முந்தைய எபிசோடின் உஷ்ணம் இந்த எபிசோடிலும் அப்படியே நீடித்தது.
முந்தைய எபிசோடின் உஷ்ணம் இந்த எபிசோடிலும் அப்படியே நீடித்தது. இரண்டு தரப்பிலும் எனர்ஜி குறையாமல் திணறத் திணற அடித்துக் கொண்டார்கள் உணவு, டீ போன்றவற்றில் பற்றாக்குறை இருந்தாலும் கூட சண்டை போடுவதற்கு இவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு எனர்ஜி வருகிறது என்று தெரியவில்லை. பல் துலக்காமல் கூட எப்படித்தான் அருகருகே நின்று சண்டை போட்டார்களோ?!
மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா என்கிற நால்வர் அணியின் மூர்க்கமான கூட்டணித் தாக்குதலை விசித்ரா, அர்ச்சனா என்கிற இரண்டு நபர்களைக் கொண்ட அணி திறமையாக சமாளித்தது. மாயாவின் மோசமான கேப்டன்ஸியும் பழிவாங்கல் குணாதிசயமும் இரண்டாவது நாளிலும் அப்படியே தொடர்ந்தது, கொடுமையான விஷயம்.
இந்த ரணகளமான மோதலில் பெண்கள் பிரதானமாக பங்கெடுக்க ஆண்கள் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் போல் ஆங்காங்கே பின்னணியில் உலவிக் கொண்டிருந்தார்கள். ‘பெண்கள் பாதுகாப்பு என்றுதான் இந்த சர்ச்சை ஆரம்பித்தது. இவர்கள் சண்டை போடும் உக்கிரத்தைப் பார்த்தால் இவர்களிடமிருந்து நமக்குத்தான் பாதுகாப்பு தேவை போல’ என்பது ஆண்களின் பீதியான மைண்ட் வாய்ஸ் ஆக இருந்திருக்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி’ என்று பூர்ணிமாவிடம் கடந்த வாரத்தில் வழிந்து கொண்டிருந்த விஷ்ணு, வார இறுதி எபிசோடிற்க்கு பிறகு அப்படியே மாறிவிட்டார். ‘முன்னாடி ஸ்வீட்டா பேசிட்டு பின்னாடி போய் நாமினேட் பண்ணிடுவாரு’ என்று பூர்ணிமா சர்காஸ்டிக்காக சொன்னதை விஷ்ணு சீரியஸாக எடுத்துக் கொண்டதால், அவரிடமிருந்த ரொமான்ஸ் நெருப்பு அணைந்து போய் ரிவேன்ஜ் நெருப்பு பற்றிக் கொண்டது. எனவே, ‘எல்லோரும் இருக்கும் போது தான் ஷாப்பிங் டாஸ்க் பற்றிய லெட்டரை படித்திருக்க வேண்டும். நீ ஒரு தண்ட பிளேயர்.. தண்ட கேப்டன். மக்கள் உன்னை இந்த வாரம் வெச்சு செய்வாங்க’ என்று பூர்ணிமாவிடம் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டிருந்தார். அர்ச்சனாவிற்கு ஆதரவும் தந்து கொண்டிருந்தார் விஷ்ணு.
அர்ச்சனா ஷாப்பிங் செல்வதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இது குறித்த நேரத்திற்குள் துரிதமாக செயல்பட வேண்டிய டாஸ்க். உணவுப் பிரச்சனை தொடர்பானது என்பதால் குறைந்தபட்சம் இதிலாவது இவர்களின் ஈகோ விளையாட்டை காட்டாமல் இருந்திருக்கலாம். பல சமயங்களில் பசியை விடவும் அகங்காரம்தான் மனிதனுக்கு பெரியதாகத் தெரிகிறது.
சண்டை.. சண்டை..சண்டை.. ஓயாத சண்டை..
ஷாப்பிங் சொதப்பலில் தொடங்கிய இந்த மோதல் மறுநாள் வரை சூடு குறையாமல் அப்படியே நீடித்தது. நல்ல வேளையாக கமலின் பிறந்த நாள் டாஸ்க் அறிவிப்பும் பிரியாணியும் வந்த பிறகுதான் இவர்கள் சற்று திசை திரும்பினார்கள். நமக்கும் ஹப்பாடா என்று இருந்தது அதுவரை சண்டை.. சண்டை..சண்டை.. ஓயாத சண்டை.. பார்வையாளர்களின் காதுகளில் ரத்தம் வரைக்கும் சண்டையிட்டார்கள். அர்ச்சனாவுடன் மோதிய ஜோவிகா, ‘ஷட் அப்’ என்று சொல்லப்பட்ட காரணத்தால், மைக்கை வீசியெறிந்து ‘கன்பெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க’ என்று ஆவேசப்பட்டுக் கொண்டிருந்தார். முதல்வன் திரைப்படத்தின் இண்டர்வியூ காட்சியில் ‘காமிராவை நிறுத்துடா’ என்று மிரட்டப்பட்டாலும் ஒரு நமட்டுச் சிரிப்புடன் பதிவு செய்வதை தொடர்வார் காமிராமேன் வடிவேலு. அது போல ‘கன்பெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க’ என்று யார் கதறினாலும் நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்ப்பதில் பிக் பாஸ் வல்லவர் என்பது உணர்ச்சி வேகத்தில் இவர்களுக்குத் தெரியவில்லை.
‘நாமினேட் பண்றது என் உரிமை. அதைப் பத்தி நீங்க கேட்க முடியாது’ என்று விசித்ரா சொல்வது சரி. ‘ரெட் கார்ட்’ விவகாரத்தில் உள்ள உண்மையை ரிட் மனு போட்டு விசித்ரா அறிய விரும்புகிறார் என்றால் அது அவரது விருப்பம். பெண்கள் கூட்டணியில் உள்ளவர்கள் இதை ஆட்சேபிக்கத் தேவையில்லை. தன்னிடம் கேள்வி கேட்க வந்த நிக்சனிடம் ‘ஒரு ஆம்பளையா பிரதீப் கிட்ட கேள்வி கேக்க வக்கில்லை. வந்துட்டான்’ என்று விசித்ரா வெடிக்க, ‘இத்தனை நாள் அம்மா.. அம்மான்னு சொல்லி சீன் போட்டீங்களே?!” என்று பதிலுக்கு உஷ்ணமானார் நிக்சன்.
‘ஜோவிகா எமோசனலா இருக்கும் போது நீங்க சிரிக்கறது நல்லலால்ல’ என்று விசித்ராவிடம் ஐஷூ வெடிக்க “என்னோட எமோஷனல் பிரச்சினையை வெச்சு நீங்க சிரிச்சது மட்டும் ரைட்டா” என்று சந்தில் புகுந்து அர்ச்சனா கேள்வி கேட்டது நியாயமான கோபம். அர்ச்சனாவின் உளப்பிரச்சினையை இவர்கள் கும்பலாக நின்று கேலி செய்தது மனிதாபிமானற்ற செயல். அர்ச்சனா தலையிட்டதால் ஆவேசம் அடைந்து கத்திய ஐஷூ, ‘என்னை கன்ஃபெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க” என்று அவரும் கதற ‘என்னை வெச்சு காமெடி கீமெடி பண்றீங்களா?’ என்பது பிக் பாஸின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்க வேண்டும்.
விசித்ரா போட விரும்புகிற சீராய்வு மனு
முடிந்து போன பிரதீப் விவகாரத்தை விசித்ரா மறுபடியும் கிளறுவதை பெண்கள் கூட்டணி விரும்பவில்லை. ஐஷூவும் இதில் இருப்பதால் நிக்சனும் இந்த மோதலில் கலந்து கொள்கிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இன்னொரு பெண்ணின் பிரச்சினையை விசித்ராவால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது இவர்களின் ஆவேசமான ஆதங்கம். ‘கமல் தீர்ப்பளித்து முடித்து வைத்த விஷயம், ஏன் நாமினேஷனில் மீண்டும் கிளப்பப்பட வேண்டும்’ என்பது இவர்களின் ஆட்சேபம். உண்மை ஒருவரின் பக்கத்தில் இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் விசாரணையை எதிர்கொள்ளலாம். பதட்டப்படத் தேவையில்லை.
‘பிரதீப்பிற்கு ஏன் ஸ்பேஸ் கொடுத்தேன்னு அர்ச்சனா என்னைக் கேட்கறா. இங்க என்ன நடந்துதுன்னு முழுசா அவளுக்குத் தெரியுமா?” என்று ஐஷூ வெடிக்க, “24×7 டிவில பார்த்துட்டுத்தான் வரேன்” என்றார் அர்ச்சனா. இருபத்து நான்கு மணி நேரமும் பார்த்தால் கூட அது எடிட் செய்யப்பட்ட வடிவம்தான். மேலும் உண்மை என்பது அத்தனை எளிதில் கண்டுபிடிக்கப்பட முடியாத அரூபமான விஷயம். இத்தனை காமிராக்கள் இருக்கும் சூழலில் கூட உண்மையை அறிவதில் இத்தனை தடுமாற்றம் நிகழ்வது ஒரு சுவாரசியமான முரண். எது உண்மை என்பதே ஒரு தத்துவார்த்தமான கேள்விதான்.
அர்ச்சனாவிற்கும் ஐஷூவிற்கும் இடையே நிகழ்ந்த மோதலில் “உன் சிறு வயதில் கொடுமையான அனுபவத்தைக் கடந்து வந்திருப்பாய்” என்று அர்ச்சனா ஆங்கிலத்தில் சொன்னதைக் கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஐஷூ, மைக்கை தூக்கியெறிந்து விட்டு கன்பெஷன் ரூமை நோக்கி ஆவேசமாக நடந்து சென்றார். ஐஷூ தொடர்பான விஷயத்தை நிக்சன்தான் அர்ச்சனாவிடம் சொல்லியிருக்கிறார் போல. ஐஷூவை இம்ப்ரஸ் செய்வதற்காக நிக்சன் செய்யும் விஷயங்கள் இன்னமும் என்னென்ன விபரீதங்களைக் கொண்டு வரப் போகிறதோ?
நிக்சனின் விபரீதமான சமாதான முயற்சிகள்
ஐஷூற்கும் அர்ச்சனாவிற்கும் இடையில் சமாதானம் ஏற்படுத்துவதற்காக நிக்சன் செய்த ‘மீட்டிங்’ முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது. அர்ச்சனாவின் உளப்பிரச்சினையை சண்டையில் சொல்லிக் காட்டுவது எவ்வளவு தவறோ, அதே போல் ஒரு பெண் கடந்து வந்த கசப்பான அனுபவத்தை பொதுவில் சொல்லிக் காட்டுவதும் இழிவான செயல்தான். இதை அர்ச்சனா தவிர்த்திருக்க வேண்டும்.
‘நான் கேப்டன் பதவியை ரிசைன் பண்றேன். என்னை கன்ஃபெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க ’ என்று இன்னொரு பக்கம் காமெடி செய்து கொண்டிருந்தார் மாயா. வீட்டின் தலைவராக அவர்தான் இந்தப் பிரச்சினையைத் தணிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் பற்ற வைப்பராக அவரேதான் இருக்கிறார். ‘உங்க பொண்ணைச் சொல்லியிருந்தா சும்மா இருப்பீங்களா?’ என்று விசித்ராவிடம் நிக்சன் ஆவேசமாக கேள்வி கேட்க “இந்தக் கோபம் அப்பவே வந்திருக்கணும்” என்று அர்ச்சனா குறுக்கே வர நிக்சனுக்கும் அர்ச்சனாவிற்கும் இடையில் இன்னொரு மோதல் கடுமையாக வெடித்தது. ‘அய்யோவ்.. சண்டைடோவ்’ என்று வீட்டிற்குள் இருந்து வேடிக்கை பார்க்க பதட்டமாக ஓடி வந்தார் விக்ரம்.
‘இப்ப கேங்கா வர்ற மாதிரி அப்பவே பிரதீப்பை கேள்வி கேட்டிருக்கலாமே?’ என்று அர்ச்சனா கேட்ட போது ‘ஒரு பொண்ணா யோசிச்சுப் பாருங்க.. அப்படி எல்லோராலயும் அந்த டைம்ல உடனே ரியாக்ட் பண்ண முடியாது’ என்று நிதானமாக விளக்க முயன்றார்அக்ஷயா. “அருவருப்பான கமெண்ட்டுகளை எங்களால் மத்தவங்க கிட்ட டிஸ்கஸ் கூட பண்ண முடியலை. ஏன்னா எங்களுக்கு பயமா இருந்துச்சு’ என்று பிறகு அர்ச்சனாவிடம் விளக்கிக் கொண்டிருந்தார் பூர்ணிமா.
கொடி கட்டிப் பறக்கும் மாயாவின் அதிகாரம்
சண்டை போட்ட களைப்பில் இவர்களுக்கு பசியெடுத்திருக்க வேண்டும். கிச்சன் ஏரியா அமைதியாக இருந்ததால் “யாரு சமைக்கப் போறாங்க?” என்று அதிகாரமான கேள்வியுடன் வந்தார் மாயா. ‘நீ இங்க வா.. நீயும் இங்க வா.. இடுப்பை வளைச்சு நெளிச்சு நல்லா ஆடணும்’ என்கிற பருத்திவீரன் கார்த்தி போல ‘நீ என்ன பண்றே.. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?’ என்று கையை நீட்டி மாயா செய்த அதிகாரம் நிச்சயம் யாரையும் எரிச்சலூட்டும் விஷயம். ‘என்னதிது .. வேலைக்காரங்க மாதிரி டிரீட் பண்றாங்க” என்று விசித்ராவும் அர்ச்சனாவும் ஆட்சேபம் தெரிவித்ததில் முழு நியாயம் இருக்கிறது.
