திட்டமிட்டு காய் நகர்த்தி, மாயாவை அடுத்த வார கேப்டன் ஆக்கியது பிக் பாஸின் ராஜதந்திரமாக இருக்கலாம். ‘மணி அடித்ததா, இல்லையா’ என்கிற விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பிரதீப் தொடர்ந்து அடம்பிடிப்பது எரிச்சலைத் தருகிறது. ‘தன்னை எப்படியும் வெளியே அனுப்ப மாட்டார்கள்’ என்கிற அதீத தன்னம்பிக்கையாக இருக்கலாம். ‘கிரையிங் பேபி’ அர்ச்சனா, தனது அழுகைக் கொண்டாட்டத்தை மறுபடியும் திறமையாக ஆரம்பித்து பிக் பாஸிற்கே பீதியை ஏற்படுத்தினார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘நங்காய்… நிலாவின் தங்காய்’ என்கிற பாடல் திடீரென காலையில் ஒலித்ததும் தலையில் மாங்காய் விழுந்தது போல அனைவரும் பதறியடித்து எழுந்தார்கள். நேற்று சாப்பிட்ட கிச்சடி கனவிலும் வந்ததோ, என்னமோ.
ஒவ்வொருவரும் சக போட்டியாளரைப் பற்றிய ‘பன்ச் டயலாக்’ சொல்ல வேண்டும் என்கிற மார்னிங் டாஸ்க் தரப்பட்டது. இதில் பெரும்பாலும் பிரதீப்தான் டார்கெட் செய்யப்பட்டார். எனில் அவர் அங்கு அதிகம் வெறுக்கப்படுகிறவராக இருக்கிறார் என்பதை விடவும் தவிர்க்க முடியாத போட்டியாளராக இருக்கிறார் என்பதே உண்மை. ‘இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலை நாராயணா’ என்று பிரதீப்பைப் பற்றி சொல்லி இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார் விஷ்ணு.
‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ – கெத்து காட்டிய பிரதீப்
‘இந்த ஏரியா… அந்த ஏரியா… எல்லா ஏரியாலயும் ஐயா கில்லிடா’ என்று பூர்ணிமாவிற்கு ஐஸ் வைத்தார் விக்ரம். ‘நான் பத்து பேரை அடிச்சு டான் ஆகலை. நான் அடிச்ச பத்து பேரும் டான்தான்’ என்று பிரதீப்பைப் பற்றிப் புகழ்ந்து சொல்லி பெரிய வீட்டாரைக் காண்டாக்கினார் அர்ச்சனா. ‘தம்பி… இது ரத்தபூமி… குழாயைத் திறந்தா ரத்தம்தான் வரும்’ என்பதை அர்ச்சனாவிற்கு அட்வைஸாக சொன்னார் ஜோவிகா. ‘என் வாழ்க்கைல ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா’ என்பதைப் பிரதீப்பிற்குச் சொல்லி புல்லரிக்க வைத்தார் தினேஷ். ‘மோனே தினேஷா’ என்று அக்ஷயா சொன்னது நல்ல டைமிங். அது திட்டாக இருந்தாலும் பாராட்டாக இருந்தாலும் ஒரே மாதிரி ‘ஹெஹெஹிஹி’ என்று சிரித்து விட்டு பிரதீப் தனக்காகச் சொன்ன பன்ச் வசனம், ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?!’
ஷாப்பிங் செலவைக் கட்டுவதற்கான அடுத்த டாஸ்க். பெரிய வீட்டிலிருந்து மூன்று பேர் சென்றார்கள். சின்ன வீட்டிலிருந்து ஒருவர் மேற்பார்வைக்குச் செல்லலாம். ‘அய்யோ… இந்தப் பொண்ணு அழுது தீர்த்துடுமே’ என்று பயந்து மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ள ‘யாா் செல்லலாம்’ என்கிற வாக்கெடுப்பை திறமையாக நடத்தினார் தினேஷ். இறுதியில் அர்ச்சனா செல்வதென்று முடிவாகியது. (யம்மா… நீயே போம்மா!)
ஆனால் அது இரண்டு நிமிட போட்டி என்பதால் ஆரம்பிப்பதற்கு முன்பே முடிந்துவிட்டது. விஷ்ணு தடுமாறித் தோற்றார். ‘எனக்கொரு சான்ஸ் கொடுங்க பிக் பாஸ். கின்னஸ் சாதனையே படைப்பேன்’ என்று சுரேஷ் அடாவடியாக வேண்டுகோள் வைக்க, ‘அன்றாட வேலைகளைப் பாருங்க’ என்று அவரின் மூக்கை அசால்ட்டாக உடைத்து வெளியே அனுப்பினார் பிக் பாஸ்.
சிறைக்குச் சென்ற அக்ஷயா – பின்னால் சென்ற விக்ரம்
இந்தப் போட்டியில் பெரிய வீடு தோற்றதால் ஒருவர் ஜெயிலுக்குச் சென்றாக வேண்டும். இது தொடர்பான வாக்கெடுப்பில் பலியாடாக அக்ஷயாவின் பெயர் நிறைய முறை வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொண்ட பிரதீப், “ஜெயிலுக்குப் போக என்னை நீங்க தேர்வு செய்யல. அப்படின்னா என்னை மன்னிச்சிட்டீங்கன்னு அர்த்தம். கமல் சார் எபிசோடுல இதை நான் சொல்லுவேன்” என்று சந்தில் சிந்து பாடியது ஒரு நல்ல ராஜதந்திரம்.
‘அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை… இது யார் ஜெயிலுக்குப் போறதுன்ற வாக்கெடுப்பு மட்டுமே’ என்று மற்றவர்கள் ஆட்சேபித்தாலும், “அதை பிக் பாஸ் சொல்லட்டும். நான் சொல்றதைச் சொல்லுவேன்” என்று வழக்கம்போல் அழும்பு செய்தார் பிரதீப். “இந்தப் பிரச்னைக்கு நிக்சன்தான் காரணம் அவன்தான் ‘மணி அடிச்சது’ன்னு சொல்லி ஆரம்பிச்சு வைத்தான்” என்று குற்றம் சாட்டினார் பிரதீப். இந்த உரையாடலின் போது சின்ன வீட்டாரை நோக்கி, “இங்க கவனியுங்க… அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அநாவசியமாக கத்தி குறுக்கீடு செய்து எரிச்சலூட்டினார் சுரேஷ்.
சிறைக்குச் செல்ல வேண்டிய நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்ஷயா, ஒரு ஆட்சேபமும் இன்றி புன்னகையுடன் ஒப்புக் கொண்டார். ஆக… இந்த சீசனில் முதன்முறையாக சிறைக்குச் செல்லும் பெருமை அவருக்கே. ‘இங்க என்ன ஃபர்ஸ்ட் நைட்டாய்யா நடக்குது… லைட்ட போடுங்கய்யா’ என்று பலராம் நாயுடு சொல்வது போன்ற லைட்டிங் இருந்த ஒரு சிறிய அறையில் அக்ஷயாவை கொண்டு சென்றனர். விக்ரமையும் அந்த அறைக்குள் தள்ளி வில்லங்கமான குறும்பு செய்தார் விஷ்ணு.
‘இருக்கு… இந்த வாரமும் ஒரு குறும்படம் இருக்கு…’
மணி அடித்ததா, இல்லையா என்கிற விவகாரம் குறித்து ஒரு வழியாக பிரதீப்பும் சுரேஷூம் நேருக்கு நேர் பேச அமர்ந்தனர். “நான் ஓர் உரிமைல அப்படிப் பேசிட்டேன். ஆனா நீங்க பொய் சொல்லிட்டீங்க” என்று அதே பல்லவியை பிரதீப் இப்போதும் பாட, “பெல் அடிச்சதுப்பா. நான் பொய் சொல்லல. பொய் சத்தியம் எல்லாம் நான் பண்ண மாட்டேன்” என்று தன் தரப்பு நியாயத்தை சுரேஷ் சொன்னார்.
