ஷாப்பிங்கில் நடந்த குளறுபடி
ஷாப்பிங் செய்ய வேண்டிய நேரம். இந்த விஷயத்திலும் அரசியல் கொடி கட்டிப் பறந்தது. இதில் விசித்திரா ஆடிய கேம் மிக கொடுமையான உத்தி. உணவு விஷயம் என்பது பொதுவானது. அனைவரையும் பாதிக்கக் கூடியது அதில் அவர் விளையாடியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ‘கேப்டனுடன் சின்ன வீட்டில் உள்ள ஒருவர் செல்ல வேண்டும்’ என்று திறமையாக பற்ற வைத்தார் பிக் பாஸ். அது நன்றாக வேலை செய்தது. “நான் வருகிறேன்.. என்னால் வேகமாக ஓடி பொருட்களை எடுக்க முடியும்” என்று மணி கையை தூக்கியது நியாயமான விஷயம். பெரிய வீடும் இதை ஒப்புக் கொண்டது.
ஆனால் இதன் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்ப முடிவு செய்த விசித்ரா “அர்ச்சனா போகட்டும்” என்று சொல்லி ஆட்டத்தைக் கலைத்தார். இதே அர்ச்சனாவைத்தான் டாஸ்க் செல்ல விடாதவாறு இவர்கள் முன்பு போங்காட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அர்ச்சனா மீது விசித்ராவிற்கு பாசம் கொண்டு பொங்குவது நிச்சயம் சுயநலம். “அவளோட டார்ச்சர் தாங்கல” என்று அர்ச்சனா குறித்து முன்பு புலம்பிய விசித்ராவிற்கு இப்போது அர்ச்சனா செல்ல மகளாக மாறி இருப்பது விசித்திரம்.
“சமையல் பற்றி தெரிஞ்சவங்களா அனுப்புங்க..” என்று மாயா கதறினாலும் விசித்ரா அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எனவே சண்டி மாடுகளால் அமைந்த வண்டி போல மாயாவும் அர்ச்சனாவும் ஷாப்பிங் சென்றதால், ஆளுக்கு ஒரு திசையில் ஓடி வண்டி கவிழ்ந்து விழுந்தது. இந்தக் குழப்பங்களை நமட்டுச் சிரிப்புடன் விசித்ரா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு அப்பட்டமான ‘மாமியார் டைப்’ காட்சி.
பெரிய வீடு எதிர்பார்த்ததைப் போலவே ஷாப்பிங் சமாச்சாரம் சொதப்பி விட்டது. வெங்காயத்தை அள்ளிக் கொண்டு வந்தவர்கள், சமையலின் ஆதாரமான எண்ணைய்யை எடுக்காமல் வந்து விட்டார்கள். “நாங்கள் அப்பவே சொன்னோம்” என்று அர்ச்சனாவின் மீது பழி விழுந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், மாயாவிற்கும் சமையல் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் திறமை இல்லை. இதில் ஜோவிகா மட்டும்தான் எக்ஸ்பர்ட்டாம். என்றாலும் இந்த விஷயத்தை அப்படியே அமுக்கி விட பெரிய வீடு முயற்சித்தது.
அதுவரை ஆவேசமாக போராடிக் கொண்டிருந்த அர்ச்சனா, சட்டென்று ரிவர்ஸ் கியர் போட்டு “அவ்வளவுதான். என்னை வெச்சு செய்யப் போறாங்க” என்று தனிமையில் அனத்திக் கொண்டிருந்தார். “இருக்கிறத வெச்சு மேனேஜ் பண்ணுங்க” என்று புரொவிஷன் பிரச்சினையை அசால்ட்டாக எதிர்கொண்டார் விசித்ரா.
+ There are no comments
Add yours