‘பிரதீப்பையும் என்னையும் கம்ப்பேரே பண்ண முடியாது’ என்று வினுஷா குறித்து சொன்ன வில்லங்கமான கமெண்ட்டை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார் நிக்சன். இளைஞர்கள் அந்த வயதுக்குரிய முதிர்ச்சியின்மையில், ஜாலியான மனநிலையில் எல்லை மீறிப் பேசுவது இயல்புதான். எப்போதுமே ஒருவர் விறைப்பான நேர்மையுடன் ‘அம்பி’ போல இருக்க முடியாது. ஆனால் அதெல்லாம் தனி உரையாடல்களில். இத்தனை பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் சற்றாவது கான்ஷியஸூடன் பேசுவோம் என்கிற தன்னுணர்வோ, சுயகட்டுப்பாடோ இவர்களிடம் இல்லை.
நிக்சன் மாஸ்க் கேட்ட போது மாயா செய்த வில்லங்கமான செயலையும் உரையாடலில் கொண்டு வந்த பூர்ணிமா ‘அது ஜோக்’ என்று வர்ணித்ததுதான் கொடுமையான ஜோக். ‘ரெண்டு பேருக்குள்ள புரிதல் இருந்து நடந்தா அது காமெடி’ என்று இந்தச் சமயத்தில் ஜோவிகா சொன்னது ஒருவகையில் சரியான லாஜிக்தான். நண்பர்கள் தனியறையில் தங்களுக்குள் ஜாலியாக அடித்துக் கொள்ளும் கமெண்ட்டுகளை வெளியில் கேட்க சகிக்காது. ஆனால் பிக் பாஸ் வீடு என்பது மேன்சன் ரூம் அல்ல. பல கோடி போ் பார்க்கும் நிகழ்ச்சி. அதில் செய்யப்படும் ஒவ்வொரு எல்லை மீறிய செயலும் கவனிக்கப்படும், விமர்சிக்கப்படும்.
‘கண்காணிக்கப்படாத சமயங்களில் கூட ஒழுக்கத்தைப் பின்பற்றுவதற்குப் பெயர்தான் நோ்மை’ என்றொரு பொன்மொழி இருக்கிறது. இவர்கள் அந்த அளவிற்கு கூட நல்லவர்களாக இருக்க வேண்டாம். சுயமாக ஏற்படுத்திக் கொண்ட நாகரிகம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றினால் நன்றாக இருக்கும். ‘யா காவா ராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்பது குறள்.
மாயாவின் கூட்டணிக்குள் பிளவு ஏற்படுகிறதா? உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
+ There are no comments
Add yours