“எனக்கு மன்னிப்பு எல்லாம் கேட்கத் தோணல. பெல் அடிச்சதா, இல்லையான்னு உண்மை தெரியணும். அது தெரிஞ்சு கமல் சார் என்னை வெளியே போகச் சொன்னா ஒரு பிரச்னையும் இல்ல. நான் வெளியே போயிடுவேன்” என்று மீண்டும் பிடிவாதம் பிடித்த பிரதீப், பேச்சு வாக்கில் கமலை ‘அந்தாள்’ என்று குறிப்பிட்டதும் ‘அப்பா ஸ்தானத்தில் இருக்கீங்க’ என்று சுரேஷைக் குறிப்பிட்டதும் ஜெர்க்கை ஏற்படுத்தியது.
‘என்ன சொல்றார் பிரதீப்?’ என்று வீட்டில் உள்ள மற்றவர்கள் சுரேஷை விசாரிக்க, “கமல் சார் சொன்னா மன்னிப்பு கேட்கிறேன்னு சொல்றான்” என்று அவர் சொல்ல “அடப்பாவி மன்னிப்பு கேட்க மாட்டேன்னுல்ல சொல்லிட்டு இருந்தான். இது விஷயமா இந்த வாரம் நாம உரிமைக்குரல் எழுப்பறோம். நீங்க யோசிச்சு கரெக்டா பேசுங்க” என்று சுரேஷிற்கு ஆலோசனை சொன்னார் மாயா. ஆக… இந்த வாரம் குறும்படமும், மணி அடித்ததா இல்லையா என்கிற விசாரணையும் இருக்கலாம்.
சபையை ஒன்று கூட்டிய பிக் பாஸ், இந்த வாரம் முழுவதும் முழுமையாகப் பங்கெடுத்துக் கொண்ட இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். பெரிய வீட்டில் மாயா, சுரேஷ் ஆகிய இரு பெயர்கள் நிறைய முறை பரிந்துரைக்கப்பட்டன. ரகசிய உடன்படிக்கை காரணமாக ஐஷூவின் பெயரை முதலில் சொன்ன பிரதீப், பிறகு தன்னுடைய பெயரையே சொல்லி வித்தியாசம் காட்டினார். ஆனால் இதை பிக் பாஸ் ஒப்புக் கொள்ளாததால் சுரேஷின் பெயரைச் சேர்த்தார்.
கேப்டன்சி டாஸ்க்கில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்!
இந்த டாஸ்க்கின் பிரதான நோக்கம் எதற்காக என்பதே தெரியாமல் மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்க ‘இது கேப்டன்சி டாஸ்க்’ என்று பிறகு சொல்லி ஒரு ட்விஸ்ட் வைத்தார் பிக் பாஸ். ‘அடக்கடவுளே’… என்று மக்கள் தலையில் வைத்துக் கொண்டனர். சின்ன வீட்டிலும் இதே போன்ற வாக்கெடுப்பு நடந்தது. இதில் விசித்ரா தேர்வானார். இந்த மூவருக்கும் இடையில் கேப்டன்சி டாஸ்க் நடக்கும்.
‘பேஸ்மென்ட் வீக்’ என்கிற அந்த டாஸ்க் பற்றிய விவரங்கள் சொல்லப்படும் போதே தெரிந்துவிட்டது, அதில் விசித்ராவால் தாக்குப் பிடிக்க முடியாது என்று. புகைப்படத்தில் உள்ள நபர் நிற்கும் அதே போஸில் மூவரும் தொடர்ந்து நிற்க வேண்டும். ஆட்டம் ஆரம்பித்த சில நொடிகளிலேயே விசித்திரா தடுமாறி காலை கீழே வைத்து தோல்வியை ஒப்புக் கொண்டார். சுரேஷும் சற்று நேரம் தாக்குப் பிடித்து பிறகு குச்சிப்பிடி நடனம் போல எதையோ ஆடித் தடுமாறி காலை கீழே வைத்தார். ஆக, அடுத்த வார கேப்டனாக மாயா இருப்பார். இது பிக் பாஸின் உள்குத்து ராஜதந்திரமாக இருக்கலாம்.
பூர்ணிமாவும் மாயாவும் நெருக்கமான தோழிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால், அப்படி இல்லை. மாயா கேப்டன் ஆனது பூர்ணிமாவுக்குப் பிடிக்கவில்லை. “அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க. இது கேப்டனுக்கான டாஸ்க்ன்னு தெரிஞ்சிருந்தா நான் ஓட்டு போட்டிருக்க மாட்டேன்” என்று சிறையில் இருந்த அக்ஷயாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. (உடன்பிறவா சகோதரிகள்ன்னாலே பிரச்னைதான் போல!)
“நீங்க கேப்டன்சி டாஸ்க் போறீங்கன்னு தெரிஞ்சவுடனே பிரதீப் கைதட்டினார்… பார்த்தீங்களா?” என்று விசித்ராவிடம் ஜோவிகா கேட்க, “எப்படியும் நீங்க தோத்துடுவீங்க… டம்மி பீஸ்னு அவரு நினைச்சி இருக்கலாம்” என்று ஐஷூ வார்த்தையை விட்டு விட விசித்ராவின் முகம் மாறியது. (வாட் டூ யூ மீன்?) “அதை ஏன் அப்படிச் சொல்லணும். அது பிரதீப்போட ஸ்ட்ராட்டஜியா கூட இருக்கலாம். டம்மி பீஸ் கிட்டலாம் அவன் நெருங்கவே மாட்டான்” என்று மேக்கப் போட்டு சமாளித்த விசித்ரா, “இவளுக்கு ரொம்பத்தான் வாய் நீளுது” என்று முணுமுணுத்தார். (ஐஷூவிற்கு ஒரு பாயசத்தைப் போட்டுற வேண்டியதுதான்!).
“மாயாவுக்கு கேப்டன் ஆகுறதுல இன்ட்ரஸ்ட் இல்ல. நீங்க அவகிட்ட கேட்டு இருந்தா விட்டுக் கொடுத்திருப்பா. நீங்க ஜெயிச்சு இருக்கலாம்” என்று கோக்குமாக்காக எதையோ விசித்ராவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பிரதீப். விசித்ரா கேப்டன் ஆனால் ஒருவகையில் பிரதீப்பிற்கு அனுகூலம். விசித்ராவை எளிதில் மூளைச்சலவை செய்யலாம். ஆனால் மாயாவிடம் அது எளிதாக நடக்காது.
அர்ச்சனாவின் அழுகைத் திருவிழா!
அர்ச்சனாவின் ‘கிரையிங் கலவரம்’ மறுபடியும் ஆரம்பித்தது. “சின்ன வீட்டில் இருக்கவே எனக்குப் பிடிக்கல. டைமுக்கு ஒரு காபி கூட கிடைக்கல. நான் சோம்பேறியா இருந்து இந்தத் தண்டனை கிடைச்சிருந்தா கூட பரவாயில்லை. எல்லா வேலையும் செய்கிறேன். இந்த வீட்டை முழுசா கூட சுத்தி பாக்கல… சோபால, பெட்ல ஒரு முறை கூட உட்கார்ந்து பார்க்கல. நான் சரியா டாஸ்க் பண்ணாம தண்டனை கிடைச்சிருந்தா கூட ஓகே. வைல்டு கார்டில் வந்ததால ஏன் உடனே தண்டனை தரணும். எனக்கு சுதந்திரமா மூச்சு விடணும்” என்றெல்லாம் அவர் மனஉளைச்சல் அதிகமாகி பிதற்றல் கூடியதால், காற்றோட்டமாக அவரை அழைத்துச் சென்று மெயின் கேட் அருகே உட்கார வைத்தார் பூர்ணிமா.
“பிக் பாஸ் திட்டப் போறாரு” என்று சுரேஷ் உள்ளிட்டவர்கள் ஆட்சேபிக்க, ‘பரவால்ல கொஞ்ச நேரம் இருக்கட்டும்’ என்று பூர்ணிமா அனுமதித்தது மனிதாபிமான நோக்கில் சரியானதுதான். ஆனால் பிக் பாஸ் இதை அப்படிப் பார்க்கவில்லை. ‘முன்ன சோ் கொடுத்தீங்க. நான் பாராட்டினேன். ஓகே… அதுக்காக அன்னை தெரசா ரேஞ்சுக்கு உங்களை நெனச்சீப்பீங்களா?’ என்று எண்ணி விட்டாரோ என்னமோ… பூர்ணிமாவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து லெஃப்ட் அண்டு ரைட் வாங்கினார்.