மாயாவின் அட்ராசிட்டியை பெரிய வீட்டில் விஷ்ணுவைத் தவிர வேறு யாருமே ஏன் ஆட்சேபிக்காமல் அவர் இடும் கட்டளைகளை பணிவுடன் பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. கேப்டனாகவே இருந்தாலும் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டிய கடமையும் உரிமையும் பெரிய வீட்டாருக்கு இருக்கிறது. இந்த நோக்கில் கானா பாலா, பிராவோ, விக்ரம், அக்ஷயா போன்றவர்கள் ஆடுவதெல்லாம் அப்பட்டமான சேஃப் கேம். என்னவொன்று இவர்களும் அந்த கேங்கில் இணைந்து எதிரணியுடன் மூர்க்கமாக சண்டை போடுவதில்லை என்பது மட்டுமே குறைந்த பட்ச ஆறுதல்.
‘நான் எல்லாப் பொருளையும் எடுத்துட்டேன்” என்று ஷாப்பிங் லிஸ்ட்டை நினைவுப்படுத்தி அர்ச்சனா சொல்லிக் கொண்டிருக்க ‘டூத் பிரஷ் தர மாட்டேன்றாங்களே’ என்று கேட்டுக் கொண்டிருந்தார் விசித்ரா. அதை வைத்துதான் பிறகு மாயா மிகப் பெரிய போங்காட்டம் ஆடப் போகிறார் என்பது அப்போது விசித்ராவிற்குத் தெரிந்திருக்காது. பிஸ்கெட்டிலும் ரேஷன் முறையைப் புகுத்தி பழிவாங்கினார் மாயா.
மாயா செய்த அதிகாரம் காரணமாக விசித்ராவும் அர்ச்சனாவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ‘அடிப்படையான சமையலை முடிச்சுட்டு வந்துதான் உக்காந்திருக்கோம்’ என்பது அவர்களின் விளக்கம். ‘மக்களே.. நல்லாப் பார்த்துக்கங்க. அவங்க வேலை செய்யலை. செலக்ஷன் அப்ப ஞாபகம் வெச்சுக்கங்க’ என்பது போல் மற்றவர்களின் மண்டையைக் கழுவினார் மாயா.
‘எனக்கு ரொம்ப காண்டாவுது மேம்’ – மனம் புழுங்கிய அர்ச்சனா
சப்பாத்தி உருட்டும் நேரத்தில் அர்ச்சனாவும் மாயாவும் குத்தலான கமெண்ட்டுகளை சரமாரியாக பகிர்ந்து கொண்டார்கள். சரியான பதிலடியைத் தர வேண்டும் என்கிற ஆவேசம் அர்ச்சனாவிற்கு இருக்கிற அதே சமயத்தில், ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் மனம் உடைந்து கதறி விடுகிறார். இது சென்சிட்டிவ்வாக இருப்பவர்களின் குணாதிசயம். காலேஜ் ஸ்டாப்பிடம் புகார் சொல்லும் ஸ்டூடண்ட் மாதிரி ‘மேம்.. அவங்க என்னை ப்ரவோக் பண்றாங்க மேம்’ என்று பரிதாபமாக புகார் செய்து கொண்டிருந்தார். மாயா கேங் தன்னைக் கிண்டலடித்து சிரிப்பதைப் பார்த்து ‘ண்ணா.. அவங்களை சிரிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்கண்ணா.. எனக்கு ரொம்ப காண்டாவுது’ என்கிற ‘புதுப்பேட்டை’ தனுஷ் போல் அழுத்தம் தாங்காமல் கதறிய அர்ச்சனாவைப் பார்த்து நமக்கே பரிதாபமாகத்தான் இருந்தது. ‘நீ அமைதியா இரு. ப்ரவோக் ஆகாத’ என்று ஆறுதல் சொன்னார் விசித்ரா.
