விஜயகாந்த் மற்றும் விஜய்யின் பழக்கத்திற்கு அடித்தளம் போட்டதே விஜயகாந்த் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரின் நட்புதான். 1980-களில் இயக்குநராக வேண்டும் என எஸ்.ஏ.சியும் ஹீரோவாக வேண்டும் என விஜயகாந்தும் கோடம்பாக்கத்தில் உள்ள சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கியிருக்கிறார். அப்படி ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் சந்தித்து அதன் தொடர்ச்சியாக உருவானதுதான் ‘சட்டம் ஒரு இருட்டறை’.
இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் வெற்றியடைந்த படம். தனக்கு இப்படி ஒரு படத்தைக் கொடுத்த எஸ்.ஏ.சியை இன்று வரைக்கும் ‘எங்க டைரக்டர்’ என்றுதான் விஜயகாந்த் சொல்லுவாராம். அந்தளவுக்கு இவர்களின் நட்பு வளர்ந்தது. இவர்கள் இணைந்து 15 படங்களுக்கும் மேல் பணியாற்றியிருக்கிறார்கள். இவர்கள் கூட்டணியில் வந்த ‘வெற்றி’, ‘குடும்பம்’, ‘வசந்த ராகம்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ போன்ற படங்களிலேயே விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
1992-ம் ஆண்டு விஜய்யை ஹீரோவாக வைத்து எஸ்.ஏ.சி இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. படம் சரியில்லை என்பதைத் தாண்டி விஜய்யை ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் அப்போது இருந்தன. அதன் பிறகுதான், விஜய்யையும் விஜயகாந்தையும் வைத்து ஒரு படம் இயக்கினால், விஜய்யை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என யோசித்தார் எஸ்.ஏ.சி. ஆனால், அந்தச் சமயம் விஜயகாந்த் அவரது கரியரின் உச்சத்திலிருந்ததால், தனது மகனுக்காக ஒரு படம் பண்ண வேண்டும் என்பதைக் கேட்க எஸ்.ஏ.சி தயக்கமாகவே இருந்திருக்கிறார். நேரில் அவரைப் பார்த்துப் பேசுவதற்காக முதலில் போன் செய்து நேரம் கேட்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. போன் பேசிவிட்டு அவர் வீட்டில் இருந்து கிளம்புவதற்குள் எஸ்.ஏ.சியின் வீட்டிற்கே வந்துவிட்டாராம் விஜயகாந்த். “சார் நீங்க என் டைரக்டர். நான்தான் உங்களைப் பார்க்க வரணும்” எனச் சொல்லியிருக்கிறார். எஸ்.ஏ.சியும் விஷயத்தை விஜயகாந்திற்குச் சொல்ல, “நம்ம தம்பிக்குதானே சார். நிச்சயமாகப் பண்ணலாம்” என்றாராம். அதன் பிறகு உருவானதுதான் ‘செந்தூரபாண்டி’.
+ There are no comments
Add yours