சிவந்த மண்ணாக மாறிய ‘அன்று சிந்திய ரத்தம்’ | andru sinthiya raththam movie

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் முதன்முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட திரைப்படம் ‘சிவந்த மண்’. இதில், சிவாஜி கணேசன், காஞ்சனா, முத்துராமன், ஜாவர் சீதாராமன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், சாந்தகுமாரி, தாதா மிராஸி, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு உட்பட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீதர் இயக்கினார்.

ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் உருவான படம் இது. தமிழில், சிவாஜி, காஞ்சனா நடிக்க இந்தியில், ராஜேந்திர குமார், வஹீதா ரஹ்மான் ஜோடியாக நடித்தனர். தமிழில் முத்துராமன் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அந்த வேடத்தில் இந்தியில் சிவாஜி கணேசன் நடித்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா குரலில், ‘ஒரு ராஜா ராணியிடம்’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் வெளியான, ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ படத்தின் ஹைலைட் பாடல்களில் ஒன்று.

வசந்தபுரி சமஸ்தானத்தின் ராஜாவை டம்மியாக்கிவிட்டு, தன் பலத்தை பெருக்கிக் கொள்ளும் ஊழல் திவானிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் கதை.

எம்.ஜி.ஆர் நடிப்பில் ஸ்ரீதர் தொடங்கிய படம், ‘அன்று சிந்திய ரத்தம்’. இந்தப் படமும் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’ படமும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டன. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைக் கலரிலும் ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தைக் கருப்பு வெள்ளையிலும் படமாக்க முடிவு செய்திருந்தார் இயக்குநர் ஸ்ரீதர். ‘சூப்பர் ஸ்டாரான நீங்கள் நடிக்கும் படம் கருப்பு வெள்ளை; புதுமுகங்கள் நடிக்கும் படம் வண்ணத்திலா?’ என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூற, சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்ட ‘அன்று சிந்திய ரத்தம்’ முடங்கியது.

பின்னர், தொடர் தோல்விகளால் பொருளாதார சிக்கலில் இருந்த ஸ்ரீதருக்கு ‘உரிமைக்குரல்’ படத்தில் நடித்துக் கொடுத்து அவரது சிக்கலை எம்.ஜி.ஆர். தீர்த்து வைத்தது தனிக்கதை. ‘அன்று சிந்திய ரத்தம்’ கதையைக் கொஞ்சம் மாற்றி சிவாஜி கணேசனை நாயகனாக்கி உருவாக்கிய படம்தான், ‘சிவந்த மண்’.

இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் படமாக்கப்பட்ட படம் இது. படப்பிடிப்புக்காக ஸ்ரீதர் பாரிஸில் இருந்தபோது அவர் தாயார் காலமானதால் உடனடியாக அங்கிருந்து திரும்பினார். அப்போது, இந்தச் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்தி, தமிழில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டாலும் தமிழில்தான் முதலில் ரிலீஸ் ஆனது. இந்தியில் நான்கு மாதங்கள் கழித்து வெளியானது. இந்திக்கு ஜெய்கிஷன் இசை அமைத்தார். ஒரு முறை, ‘என் அடுத்த இந்திப் படத்துக்கு நீங்கள் தான் இசை அமைப்பாளர்’ என்று ஸ்ரீதர், ஜெய்கிஷனுக்கு கொடுத்த வாக்குக்காக அவரை இசை அமைப்பாளர் ஆக்கினார். இல்லை என்றால் எம்.எஸ்.வியே அங்கும் இசை அமைத்திருப்பார்.

தீபாவளிக்கு வந்து வெற்றி பெற்ற இந்தப் படம் 1969-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours