தீபாவளி படங்களுக்குச் சிறப்புக் காட்சிகள் – அனுமதித்த நேரத்துக்குள் 5 காட்சிகள் ஓட்டுவது சாத்தியமா?

Estimated read time 1 min read

தீபாவளி கொண்டாட்டமாக கார்த்தியின் `ஜப்பான்’, ராகவா லாரன்ஸின் `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, விக்ரம் பிரபுவின் `ரெய்டு’, காளி வெங்கட் நடித்த `கிடா’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. இதில் கார்த்தி, லாரன்ஸின் படங்களுக்கு நாளை முதல் அதாவது நவம்பர் 10ம் தேதி முதல், வருகிற 15ம் தேதி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா – லாரன்ஸ்

இதற்கு முன் விஜய்யின் ‘லியோ’ படம் வெளியான போது, சிறப்புக் காட்சிக்கான அனுமதி கிடைப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. அனுமதி கிடைத்த பின்னரும், காலை 9 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு ஒன்றரை மணிக்குள் ஐந்து ஷோக்களையும் முடிக்க வேண்டும் என்று இதே நிபந்தனை விதிக்கப்பட்டது. ‘லியோ’ படத்தின் நீளம் காரணமாக அது முடியாத விஷயம் என்ற பேச்சு அப்போது கிளம்பியது. ஐந்து காட்சிகளுக்கும் இடைவேளை இருக்கிறது. படம் முடிந்த பிறகு அடுத்த ஷோவுக்கான பாரமரிப்புப் பணிகள் இருக்கின்றன. எனவே ஐந்து காட்சிகள் என்பதை ஒன்றரை மணிக்குள் முடிப்பது சாத்தியமே இல்லை என்பதே நிதர்சனமாகத் தோன்றியது.

‘ரெய்டு’ விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா

அதைப் போல, “ஒரு சில தியேட்டர்களில் தயாரிப்பாளர்கள் ஐந்து ஷோக்கள் போடச் சொல்லிக் கேட்கின்றனர். ஆனால், அந்த தியேட்டர்களில் ஐந்து ஷோக்கள் திரையிட்டால் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நெருக்கடியை ஏற்படுத்தும். அதனாலேயே எப்போதும் நான்கு காட்சிகளை மட்டுமே திரையிட்டு வருகிறார்கள். எப்போதும் போலவே இப்போதும் நான்கு காட்சிகள் மட்டுமே திரையிடுவோம்” என்றெல்லாம் அப்போது தகவல் கிளம்பியது.

இப்போது கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தின் நீளம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் நீளம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள். இந்த இரண்டு படங்களின் ரன்னிங் டைம் அதிகம் என்பதால், திட்டமிட்டபடி காலை ஒன்பது மணியிலிருந்து நள்ளிரவு ஒன்றரை மணிக்குள் ஐந்து ஷோக்களை முடித்துவிட முடியுமா என அதே கேள்வியைப் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ”லியோ’வுக்கு என்ன சிக்கல் இருந்ததோ அதேதானே இப்போதும்?’ என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

திருப்பூர் சுப்ரமணியம்

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்திடம் கேட்டால், “சாத்தியம்தான்” என்கிறார்.

“ஒவ்வொரு படத்தின் போதும் இடைவேளை நேரம் 20 நிமிடங்கள் விடப்படுகிறது. இப்போது அதைப் பாதியாகக் குறைத்துவிடத் தீர்மானித்திருக்கிறோம். இடைவேளைக்குப் பத்து நிமிடங்கள் கட் செய்வதால் 50 நிமிடங்கள் கிடைக்கின்றன. விளம்பரங்கள் ஒளிபரப்பும் நேரத்தையும் குறைத்துவிடுவோம். பண்டிகை தினங்களில் நான்கு நாள்கள் இப்படிச் செய்தாலே போதுமானது, சமாளித்துவிட முடியும். அதன் பிறகு வழக்கமான நான்கு காட்சிகள் மட்டும்தானே! அப்போது வழக்கம்போல ஷெட்யூலை மாற்றிக்கொள்ளலாம்!” என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours