‘டேட்டிங் ஆப்’ தொடங்குவதற்கான முயற்சியில் இருக்கும் ரியாவும் (நித்யா மேனன்) உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் பினாயும் (ஷரப் யு தீ) காதல் திருமணம் செய்துகொண்டு, எர்ணாகுளத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இருவருக்கும் இடையிலான சிறு சிறு வாக்குவாதங்கள், கைகலப்பாக மாற, ஒரு கட்டத்தில் கையில் கத்தி எடுக்கிறார் ரியா.
இந்த விவகாரத்திற்குக் கட்ட பஞ்சாயத்து செய்து வைக்க பிஜாயின் பெற்றோரான சாண்டிச்சனும் (ரெஞ்சி பனிக்கர்) அனியம்மாவும் (மால பார்வதி), ரியாவின் பெற்றோர்களான குரியச்சனையும் (அசோகன்) லிசாம்மாவையும் (சாந்தி கிருஷ்ணா) அழைத்துக் கொண்டு, அவர்களின் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள். அதற்குப் பிறகு நடக்கும் களேபரங்கள், இரண்டு வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று தம்பதிகளின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை ரகளையாகச் சொல்கிறது இந்த ‘மாஸ்டர் பீஸ்’.
நித்யா மேனன் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து, தேவையான இடத்தில் முதிர்ச்சியான நடிப்பையும் ரகளையான இடங்களிலும் ‘ஓவர் ஆக்டிங்’கான காமெடி நடிப்பையும் வழங்கி எல்லா காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். ஷரப் யு தீனின் நடிப்பில் குறைவில்லை என்றாலும், இன்னுமே இறங்கி விளையாடியிருக்கலாம் சாரே!
இவர்களைத் தாண்டி நம்மைக் கவர்வது மால பார்வதிதான். வளவளவெனப் பேசிக்கொண்டே திரையோடு சேர்த்து, நம் காதுகளையும் அடைத்து சில இடங்களில் சோதிக்கிறார். ஆனால், அக்கதாபாத்திரத்திற்கான குணாதிசயத்தைச் சரியாகக் கடத்தியிருக்கிறார். சீரியஸாக அவர் செய்யும் காமெடிகளில் ரசிக்க வைக்கிறார்.
+ There are no comments
Add yours