“வைல்ட் கார்டு என்ட்ரியோட என்னை சேர்த்து வெச்சு அனுப்பிச்சிட்டு அவங்க சொல்றதையெல்லாம் செய்வேன்னு எதிர்பார்க்கறாங்களா.. அது முடியாது. எந்த லிமிட் வரைக்கும் அவங்க போறாங்கன்னு நானும் பார்க்கறேன்” என்று சபதம் எடுக்கும் மோடில் விசித்ரா பேச “இவங்க கூட இன்னும் குறைநாள் எப்படி மேம் குப்பை கொட்டப் போறோம்?” என்று பரிதாபமாக கேட்டுக் கொண்டிருந்தார் அர்ச்சனா.
‘உன் மேல பெரிய வருத்தம் நிக்சன்.. ஐஷூவை தனியாத்தானே கூட்டிட்டு வரச் சொன்னேன்?” என்று அர்ச்சனா ஆரம்பிக்க “அவங்க கேங்கா வந்தாங்க. நான் என்ன பண்றது?” என்று சமாதானமாக விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் நிக்சன். “நிக்சன்.. இங்க வா.. நீ அங்க பேசினா.. நான் உன் கிட்ட இனி பேச மாட்டேன்” என்று ரிமோட் பொம்மையை இயக்குவது போல் நிக்சனை சென்டிமென்ட்டாக மிரட்டிக் கொண்டிருந்தார் ஐஷூ.
மீண்டும் துவங்கிய பஞ்சாயத்தும் மோதலும்
வாரயிறுதி பஞ்சாயத்திற்குப் பயந்தோ அல்லது உண்மையாக உணர்ந்தோ, அவமதிப்பாக பேசியதற்காக அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்க ஜோவிகா முன்வந்தது நல்ல விஷயம். இதே போல் தன்னுடைய பிரச்சினையையும் முடிக்க ஐஷூ நினைத்தார். எனவே மாயாவின் தலைமையில் ஒரு பஞ்சாயத்து கூடியது.
ஏற்கெனவே கொந்தளிப்பாக போய்க் கொண்டிருக்கும் சூழலில் இந்தப் பஞ்சாயத்தை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று விசித்ராவும் தினேஷூம் சொன்னது நல்ல யோசனை. ‘இதே மைண்ட் செட்டோட நாளைக்கு இருக்க வேணாம்’ என்றார் ஐஷூ. ‘அவர் தன் கருத்தைப் பதிவு செய்து விட்டார். இப்ப நீங்க பேசுங்க’ என்கிற செய்தி விவாத நிகழ்ச்சி போல இதை ஆர்கனைஸ் செய்தார் மாயா. ‘பர்ஸனல் காயம் பத்திலாம் பேசாதீங்க” என்று ஐஷூ சொன்னதை ஏற்றுக் கொண்டு அர்ச்சனா மன்னிப்பு கேட்க அந்த விவகாரம் ஒருவழியாக முடிவிற்கு வந்தது.
ஆனால் ‘எமோஷனலான நேரத்தில்’ விசித்ரா சிரித்த விவகாரத்தை ஐஷூ மீண்டும் எழுப்ப ‘நான் அதுக்காக சிரிக்கலை’ என்று விளக்கம் அளித்த விசித்ரா, ஒரு கட்டத்தில் ‘எனக்கு பேச மூடு இல்லை’ என்று அமைதியானார். ‘எமோஷனல் நேரத்துல சிரிக்கறதைப் பத்தி பேசறதுக்கெல்லாம் உங்களுக்கு ரைட்ஸ்ஸே இல்லை. என்னை வெச்சு நீங்க பண்ணாததா?” என்று வெடித்த அர்ச்சனாவின் கோபத்தில் நியாயம் இருந்தது.
மாயா செய்யும் அதிகாரத் தோரணையைப் பற்றி அர்ச்சனாவும் விசித்ராவும் புகார் சொல்ல ‘இனி மாயாவின் கேப்டன்சியின் கீழ் நான் எதையும் செய்ய மாட்டேன்” என்று கத்திய அர்ச்சனா, ஒரு கட்டத்தில் உணர்ச்சி மிகுதியில் தலையைப் பிடித்துக் கொண்டு அழுதார். குழந்தை போல் தேம்பி அழுத அர்ச்சனாவிற்கு சின்ன வீட்டார் தண்ணீர் தந்து ஆறுதல் சொன்னார்கள். விசித்ரா சொன்னது போல இந்தப் பஞ்சாயத்தை மறுநாளே வைத்திருக்கலாம். சூட்டோடு சூட்டாக முடித்து விடலாம் என்று சென்றால் இன்னமும் சூடு அதிகமானதுதான் மிச்சம்.
‘பிக் பாஸ்.. கன்.ஃபெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க’
“எங்களுக்கும் மன அழுத்தம் இருக்கு. நாங்களும் அழணும்” என்ற மாயா ‘என்னதிது சைக்கோவையெல்லாம் கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று சொன்னதெல்லாம் ஓவரான ஸ்டேட்மெண்ட். “இப்படி கத்தறதால.. அவங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். அவங்க கும்பலா தாக்க வராங்கன்னா.. அவங்கதான் பயப்படறாங்கன்னு அர்த்தம். நீ கரெக்ட்டா பேசின” என்று அர்ச்சனாவிற்கு சரியான முறையில் ஆறுதலைத் தந்தார் தினேஷ். இந்தக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு எப்படியாக சென்று சேரும் என்கிற புரிதல் அவருக்கு இருந்தது. ‘இப்ப இவ்வளவு ஆவேசமா பேசற இவங்க.. ஏன் அப்பவே (பிரதீப் கிட்ட) அப்ஜெக்ட் பண்ணலை?” என்கிற அதே கேள்வியை இப்போதும் முன்வைத்தார் அர்ச்சனா. பலமானவர்களை விடவும் பலவீனமானவர்களை அடிப்பது எளிது என்பதுதான் இதற்கான பதில்.
‘பிக் பாஸ். என்னைக் கூப்பிடுங்க.. நான் கிளம்பறேன்’ என்று ஆளாளுக்கு மைக்கை உதறிக் கொண்டிருந்தார்கள். ‘எல்லாவற்றிற்கும் விசித்ராதான் காரணம். அந்த லேடியைத் தூக்கணும்’ சபதம் போட்டுக் கொண்டிருந்தார் மாயா. இந்தச் சண்டையில் விக்ரமும் அபூர்வமாக ஏதோ பேசியிருப்பார் போல. ‘இந்தப் பையனுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்’ என்று சின்ன வீட்டில் இதைப் பற்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘விஷ்ணு என் கிட்ட ப்ரபோஸே பண்ணிட்டான் ப்ரோ. பச்சோந்தி பய. இந்த வாரம் அப்படியே மாறிட்டான்” என்று பூர்ணிமா ஒரு பக்கம் அனத்திக் கொண்டிருக்க, சொந்த வீட்டின் உளவாளி போல எதிர் தரப்பு ரவீனாவிடம் சில ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார் விஷ்ணு.
‘இன்னிக்காவது சண்டை இல்லாம இருக்குமா?!
ஒருவழியாக நாள் 37 விடிந்தது. (ஹப்பாடா!). ‘கடவுளே.. இன்னிக்காவது சண்டையேதும் இல்லாம நல்லபடியா இருக்கணும்’ என்று அவர்களுக்காக நாமே பிரார்த்தனை செய்யுமளவிற்கு வீட்டின் சூழல் இருந்தது. பிக் பாஸைப் போலவே கடவுளும் மெடிக்கல் லீவில் சென்றிருந்தாரோ, என்னமோ, அவரின் காதில் இந்தப் பிரார்த்தனை விழவில்லை. இன்றும் சண்டை உக்கிரமாகத் தொடர்ந்தது. பல் துலக்கும் பிரஷ்ஷில் ஆரம்பித்தது பிரச்சினை.
‘டூத் பிரஷ் கொடுங்க மாயா.. நேத்துல இருந்து கேட்டுட்டு இருக்கேன்’ என்று விசித்ரா கேட்க, அவரைப் பழிவாங்கும் தீர்மானத்தில் இருந்த மாயா ‘கை இருக்குல்ல. அதுல பண்ணுங்க’ என்றது அப்பட்டமான அழிச்சாட்டியம். ‘சரி.. டூத் பிரஷ் தரேன்.. டீ போடுங்க’ என்று மாயா பேசிய அதட்டலான பேரத்தை விசித்ரா ரசிக்கவில்லை. ‘டீயும் கிடையாது.. தண்ணியும் கிடையாது. போடீ” என்று ஸ்டவ்வை ஆஃப் செய்து கிளம்பி விட்டார். டூத்பிரஷ் என்கிற அடிப்படையான தேவையை வைத்து இவர்கள் விளையாடுகிறார்களே என்பது விசித்ராவின் நியாயமான கோபம். மேலும் பல் துலக்காமல் அருகருகே நின்று சண்டை போடுவதும் ரசிக்க முடியாத விஷயம்.
‘விசித்ராவை ஸாரி சொல்லச் சொல்லுங்க. டூத் பிரஷ் தரேன்’ என்று மாயா பதிலுக்குச் சொல்ல இது மேலும் இழுபறியாக நீடித்தது. விசித்ராவைத் தவிர மற்ற அனைவருக்கும் டூஷ் பிரஷ் தந்த மாயாவிடம் ‘நீங்க ரெண்டு வீட்டிற்கும்தான் கேப்டன். நியாயமா நடந்துக்கங்க. அதிகாரம் பண்ணாதீங்க” என்று மல்லுக் கட்டினார் தினேஷ். மாயாவே கிச்சனில் புகுந்து டீயைப் போட முயல, இருவருக்குமான உரசலில் பால் கீழே சிந்தியது. (ஏற்கெனவே பால் கம்மியா இருக்கு! இது வேறயா!). ‘எலிமினேஷனுக்கு பயப்படாத ஆளு நானு. இதை எப்படி டீல் பண்ணனும்னு எனக்குத் தெரியும். சைலண்ட்டாவே வயலண்ட் பண்ணுவேன்’ என்ற விசித்ரா வெளியே கிளம்பி கார்டன் ஏரியாவில் உள்ள சோபாவில் சென்று அமர்ந்து விட்டார். கூடவே சிஷ்யையான அர்ச்சனாவும்.
‘விதிமீறல் செய்தால் கேஸ் ஆஃப் செய்வார்கள். இவர்களால் எப்படி டீ போட முடியும்?’ என்பது விசித்ரா வைத்த செக் மேட். ‘எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்கிற பழமொழி விசித்ராவிற்குத் தெரிந்திருக்கிறது. விசித்ராவின் இந்த அஹிம்சைப் போராட்டத்திற்கு விரல் மேல் பலன் கிடைத்தது. ‘என்ன வேணும்?” என்று மணிரத்ன படத்தின் வசனம் போல மாயா வந்து கேட்க “முதல்ல மரியாதை. அப்புறம் டூஷ்பிரஷ்” என்றார் விசித்ரா ரத்தினச் சுருக்கமாக.
டூத் பிரஷ் வைத்து மாயா செய்த வில்லங்கம்
மீண்டும் மாயாவின் கேங் வந்து சூழ்ந்து கொள்ள, விசித்ராவும் அர்ச்சனாவும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல சுழன்று சுழன்று போராடி சமாளித்தார்கள். ‘ஏய்.. என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்கப்பா..” என்பது போல் விக்ரமும் வந்து இந்த மோதலில் இணைய முயல “தம்பி.. ஓரமா போய் விளையாடு. நான்தான் இந்த வாரம் உன்னைக் காப்பாத்தி உக்கார வெச்சிருக்கேன்” என்று விக்ரமை அசால்ட்டாக பங்கப்படுத்தினார் விசித்ரா. காரசாரமான வாக்குவாதத்திற்குப் பிறகு ஒருவழியாக இந்த ‘டூஷ் பிரஷ்’ போராட்டம் முடிவிற்கு வந்தது. ‘நாங்க பேசறதுதான் உங்களுக்குப் பிரச்சினையா. இனிமே விசித்ரா, அர்ச்சனா கிட்ட யாரும் பேசாதீங்கப்பா. இது என் ஆர்டர்’ என்கிற அராஜகமான தீர்ப்போடு பஞ்சாயத்தை முடித்தார் மாயா. (முதல்ல போய் எல்லோரும் பல்லை வௌக்குங்கப்பா.. டிவில பார்க்கற எங்களுக்கே குமட்டுது!).
“போற போக்குல விக்ரமை கலாய்ச்சு விட்டுட்டீங்களே’ என்று விசித்ராவிடம் சொல்லி சிரித்தார் தினேஷ். “மத்தவங்க உணர்ச்சியோட இப்படி விளையாடறீங்களா.. இவங்க ஒருவேளை ஜெயிச்சிட்டா அப்புறம் குற்றவுணர்ச்சியா இருக்காது?. விட்டா மாயா இந்த வீட்டோட பெயரையே மாத்திடுவாங்க போல. இவங்களுக்கும் வெளியே போன பிரதீப்பிற்கும் ஒரு வித்தியாசமும் இல்ல. மாயாவை நான் புத்திசாலின்னு நெனச்சிட்டு இருந்தேன். இப்படி பண்றாங்க.. ஜோவிகா வயசுல எல்லாம் நான் பேக்கு மாதிரி இருந்தேன்” என்று பொங்கிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. மாயாவின் அட்ராசிட்டி ரவீனாவிற்கும் அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது. “சொன்னா கேக்கவே மாட்றாங்க” என்று அவர் சிணுங்கினார்.
