பிரதீப்பின் எலிமேனஷன் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அன்னபாரதியும் வெளியேறியிருக்கிறார்.
வானாளவிய அதிகாரம் உள்ள கேப்டனாக தன்னை கருதிக் கொண்டு செயல்பட்ட பூர்ணிமாவை காட்டமாக விமர்சித்தார் கமல். ‘இனிமேல் நாமினேஷன் பற்றி பொதுவில் விவாதிக்கக்கூடாது. அந்த ஆப்ஷனை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்’ என்று கமல் அதிரடியாக அறிவித்தது முக்கியமான மாற்றம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
இந்த எபிசோடில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் பிரதீப் எலிமினேஷன் பற்றி சுருக்கமாக அலசி விடுவோம். ஏனெனில் இந்த எலிமினேஷன் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. பிரதீப் வெளியேற்றப்பட்டது, அவரது ஆட்டத்தை மிகவும் விரும்பியவர்களைத் தவிர பொதுவான பார்வையாளர்களுக்கும் சோ்த்தே நிச்சயம் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கும். அவரது துடுக்குத்தனமான உரையாடல்களை தவிர்த்துப் பார்த்தால், இந்த ஆட்டத்தை சுவாரசியமாக்கியதில் பிரதீப்பின் பங்கு முன்னணியில் இருந்தது. ஒரு நல்ல ஆட்டக்காரர் விலகுவது பார்வையாளர்களுக்கு நிச்சயம் வருத்தத்தைத்தான் தரும். என்றாலும் ஏன் இது நிகழ்ந்தது?
‘பிரதீப் மட்டும்தான் தவறு செய்தாரா… மற்றவர்கள், குறிப்பாக பூர்ணிமா, மாயா தவறே செய்யவில்லையா?.. என்பது ஒரு கேள்வி. ஒருவர் மீது குற்றம் சாட்டப்படும் போது, அவரது தரப்பினர், ‘நான் ஒன்று கேட்கிறேன். எதிர்க்கட்சிக்காரர்கள் மட்டும் தவறு செய்யாதவர்களா?’ என்று விதாண்டாவாதமாக கேட்பது ஒரு மரபாகவே இங்கு ஆகி விட்டது. மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி சொந்தத் தவறுகளை நியாயப்படுத்துவதும் அல்லது மூடி மறைக்க முயல்வதும் மோசமான மரபு.
பூர்ணிமா, மாயா உள்ளிட்ட சில நபர்களும் பிழை செய்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை. என்றாலும் இதில் மிக அதிகமான சதவிகிதத்தை செய்பவர்தான் அதிக உறுத்தலுடன் வெளியே தெரிவார். பூர்ணிமாவும் மாயாவும் இணைந்து பிரதீப்பை திட்டமிட்டு வெளியே அனுப்பி விட்டார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு என்றால், பிரதீப்பும் அதே மாதிரியான ஆட்டத்தைத்தான் உக்கிரமாகவும் வெளிப்படையாகவும் ‘ஸ்ட்ராட்டஜி’ என்கிற பெயரில் ஆடிக்கொண்டிருந்தார். ‘எல்லோரையும் காலி பண்ணிடுவேன்’ என்பது அவரது நிரந்தர கொள்கையாக இருந்தது. என்னவொன்று பிரதீப் அப்பட்டமான வெளிப்படைத்தனத்துடன் செய்த விஷயத்தை பூர்ணிமா, மாயா சற்று அடக்கி வாசித்து செய்தார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
பிரதீப் நிகழ்த்திய ‘சைக்கலாஜிக்கல் அட்டாக்’
‘ஆட்டத்தை சுவாரசியப்படுத்துகிறேன் பேர்வழி’ என்று மற்றவர்களின் மிக அந்தரங்கமான உணர்வுகளைக் கூட பிரதீப் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டே இருந்தார். மிக மிக மலினமான கமென்ட்களை அடித்துக் கொண்டே இருந்தார். அது பற்றிய துளி கரிசனமோ வருத்தமோ அவரிடமில்லை. ‘கேமிற்காக எதையுமே செய்வேன்’ என்பதை வெளிப்படையாக அறிவித்து விளையாடியது மட்டுமே அவரிடம் இருந்த குறைந்தபட்ச நேர்மை. மற்றபடி இடுப்பின் கீழ் இறங்கி அடித்து ஒருவர் ஆடுவதை நுண்ணுணர்வு உள்ள எவருமே ரசிக்க மாட்டார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரதீப் மிக நல்லவராக இருக்கலாம். ஆனால் இந்த ஆட்டத்தில் அவரது நடவடிக்கை எவ்வாறு இருந்தது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
‘பெண்கள் பாதுகாப்பு’ என்கிற பழியை சுமத்தி பிரதீப்பை வெளியே அனுப்பி இருக்க வேண்டாம் என்பது இன்னொரு கருத்து. ‘பிரதீப் பொண்ணோட கைய புடிச்சு இழுத்துட்டாரு’ என்கிற பஞ்சாயத்து மாதிரி இதைப் புரிந்து கொள்ள தேவையில்லை. பிரதீப் தந்த உளவியல் ரீதியான அழுத்தம் மற்றும் வன்முறை என்று இதைச் சொல்லலாம். இவை கேமராக்களில் பதிவாகும் என்பதைப் பற்றி பிரதீப் கவலையே கொள்ளவில்லை.
