கோவை: தமிழகத்தில் ஞாயிறு தோறும் நடைபெற்று வரும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை நடிகர் ரஞ்சித் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலைப் பொழுதில் ’ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்று நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து நடிகர் ரஞ்சித் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் ரஞ்சித் கூறியதாவது: சமீபகாலமாக ஒரு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு முக்கிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. நீங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் அம்மா, அப்பா யார்? பெண் குழந்தைகளை அரைகுறை ஆடைகளுடன் தெருவில் ஆடவிடுவது எல்லாம் பெரிய மனவேதனையாக இருக்கிறது. என்னிடம் அதிகாரம் இருந்தால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து விடுவேன்.
யார் மகனோ யாருடனோ ஆடுவது, யார் பெண்ணோ யாருடனும் ஆடலாம். அதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட். மன அழுத்தத்தைப் போக்க தெருவில் கூத்தடிப்பதுதான் இது. இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி எதிர்காலத்தில் அடுத்தகட்டத்துக்கு போகும். ஒரு தாய்லாந்து போலவோ, சிங்கப்பூரை போலவோ மாறிவிடும். அப்படி வரக்கூடாது. வரவும் விடமாட்டோம்” இவ்வாறு ரஞ்சித் கூறினார்.
ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours