மும்பை: சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நடிகை ராஷ்மிகாவின் ‘டீப் ஃபேக்’ (Deepfake) வீடியோவுக்கு நடிகர் அமிதாப் பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி எதிரொலியாக சமீபகாலமாக டிஜிட்டல் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் முகத்தை வைத்து கற்பனையில் பல ஏஐ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின்றனர். சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு தமன்னா ஆடிய ஒரு ரீல்ஸ் வீடியோவில் சிம்ரனின் முகத்தை வைத்து ‘டீப் ஃபேக்’ என்ற ஏஐ தொழில்நுட்பம் மூலம் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வீடியோ வைரலானதை அறிவோம். கடந்த சில நாட்களாக பல்வேறு தமிழ்ப் பாடல்கள் பிரதமர் மோடியின் குரலில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் ‘டீப் ஃபேக்’ மூலம் நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி, அதனை சிலர் வீடியோவாக வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் அமிதாப் பச்சன், ‘சட்டரீதியாக நடவடிக்க எடுக்கப்படக்கூடிய வலுவான வழக்கு இது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகாவை வைத்து உருவாக்கப்பட்ட இந்த டீப் ஃபேக் வீடியோவில் இருப்பவர், இன்ஸ்டா பிரபலமான ஸாரா படேல் என்னும் இந்திய – பிரிட்டிஷ் பெண் ஆவார். கடந்த அக்டோபர் 9 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதன் ஒரிஜினல் வீடியோவை ஸாரா பதிவேற்றம் செய்துள்ளார். இதிலிருந்தே ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours