப்பாக கார்த்தியின் மிரட்டலுக்கு ஜெர்க் கொடுத்துப் பதறும் காட்சிகளில் உடல்மொழியால் சிரிப்பை வரவைக்கிறார் சுனில். அவரின் ரீல்ஸ் வீடியோக்களும் ரகளை ரகம்! ‘ஆச்சர்யப்பட’ வைக்கும் ட்விஸ்ட் கொடுக்கும் கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். ஆனால் நடிப்பில்தான் அந்த ஆச்சர்யம் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.
மழையின் நடுவே சிறிது வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளிலும், மலை சாலைகளில் எடுக்கப்பட்ட சேஸிங் காட்சிகளிலும் சிறப்பான ஒளிப்பதிவைத் தந்துள்ளார் கே.ரவிவர்மன். ஆனால் பிற காட்சிகளில் அவரின் முத்திரை எங்குமே வெளிப்படவில்லை. ஒரு காட்சிக்கு அடுத்த காட்சியில் முன்னுக்குப் பின் முரணான உணர்வுகளைக் கோர்த்த விதத்தில் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் சறுக்கியுள்ளார். எந்த உணர்வையும் முழுமையாக அனுபவிக்க முடியாத சூழலே வெளிப்படுகிறது. பாம் பிளாஸ்ட் காட்சியில் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை ஏற்படுத்திய ‘பிளாஸ்ட்’ மற்ற இடங்களில் மிஸ்ஸிங். இறுதியில் வரும் அம்மா பாடலைத் தவிர்த்து மற்றவை சுமார் ரகமே!
படம் ஆரம்பித்த விதத்தில் கொள்ளை, விசாரணை எனப் பரபரப்பாக நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் அறிமுகத்துக்குப் பின்னர் தொய்வையே சந்திக்கிறது. திரைக்கதை எதை நோக்கி பயணம் செய்கிறது என்ற தெளிவு இல்லாமல் நம்மை நடந்தே ஜப்பானுக்கே கூட்டிச் செல்லும் அளவுக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது படம்.
இருந்தும் ஆங்காங்கே வருகின்ற வசனங்கள் பெரும் ஆறுதல். குறிப்பாக “எங்க அம்மா எனக்கு வச்ச பேரு ஜப்பான் முனி, ஜப்பான் இரண்டாம் உலகப்போருல அழிஞ்சு போய் இனி எந்திரிக்கவே முடியாதுன்ற எடத்துல இருந்து எந்திரிச்சுச்சாம். அது மாதிரிதாண்டா நானும்” என்பவை மாஸ் ரகம் என்றால், “ஓட்டைய போடுற எடத்துல லாஜிக் பாக்குறீங்களே! ஒட்டு போடுற எடத்துல பாத்தீங்களா” போன்றவை ‘ராஜு முருகன் டச்’. அதுபோல க்ளைமாக்ஸ் காட்சியில் சொல்லப்படும் கதையும் அதற்காக எழுதப்பட்ட வசனங்களும் சிறப்பு!
அதிகம் கவனிக்கப்படாத, கழிவு நீரிலிருந்து தங்கத்தை எடுக்கும் சமூகத்தின் அவலங்களைக் காட்டிய விதமும், போலி என்கவுன்ட்டர்களுக்குத் தயார் செய்கின்ற விதத்தைக் காட்ட வேண்டும் என்கிற எண்ணமும் பாராட்டுக்குரியது. ஆனால் அவை மேலோட்டமாக நுனிப்புல் மேய்கின்ற அளவிலேயே இருப்பதாலும், பிரதான கதைக்கு எந்த விதத்திலும் உதவாததாலும், ‘அந்த நல்ல எண்ணம் மட்டும் போதாது’ என்கிற உணர்வையே ஏற்படுத்துகிறது. கதாநாயகன் எதற்குக் கதாநாயகியைத் தேடிச் செல்கிறான், காரில் விடப்பட்ட கதாநாயகி என்னவானார் என்பது படம் முடிந்த பின்னரும் கூகுளில் தேடும் விஷயமாகவே இருக்கிறது.
மொத்தத்தில் வசனமாக, ஒன்லைனாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுச்சி கண்ட “ஜப்பான்” என்றால், திரைக்கதையாக, காட்சிமொழியாகப் பார்க்கையில் எழவே முடியாத துயரில் சிக்கித் தவிக்கிறது இந்த `ஜப்பான்’.
+ There are no comments
Add yours