‘பிரதீப் இருக்கும் இடத்தில் தங்க எனக்கு அச்சமாக இருக்கிறது’ என்கிற புகாரை ஆரம்ப வாரத்திலேயே மாயா வைத்தார். அவரின் அம்மாவைப் பற்றி நான் தவறாக பேசவில்லை என்றாலும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்’ என்பது மாயா சொன்ன காரணம். ஆனால் பிக் பாஸ் டீம் மாயாவின் பாதுகாப்பு குறித்து உறுதி தந்து அவரை உள்ளே அனுப்பியது. இப்போதும் அதே பாதுகாப்பு உறுதியை பிக் பாஸ் நிர்வாகம் தந்திருக்கலாமே என்பது தவிர்க்க முடியாத கேள்வி.
பிரதீப் நிகழ்த்துவது உடல் ரீதியான தாக்குதல் அல்ல. ‘சைக்கலாஜிக்கல் அட்டாக்’. இதுவும் பிக் பாஸ் ஆட்டத்தின் ஒரு உத்திதான் என்றாலும் எல்லை மீறிச் செல்லும் போது அது நிச்சயம் மற்றவர்களின் உணர்வுகளைப் பாதிக்கும். கேமராக்களின் கண்காணிப்பிற்கு இடையேயும் இதை பிரதீப் அலட்சியமாகத் தொடர்ந்தபோது ஒரு கட்டத்தில் அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடி நிர்வாகத்திற்கு ஏற்படுகிறது. மேலும், ‘நாங்கள் பாதுகாப்பாக இல்லை’ என்பதை பெண்கள் பொதுவில் உரிமைக் குரலாக எழுப்பும்போதும் அது நிச்சயம் பரிசீலீக்கப்பட்டாக வேண்டும். பாவனைகள் கலந்திருந்தாலும் இதுவொரு தீவிரமான பிரச்சினை.
பிரதீப் எலிமினேஷனுக்கு அவரேதான் முக்கிய காரணம்
பிரதீப்பை வெளியேற்ற வேண்டும் என்கிற அஜெண்டாவிற்காக வீட்டின் மெஜாரிட்டி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இதை ஒரு நாடகமாக நிகழ்த்தினார்கள் என்று சொல்வதற்கான முகாந்திரம் இல்லை. ஆண்களும் புகார் சொன்ன பட்டியலில் இருந்தார்கள். ஒருவேளை காமிராவில் சென்சார் செய்யப்பட்டது போக, நாம் பார்த்த காட்சிகளிலேயே பிரதீப்பின் ஒழுங்கீனங்கள் அப்பட்டடமாகப் பதிவாகியிருக்கின்றன. எனவே பாலியல் தொடர்பான சர்ச்சை என்று இதைப் புரிந்து கொள்வதை விடவும் பிரதீப்பின் அராஜகமான போக்கானது, பெண்கள் உட்பட வீட்டில் உள்ள பெரும்பான்மையானவர்களின் உணர்வுகளைப் பாதித்தது என்பதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு முக்கியமான எலிமினேஷனின் போதும், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமலின் தலை சமூகவலைத்தளங்களில் பயங்கரமாக உருட்டப்படுவது ஒரு தொடர் பழக்கம். அவர் இந்த கார்ப்பரேட் நிகழ்ச்சியின் ஒரு சிறிய அங்கம்தான். தன்னுடைய புகழ் மற்றும் திரை ஆளுமை காரணமாக விஸ்வரூபமாக அவர் தன்னை மேடையில் சித்தரித்துக் கொள்கிறார். முந்தைய எபிசோடுகளில் இதே கமல் பிரதீப்பின் ஆட்டத்தை நிறைய முறை பாராட்டி இருக்கிறார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிரதீப் மீது மற்றவர்கள் புகார் எழுப்பிய சமயங்களில் எல்லாம் ‘அதை எப்படி சரியாகப் புரிந்து கொள்வது’ என்று பிரதீப்பின் சார்பாகவும் அவர் பேசியிருக்கிறார். ‘எல்லோரையும் சாவடிச்சிடுவேன்’ என்று பிரதீப் இயல்பாக சொல்லிக் கொண்டிருந்தது தொடர்பாக கமல் அளித்த விளக்கத்தை நினைவுகூரலாம். ஆனால் அதே சமயத்தில் பிரதீப்பிற்கு பல முறை எச்சரிக்கையும் தந்திருக்கிறார். அதைப் பொருட்படுத்தாமல் பிரதீப் தொடர்ந்து ஆடியதும் “வெளியே போகச் சொன்னா கூட போயிடுவேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்” என்று மித மிஞ்சிய நம்பிக்கையில் பேசியதும் அவரது வெளியேற்றத்திற்கு காரணமாக ஆகிவிட்டது. பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு அவரேதான் முக்கிய காரணமாக விளங்கினார் என்கிற கசப்பான உண்மையை அவரது ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
ஒரு முக்கியமான ஆட்டக்காரரை வெளியே அனுப்ப எந்தவொரு கார்ப்பரேட் வணிகமும் அத்தனை எளிதில் ஒப்புக் கொள்ளாது. இது பிக் பாஸ் சீசன்களில் நாம் தொடர்ச்சியாக பார்த்து வரும் விஷயம். புகார் சொல்லி வரும் விஷயமும் கூட. ஆனால் ஒரு கட்டத்தில் இந்த அவப்பெயரை மாற்றுவதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்க அவர்கள் முடிவு செய்திருக்கலாம். விளைவு பிரதீப்பின் எலிமினேஷன். இது ஒரு நல்ல முடிவு. இதை இப்போதாவது தடுக்கவில்லையென்றால், வருங்கால சீசன்களில் பிரதீப்பை விடவும் உக்கிரமாக அடித்து இறங்கி ஆடும் ஆபத்தான போக்கு அதிகரித்து விடும்.
ஒரு ஆட்டத்தை அதற்குரிய விதிகளுடன் அடிப்படையான நாகரீகத்துடன் திறமையாக ஆடும் ஜென்டில்மேன் ஆட்டக்காரர்களே வரலாற்றில் எப்பொழுதும் நல்ல பெயருடன் பதிவாவார்கள். ஆனால் வெற்றி என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் இறங்கி அடித்து ஆடுவேன் என்று ஆடுவது நல்ல ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்பிற்கான அடையாளம் அல்ல. எப்படியோ பிரதீப் வெளியேறி விட்டார் அவரே சொன்னது போலவே இது ஒரு ‘சர்வைவல் கேம்’.
பூர்ணிமாவின் மோசமான ஸ்ட்ராட்டஜி
நாள் 35 -ன் நிகழ்வுகள். ‘புதிய பாதையில் நடப்பதற்கான முயற்சிகளை எடுக்கும் போதெல்லாம் நிச்சயம் யாராவது தடை சொல்வார்கள். நிறைய குறுக்கீடுகள் இருக்கும். ஆனால் முடிவு எடுத்தால்தான் அது பற்றி தெரியும். முடிவு எடுக்காமலேயே தயங்கிக் கொண்டு இருக்க முடியாது’ என்று கமல் பூடகமாகச் சொன்னது பொதுவான அறிவுரையா அல்லது பிரதீப் எலிமினேஷன் குறித்ததா என்பது ஆராய்ச்சிக்குரியது.
அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்த கமல்,புதிய வரவுகளான ‘வைல்ட் கார்ட் என்ட்ரி’களின் அனுபவம் குறித்து விசாரிக்க ஆரம்பித்தார். தங்களை ஒட்டுமொத்தமாக தூக்கி திட்டமிட்டு சின்ன வீட்டுக்கு அனுப்பியது குறித்த அதிருப்தி அவர்கள் அனைவருக்குமே இருக்கிறது. மிக மிக வெளிப்படையாக நிகழ்த்தப்பட்ட பூர்ணிமாவின் இந்த மோசமான உத்தி அப்போதே பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்தத் திட்டத்தை பூர்ணிமாவிற்கு முதலில் பரிந்துரைத்தவர் பிரதீப். பிறகு அனைவரையும் கலந்தாலோசித்து பூர்ணிமா செயல்படுத்தினார். ‘மத்தவங்களுக்கு சமைச்சுப் போடற பாக்கியம் கிடைத்தது” என்று கானா பாலா பாசிட்டிவ்வாக சொன்னார். “ஒரே வாரத்தில் பல உணர்ச்சிகளைப் பார்க்க முடிந்தது” என்றார், அன்னபாரதி. ஏதோ வந்த டூரில் தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்க முடியாதது போல, “வீட்டை முழுசா கூட சுத்திப் பார்க்க முடியல” என்கிற அதே பல்லவியையே இப்போதும் பாடினார் அர்ச்சனா.
எப்படியோ, புதியவர்களை சிறிது கூட ஆட விடாமல், வந்த உடனேயே சின்ன வீட்டுக்கு துரத்தியது பெரிய வீட்டின் ஒருவகையான ஸ்ட்ராட்டஜி என்றாலும் அது நியாயமான ஆட்டம் கிடையாது. மோசமான உத்தி. இது ஒரு வகையில் பிரதீப்பின் அதே பாணிதான். முன்பின் யோசிக்காமல் இதைச் செய்பவர்கள் பிரதீப்பைப் போலவே வெளியேறக்கூடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
வைல்டு கார்டு என்ட்ரிகள் தந்த பாகற்காய் அல்வா
“சரி. விருந்தோம்பலுக்கு பெயர் போனவர்கள் நாம். பெரிய வீட்டுக்கு ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்க வேண்டாமா?” என்று கமல் குறும்பாக கேட்டதும் ‘அச்சச்சோ…’ என்று பெரிய வீடு ஜாலியாக பதறியது. தன்னிடம் நன்றாக நடந்து கொண்டவர்களுக்கு இனிப்பும் மோசமாக நடந்து கொண்டவர்களுக்கு கசப்பான அல்வாவும் தர வேண்டும்’ என்கிற டாஸ்க், வைல்ட் கார்ட் என்ட்ரிகளுக்கு தரப்பட்டது.
இதில் விஷ்ணு இரண்டு லட்டுக்களை வாங்கியது குறித்து “இதெல்லாம் நியாயமே இல்லை” என்று பூர்ணிமாவும் மாயாவும் ஜாலியாக கமெண்ட் அடித்தனர். “முன்னாடி இனிமையா பேசிட்டு பின்பக்கம் அவங்களதான் நாமினேட் பண்ணனும்..என்று சொன்னவரே விஷ்ணு தான்” என்பது இவர்களின் புகார். எதிர்பார்த்தது போலவே கசப்பான அல்வா பூர்ணிமா மற்றும் மாயாவிற்கு அதிக அளவில் தரப்பட்டது.
மோசமான உத்தியுடன் ஆடுபவர்களின் பட்டியலில் பிரதீப் முன்னணியில் இருந்தார் என்றால் அடுத்த இரு இடங்களில் மாயா மற்றும் பூர்ணிமா இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. “நான் மூஞ்சிக்கு நேரா பேசிடுவேன். யாருக்கும் ஜிங்சக் போட மாட்டேன்” என்று தன் மீதான நகைச்சுவை கமெண்டை சீரியஸாக எதிர்த்தார் விஷ்ணு. கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் அர்ச்சனாவிற்கு சர்க்காஸ்டிக்கான ஊக்கத்தை அளித்தார் கமல்.
அண்டர் கவர் ஆபரேஷனில் அனுப்பப்பட்ட விசித்ரா தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சொல்லி ‘இதை முன்பே என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை’ என்று புகார் சொன்னதும் “அப்ப அடியாள் மாதிரி உங்களைப் பயன்படுத்திட்டாங்க போல” என்று ஒரு நகைச்சுவை குண்டூசியை பலமாகக் குத்தினார் கமல். விசித்ராவும் இந்த கேமை சுயமாக ஆடவில்லை என்பது இதன் மூலம் பதிவாகியிருக்கிறது.
“உங்களுக்கே தெரியும்.. உணவுப் பொருட்களை வீணாக்குவது எனக்கு பிடிக்காது” என்று சீரியசான குரலில் கமல் ஆரம்பிக்க, அடுத்த பஞ்சாயத்திற்கான விதையோ என்று பார்த்தால் “அந்த அல்வாவை எல்லாம் வேஸ்ட் பண்ணாம சாப்பிடுங்க” என்று காமெடி செய்துவிட்டு பிரேக்கில் சென்றார். அர்ச்சனா தனக்கு கசப்பு அல்வா தந்தது பற்றி அதிருப்தி கொண்ட பூர்ணிமா “உங்களுக்காக ரிஸ்க் எடுத்து வெளியே கூட்டிட்டு வந்து பிக் பாஸ் கிட்ட நான்தான் திட்டு வாங்கினேன். அது உங்களுக்கு தெரியுமா?” என்று முறையிட “அப்படியா.. ஸாரி” என்றார் அர்ச்சனா. இந்த சாதாரண ஆட்சேபமே, அர்ச்சனாவின் மனதை புண்படுத்தியதால் மீண்டும் தனது கண்ணீர் காவியத்தை உக்கிரமாக அவர் எழுத ஆரம்பிக்க மற்றவர்கள் வந்து சமாதானப்படுத்தினார்கள். அர்ச்சனாவை சமாதானப்படுத்துவதிலேயே பெரும்பாலான நேரம் போய்விடும் போலிருக்கிறது.
கசப்பு அல்வாவை சின்ன வீட்டார் ஒட்டு மொத்தமாக பெரிய வீட்டாருக்குத்தான் தருவார்கள் என்று பார்த்தால் சொந்த வீட்டில் இருந்த அர்ச்சனாவிற்கே சில அல்வாக்களை நியாயமான முறையில் தந்தார்கள். காரணம் அழுது கொண்டே இருக்கும் அவரை சமாளிப்பதே இவர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. இந்த வகையில் பெரிய வீட்டோடு ஒப்பிடும் போது, சின்ன வீட்டார் நியாயமாக நடந்து கொள்கிறார்கள்.
பூர்ணிமாவை காட்டமாக விமர்சித்த கமல்
பிரேக் முடிந்து திரும்பிய கமல் “சரி.. விட்ட இடத்தில் இருந்து தொடருவோம். இந்த வாரம் கேப்டன்சி எப்படி இருந்தது?” என்று விசாரிக்க ஆரம்பித்தார். சின்ன வீட்டில் இருந்தவர்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாக சில விஷயங்களை பூர்ணிமா செய்தார். ஆனால் இதை சபையில் சொல்லும் போது “அங்கு வயசானவங்க இருக்காங்க” என்று அவர் சொன்னது ஜாலியான சர்ச்சையாக ஆனது. “புதிய வரவுகளை ஒட்டுமொத்தமாக அந்த வீட்டில் போட்டால் தனியாகத் தெரிவாங்க” என்று பூர்ணிமா சொன்னது அப்பட்டமான சால்ஜாப்பு. இந்த மோசமான உத்தியை கமல் காட்டமாக கண்டித்தார். “பெரிய வீடு.. சின்ன வீடுன்னு என்று இரண்டு அணியாக இதைப் பிரிச்சுப் பார்த்தீர்களா என்று கமல் கேட்டது முக்கியமான கேள்வி.
பிறகு அதே கார்டுகளை மீண்டும் கொண்டு வந்து நேர்மையாக ஆடச் சொன்னார் கமல். “ஆரம்பிக்கலாமா?” என்று டெரரான குரலில் கமல் கேட்டதும் பூர்ணிமாவின் முகத்தில் இருள் படர்ந்தது. ‘அன்பு காட்ட மாட்டேன்… மதிக்க மாட்டேன்… நம்ப மாட்டேன்… ஆட்டம் முடிந்து விட்டது… என்பது போன்ற வரிசைகளில் விசித்ரா, விஷ்ணு, தினேஷ், சுரேஷ் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார் பூர்ணிமா. “எனக்கு வெளியே போகணும்னும் தோணுது… வேண்டாம்ன்னும்… தோணுது. தங்கச்சி விருப்பப்பட்டால் வெளியே போறேன்” என்று சென்டிமென்ட் படத்தின் வசனம் மாதிரி குழப்பமான பதிலை சொன்னார் சுரேஷ்.
“பிக் பாஸ் எந்த டாஸ்க்கையும் சும்மா தர மாட்டார். எனவே அதை விளையாட்டாக எடுத்துக்காதீங்க. அந்தக் குறிப்புகளை அலட்சியப்படுத்திட்டு உங்க இஷ்டத்துக்கு ஆடாதீங்க. இரண்டு முறை கேப்டனாக இருந்ததால் மமதை வந்து விட்டதா? உங்களை பாராட்டி தந்த நட்சத்திரம் எரி நட்சத்திரமாக ஆகி விட்டது. அதிகாரம் என்பது துஷ்பிரயோகமாக ஆகிவிடக்கூடாது” என்று காட்டமாக பூர்ணிமாவிடம் சொன்ன கமல் “எந்தத் தலைமைக்கும் இது பொருந்தும்” என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சொன்னார். இது போன்ற அரசியல் சர்காஸ்டிக் நகைச்சுவைகளை கமல் திறமையாக நடித்துக் காட்டுவதை நாம் பல சீசன்களில் பார்த்திருக்கிறோம். இது அளவோடு இருந்தால் ரசிக்க முடியும். அது மட்டுமல்லாமல் கமலுக்கே கூட இது பூமராங்காக ஆகி விடலாம்.
அர்ச்சனாவை காற்றாட வெளியே வாக்கிங் அழைத்துச் சென்ற விவகாரம் விசாரணைக்கு வந்தது. பூர்ணிமா அதை மனிதாபிமான நோக்கில் செய்திருந்தாலும், இதை பிக் பாஸ் முந்திரிக்கொட்டைத்தனமாகத்தான் பார்த்தார். “அனைத்து துறை சம்பந்தப்பட்ட மருத்துவர்களும் இங்கே இருக்கிறார்கள். உங்களுக்கு பாதிப்பு வர நாங்கள் விடமாட்டோம்” என்று மருத்துவ பாதுகாப்பு சார்ந்த உறுதியை அளித்தார் கமல். எனில் அர்ச்சனாவின் ரியாக்ஷன் மிகையானதோ என்று தோன்றுகிறது. “உங்க நோக்கம் நல்லதா இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் கிட்ட நீங்க முன்னாடியே அனுமதி வாங்கி இருக்கணும்” என்று பூர்ணிமாவுக்கு கமல் குட்டு வைத்தது சரியான விஷயம்.பெரிய வீட்டிற்குள் எகிறிக் குதித்த விசித்ராவையும் விமர்சித்த கமல் “நல்ல வேளை தடுக்கி விழாமல் இருந்தீங்க.. ஆட்டத்தை சுவாரசியமாக்குகிறேன் என்கிற பெயரில் விதிமீறலை செய்யாதீர்கள்” என்று எச்சரித்தார்.