“இந்த எபிசோட்ல நடந்த விஷயத்தைப் பத்தி நான் உனக்குப் புரிய வெக்கறேன் பாரு” என்று தனக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்த ரவீனாவிடம் குழப்பமாக ஏதோ பொழிப்புரை வழங்கிக் கொண்டிருந்தார் சுரேஷ். ‘மாயாவின் கேப்டன்சி சரியில்ல’ என்பது மட்டுமே அவர் சொன்னதில் இருந்து புரிந்தது. ‘ஒருத்தரை பத்து பேர் சேர்ந்து எதிர்த்தா யாரு பலசாலி’ என்கிற லாஜிக்கை முன்வைத்தார் சுரேஷ்.
‘க்ரூப்பா வந்து பேசறதாலதான் பிரச்சினை அதிகமாகுது” என்று இந்தச் சமயத்தில் ரவீனா சொன்னது சரியான பாயிண்ட். ‘பெண்கள் பாதுகாப்பு இல்லைன்னு சொல்றாங்க.. ஆனா இங்க நானே சேஃப்பா ஃபீல் பண்ணலை” என்று இன்னொரு பக்கம் அர்ச்சனா சொல்லிக் கொண்டிருந்தது சரியான கோணம். பிரதீப் செய்தது பாலியல் சீண்டல் அல்ல. ஆனால் வில்லங்கமான வார்த்தைகளால் தொடர்ந்து சீண்டுவதும் ஒருவகையான வன்முறைதான். அதையேதான் இன்னொரு வகையில் மாயா குழுவின் மூலமாக அனுபவிக்கிறார் அர்ச்சனா.
ரணகளத்தை திசை திருப்பிய கமலின் பிறந்த நாள்
‘நம்மளோட அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?” நம்பியார் போல முகத்தை வைத்துக் கொண்டு பூர்ணிமாவிடம் மாயா கேட்க “விசித்ரா சொன்னது மைண்ட்ல டிஸ்டர்ப் ஆயிட்டே இருக்கு. ஏன் இப்படிப் பண்றாங்க.. விச்சுவாவது.. கிச்சுவாவது.. இந்த வாரம் பஞ்சாயத்துல இதைக் கூட்டுவோம்” என்று பூர்ணிமா சொல்வதை ஒருவேளை கமல் கேட்டுக் கொண்டிருந்தால் உடனே மெடிக்கல் லீவிற்கு அப்ளை செய்திருப்பார்.
கமல் பிறந்தநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு தயாராகச் சொல்லி பிக் பாஸ் அறிவிப்பு செய்தார். (அய்யா. நீங்க இங்கதான் இருக்கீங்களா.. ரொம்ப நேரமா ஆளையே காணோம்!). கமல் நடித்த திரைப்படங்களில் வந்த பாத்திரங்களைப் போல மக்கள் வேடமணிந்து தயாராகிக் கொண்டிருக்க, நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமலும் மணிரத்னமும் இணையும் திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ காண்பிக்கப்பட்டது.
அந்த வீடியோ மிரட்டலான காட்சிகளுடன் இருந்ததால் தங்களின் மகிழ்ச்சியை அனைவரும் வெளிப்படுத்தி கமலிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்கள். ஆனால் வீட்டில் நடந்த சண்டையோடு ஒப்பிடும் போது படத்தில் வந்த ஆக்ஷன் காட்சிகள் குறைவுதான். (அன்பறிவ் மாஸ்டர்ஸ். இங்க வந்து கத்துக்கங்க!) பிறகு பிரியாணி விருந்து வரவே, தங்களின் அத்தனை விரோதங்களையும் மறந்து விட்டு ‘சாமி.. சோறு போடுது..’ என்று அதை நோக்கி கோரஸாக ஓடினார்கள்.
கமல் பிறந்தநாள் வந்தது ஒரு நல்ல விஷயம். அடுத்த எபிசோடாவது சண்டை சச்சரவு இல்லாமல் பொழுதுபோக்கு நகைச்சுவையோடு அமைந்தால் நம்முடைய காதுகள் தப்பிக்கும். ஒருவேளை Yakuza போல இவர்கள் மோதினால் மீண்டும் ரணகளம்தான். (Yakuzaன்னா சப்பான் மொழில கேங்க்ஸ்டர்ன்னு சொன்னாவ!)
+ There are no comments
Add yours