பூர்ணிமா குழுவுடன் விசித்ராவிற்கு ஏற்பட்ட உரசல்
கமலின் தலை மறைந்ததும் விசித்ராவிற்கும் பூர்ணிமா மற்றும் மாயா குழுவிற்கும் இடையே உரசல் நடந்தது. “நீங்க தாண்டிக் குடித்து வந்தப்ப உங்களை சப்போர்ட் செய்தோம். நாமினேஷன் பண்ணாம இருந்தோம். ஸ்டார் வாங்கிக் கொடுத்தோம். இவ்வளவு செய்தும் தேவையானதை எல்லாம் வாங்கிக் கொண்டு எங்கள் மீது பொதுவில் குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். நீங்கள் வேண்டாம் என்று சொல்லி இருந்தால் வேற ஆளை வைத்து பண்ணி இருப்போம். இனிமேதான் இருக்கு கச்சேரி” என்று விசித்ராவிற்கு அவர்கள் எச்சரிக்கை செய்ய “நீங்கள் இதை முன்னாடியே எங்கிட்ட டிஸ்கஸ் செஞ்சி இருக்கணும்” என்கிற டிஃபன்ஸ் ஆட்டத்தை ஆடினார் விசித்ரா. (நமக்கே இவங்க பாயாசத்தைப் போட்டுறுவாங்களோ?!).
‘Dear Sir.. as am suffering from fever, I request you to grant me one day leave. எங்களது குடும்பம் சென்சிடிவ்வானது. நான் இப்படி நடந்து கொள்வதால் கெட்ட பெயர் வரலாம். இங்கு அழுத்தம் தாங்கவில்லை. எனவே வெளியே அனுப்பி விடுங்கள்.. என்று மீண்டும் கேமரா முன்னால் மன்றாடிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. இவ்வளவு சென்சிட்டிவ்வாக இருப்பவர், இப்படியொரு ரத்த பூமியில் எப்படி துணிச்சலாக வந்து விட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் அர்ச்சனாவின் மீது அனுதாபம்தான் தோன்றுகிறது.
“நீங்க என் மேல எல்லாம் நம்பிக்கை வைக்கல. உங்க டீமுக்குள் மட்டும்தான் நம்பிக்கை வச்சுக்கிட்டீங்க. வைல்ட் கார்ட் என்ட்ரியோட என்னையும் சேர்த்து அனுப்புறது பிரதீப்போட ஸ்ட்ராட்டஜி. அப்படித்தான் அவன் சொன்னான்” என்று விசித்திரா மல்லுக்கட்ட, “அப்படி இல்லை” என்று பூர்ணிமா மறுத்தது அபாண்டம். இதற்கான விதையை காலையிலேயே போட்டவர் பிரதீப்தான்.
நாமினேஷன் விவாதம் குறித்து கமல் சொன்ன அதிரடி மாற்றம்
பிரேக் முடிந்து வந்த கமல் “நாமினேஷன் வரும் போதெல்லாம் சில நட்புகளும் கூடவே திடீரென்று உருவாகிவிடும்” என்கிற வீட்டின் பழக்கத்தை கிண்டல் செய்தார். இது எப்பொழுதுமே பிக் பாஸ் வீட்டில் நடப்பதுதான். “உங்களுக்கு யார் ஆலோசகர்?” என்று பூர்ணிமாவை நோக்கி கமல் குறும்பாக கேட்க “அப்படி எல்லாம் யாரும் இல்லை. சேர்ந்துதான் முடிவெடுப்போம்” என்று முழு டைனோசரை ஆழாக்கு சோற்றில் அப்படியே ‘மாயமாக’ மறைக்க முயன்றார் பூர்ணிமா. “மத்தவங்க என்னென்னமோ சொன்னாங்க.. ஆனால் நான் என் விருப்பம் போலத்தான் நாமினேட் பண்ண முடியும்ன்னு கிளியரா சொல்லிட்டேன்” என்று கானா பாலா சொன்ன பதில்தான் தெளிவாக இருந்தது. மற்றவர்கள் இதே கேள்விக்கு ஏதோதோ சொல்லி மழுப்பினார்கள்.
‘நாமினேஷன் பற்றி பொதுவில் விவாதிக்கலாம்’ என்பது இந்த சீசனில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம். “சுவாரஸ்யத்துக்காக கொண்டு வந்த இந்த விஷயத்தை நீங்க பாழாக்கிட்டீங்க.. அதில் இருந்த சுவாரசியத்தை பறிச்சிட்டிங்க.. இதை வெறும் நம்பர் ஆட்டமா மாற்றி விட்டீர்கள். இதுதான் முடிவு என்று முன்னாடியே தெரிஞ்சா அதில் என்ன சுவாரஸ்யம் நிகழும்… உங்களை நம்பிக் கொடுத்த இந்த உரிமையை தவற விட்டு விட்டீர்கள். எனவே இந்த ஆப்ஷன் திருப்பி எடுத்துக் கொள்ளப்படுகிறது” என்கிற அதிர்ச்சியான தகவலை சொன்னார் கமல். இதன் பொருள் ‘இனிமேல் நாமினேஷன் பற்றி பொதுவில் யாரும் விவாதிக்ககூடாது’ என்பதுதான். இதே விஷயம், இந்தக் கட்டுரைத் தொடரில் முன்பே குறிப்பிடப்பட்டிருந்ததை நண்பர்கள் நினைவில் வைத்திருக்கலாம். அதே கருத்தை பிக் பாஸ் நிர்வாகமும் கவனத்தில் கொண்டது பாராட்டத்தக்கது.
அன்னபாரதி வெளியேறினார்
“ஓகே .. எவிக்ஷன் விஷயத்திற்கு வருவோம். இதை ரொம்ப இழுக்க வேண்டாம். நீங்க நாமினேஷன்ல செஞ்சது மாதிரியே போர் அடிக்க வைக்க நான் விரும்பல. இந்த முறை யாரையும் சேவ் பண்ண விரும்பல. நேரடியா எவிக்ஷனுக்கு போயிடுவோம்” என்று சொன்ன கமல், கார்டை நீட்ட, மக்கள் அதைப் பதட்டத்துடன் பார்க்க, அன்னபாரதியின் பெயர் இருந்தது. வந்த ஒரே வாரத்தில் வெளியே செல்வது அவருக்கு மட்டும் இல்லாமல் பார்வையாளர்களுக்கும் சிறிய அதிர்ச்சியை தந்திருக்கும்.
ஆனால் கமலே பின்பு குறிப்பிட்டது போல வைல்டு கார்டு என்ட்ரியில் வருபவர்கள், ஆட்டக்காரர்களைப் பற்றிய ஒரு ஐடியாவுடன் உள்ளே வரும் வசதி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வந்த உடனேயே அவர்கள் செயலில் இறங்க வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் ஆரம்பத்தில் இருந்தே தினேஷ் சரியாக ஆடி வருகிறார். “தீ எரியுதுன்னு பயர் இன்ஜினை கூப்பிட்டா… அவங்க வந்து நெருப்பு எப்படி எரியுதுன்னு வேடிக்கை பார்த்தால் எப்படி? உடனடி ஆக்சன்ல இறங்க வேண்டாமா?” என்கிற உதாரணத்தை அன்ன பாரதிக்கு கமல் சொல்லியது சரியானது. இப்படி வேகமாகவும் ஓடச் சொல்லி விட்டு அதில் தவறை ஏற்படுத்த வைத்து ‘பிறகு ஏன் அப்படி ஓடினீங்க?’ என்று அவரையே குற்றம் சுமத்துவதும் பிக் பாஸ் ஸ்டைல்களில் ஒன்று. ஆட்டக்காரர்கள்தான் சூதானமாக ஆட வேண்டும்.
தன்னிடம் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் நாணயத்தை சுரேஷிற்கு பாசமாக பரிசளித்தார் அன்ன பாரதி. இப்படி வெளியே செல்பவர்கள் ஒவ்வொருவரிடமும் அழுதோ, சீன் போட்டோ, அல்லது உண்மையான பாசத்துடன் நடந்து கொண்டோ நாணயங்களைப் பெற்று விடுகிறார் சுரேஷ். இப்படியே பணக்காரர் ஆகிவிடுவார் போலிருக்கிறது. சுரேஷின் கமெண்ட்டுகளும் ஒரு வகையில் பிரதீப்பின் கமெண்ட்டுகளைப் போலவே மிகையானது. எல்லை மீறுவது. ஆனால் அது சுட்டிக்காட்டப்படும் போது சுரேஷ் பாவனையாக அடக்கி வாசித்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். மிதமிஞ்சிய நம்பிக்கை மற்றும் அலட்சியம் காரணமாக பிரதீப் அதை செய்யாமல் வெளியேற்றப்பட்டார்.
‘எனது நாடக வாழ்க்கை’ – அவ்வை சண்முகம்
அடுத்ததாக புத்தகப் பரிந்துரைக்கு வந்த கமல், இந்த வாரம் அறிமுகப்படுத்திய நூல், ‘எனது நாடக வாழ்க்கை’ என்கிற தலைப்பில் அவ்வை சண்முகம் எழுதிய நாடக அனுபவங்களைக் கொண்ட புத்தகம். “தேசபக்தியை நாடகங்களின் மூலமாக விதைத்தவர்கள். சினிமாவிற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்கள். நான் படித்த பள்ளி அது. இதே பள்ளியில் இருந்து வந்தவர்தான் இயக்குநர் ஸ்ரீதர். சண்முகம் அண்ணாச்சி ஔவை வேடம் பூண்டதை அருகிலிருந்து பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து உருவானதுதான் அவ்வை சண்முகி திரைப்படம்” என்று தனது நாடக ஆசான் சண்முகம் அண்ணாச்சி பற்றி பெருமையுடன் சிலாகித்தார் கமல். தனது குருமார்களை ஒவ்வொரு மேடையிலும் கமல் நினைவு கூர்வது ஒரு நல்ல பழக்கம். ஒரு கலைஞன் முன்னேறுவதற்கு குரு பக்தி மிக மிக அவசியமானது.
மேடைக்கு வந்த அன்ன பாரதியிடம் “எங்க தப்பா போச்சு?” என்று சிரித்துக் கொண்டே கமல் விசாரிக்க, “நான் மேடைகளில் ஆவேசமாக பேசினாலும் இயல்பில் மிக மிருதுவான பெண். எனக்கு இந்த வீடு பொருந்தவில்லை என்றாலும் காசு தந்தாலும் கூட கிடைக்காத அனுபவத்தை இந்த வீடு தந்தது. ஒரே வாரத்தில் அனைத்து உணர்ச்சிகளையும் பார்த்து விட்டேன்” என்று நெகிழ்ந்து பேசிய அன்னபாரதியை வாழ்த்தி விடை தந்தார் கமல்.
மேடையில் இருந்து கிளம்ப முயன்ற கமலிடம் “சார்… ஹாப்பி பர்த்டே சார் என்று வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கோரஸாக கத்தியது, பிறந்தநாள் வாழ்த்து என்பதைத் தாண்டி ‘பிரியாணி சார்’.. என்று நினைவூட்டியதைப் போல இருந்தது. பிக் பாஸும் உணர்வுபூர்வமாக கமலுக்கு வாழ்த்து சொல்லி கமலின் பிறந்தநாளை ஒட்டி ரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்வதாக சொன்னது நல்ல உதாரணம். இந்த விதை கமல் பல வருடங்களுக்கு முன்பே போட்டது. ரசிகர் மன்ற கொண்டாட்டங்களை நல்வழிப்படுத்தியது கமலின் நல்ல முயற்சிகளில் ஒன்று.
“வாரன் பஃபே சொல்லுவார்… நீ யார் மீது அன்பு செலுத்தினாயோ பல வருடங்கள் கழித்தும் அவர்கள் அதே அன்பை உங்களுக்கு செலுத்தினால் அது ஒரு நிறைவான வாழ்க்கை என்று.. அந்த வகையில் என்னுடைய வாழ்க்கை நிறைவானது. நான் உங்களுக்குத் தந்த அன்பை பன்மடங்காக திருப்பித் தந்து கொண்டிருக்கிறீர்கள் அதற்காக நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பார்வையாளர்களிடம் பேசிய கமல், அத்துடன் அரங்கில் இருந்து விடை பெற்றுக் கொண்டார்.
வீட்டினுள் மாறும் கூட்டணிகள், உத்திகள்…
சபையில் நடந்த உரசல் காரணமாக பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே விலகல் ஏற்பட்டிருக்கிறது. ‘அது ஒரு ஜோக்’ என்று பூர்ணிமா சொன்னாலும், விஷ்ணு ஏற்றுக் கொள்ளவில்லை “என்னைப் பார்த்தாலே ஜொ்க் ஆகி விலகிப் போயிடறாரு” என்று அக்ஷயாவிடம் பிறகு அனத்திக் கொண்டிருந்தார் பூர்ணிமா. நாமினேஷன் பற்றி இனிமேல் பொதுவில் பேசக்கூடாது என்று ஒவ்வொருவரும் உறுதி பூண்டு கொண்டிருந்தார்கள். இதில் பிறழாமல் இருப்பார்களா என்று பார்க்க வேண்டும்.
பிரதீப்பின் எலிமினேஷன், நிக்சனை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படையாகவே காட்டிக் கொண்டிருந்தார். இதன் மூலம் பிரதீப் ரசிகர்களின் அதிருப்தியை அவர் சம்பாதிக்கக்கூடும். வந்த புதிதில், ஓர் அடித்தட்டு இளைஞன் முன்னேறி வரவேண்டும் என்கிற கரிசனம் பார்வையாளர்களுக்கு நிக்சனின் மீது இருந்தது. ஆனால் ஐஷூவையே அவர் பின்தொடர்வது ரசிக்கத் தக்கத்தாக இல்லை. இந்தப் போக்கை அவர் மாற்றிக் கொள்ளாவிடில் நிக்சன் வெளியேறுவதும் விரைவில் நிகழக்கூடும்.
“சில பிரச்சினைகள் அவனிடம் இருந்தாலும், இந்த வீட்டில் பிரதீப்பிடம் மட்டும்தான் என்னால் நன்றாக பேச முடிந்தது. அவனை நான் வெறுக்கவில்லை” என்று இன்னொரு பக்கம் ஸ்கோர் செய்து கொண்டிருந்தார் விசித்ரா. அவர் உண்மையாகவே இதைச் சொல்லி இருக்கலாம் அல்லது பிரதீப் ரசிகர்களின் பிரியத்தை சம்பாதிப்பதற்கான உத்தியாகவும் இருக்கலாம்.
பிரதீப்பின் எலிமினேஷன் ஒரு முக்கியமான வெற்றிடத்தை வீட்டில் ஏற்படுத்தியிருந்தாலும் இதர ஆட்டக்காரர்கள் எவ்வாறு இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக ஆக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ‘எல்லை மீறினால் தொல்லை வந்து சேரும்’ என்கிற ஆதாரமான விதியை நினைவில் வைத்துக் கொண்டு ஆடுவது நல்லது.
+ There are no comments
Add yours