“இந்த வீட்டுக்குன்னு விதிமுறைகள் இருக்கு. நீங்க யாரை இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்றீங்க. தொடர்ந்து விதிமீறல்கள் நடக்குது. எனக்கு ஏமாற்றமா இருக்கு. கேப்டனா இருக்கற நீங்களே விதிமீறல்களுக்கு உதவி செய்றீங்க. சரி… நீங்க என்ன வேணாலும் பண்ணிக்குங்க” என்று வெறுப்பாகச் சொல்லி பிக் பாஸ் அகல, அடிபட்ட முகத்துடன், ‘சாரி பிக் பாஸ்’ என்று பூர்ணிமா விதவிதமாக கேட்டுப் பார்த்தாலும் அங்கிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இந்த மாதிரி சமயங்களில் கல்லுளி மங்கன் பாத்திரத்தை பிக் பாஸ் திறமையாகவே ஆடுவார். திகில் படம் போல அறையின் விளக்கு அணைக்கப்பட்டது. ‘கிளம்புங்க… காத்து வரட்டும். போய் அர்ச்சனாவிற்கு மம்மு ஊட்டி விடுங்க’ என்று பிக் பாஸ் மறைமுகமாகச் சொன்னதைப் போலவே இருந்தது.
நொந்து நூலாகி பரிதாபமான முகத்துடன் வெளியே வந்த பூர்ணிமா, “பிக் பாஸ் கோச்சுக்கிட்டாரு. மன்னிப்பு கேட்டாலும் எதுவும் சொல்லை” என்று சோகமாகச் சாெல்ல, “அர்ச்சனாவிற்கு Claustrophobia பிரச்னை இருக்குன்னு சொன்னீங்களா?” என்று மாயா கேட்டார். அதற்கெல்லாம் மசிகிற ஆள் பிக் பாஸ் இல்லை. அர்ச்சனாவின் இதர நடவடிக்கைகளை கண்காணித்து அது பொய் என்று ஒருவேளை பிக் பாஸ் கண்டுபிடித்திருக்கலாம்.
‘மனம் இருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்’
வைல்ட் கார்டு என்ட்ரிகளை அப்படியே ஒட்டுமொத்தமாகத் தூக்கி சின்ன வீட்டிற்குள் தள்ளியது நிச்சயம் பெரிய வீட்டார் செய்த அராஜகம். குறிப்பாக மாயா அண்டு கேங் இதைத் திட்டமிட்டு செய்தது முறையானதேயல்ல. ‘ஒரு வாரம் கூட விளையாடாமல் வந்தவுடன் நான் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?’ என்று அர்ச்சனா மனம் புழுங்குவது ஒரு வகையில் சரிதான். நியாயம்தான்.
ஆனால் அர்ச்சனா இதை ஏன் தண்டனையாக கருதிக் கொள்ள வேண்டும்? ‘பெரிய வீட்டில் இருப்பவர்களை விடவும் சின்ன வீட்டில் இருப்பவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருந்தோம்’ என்று கமல் எபிசோடில் முன்பு வாக்குமூலம் தந்தார்கள். அதையெல்லாம் அர்ச்சனா பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை ‘மனம் இருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்’ என்பது கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரி. ‘அந்த வீட்டில் எல்லோரும் ஜாலியா இருக்காங்க. நான் இங்க வேலைக்காரி மாதிரி இருக்கிறேன்’ என்கிற சுயபரிதாபம்தான் அர்சசனாவை மனஉளைச்சலுக்கு தள்ளுகிறது போல. நாம் சிறப்பாக விளையாடினால் இந்த நிலைமை தலைகீழாக மாறும் என்கிற எளிய உண்மை கூட அவருக்குப் புரியவில்லை.
அர்ச்சனா உண்மையிலேயே மனம் புழுங்கி மூச்சுத் திணறி மனஉளச்சல் அடைகிறாரா அல்லது ‘நான் மட்டும் விசித்ராவிடம் மாட்டிக் கொண்டு மருமகள் போல் கஷ்டப்படுகிறேன்’ என்கிற சுயபச்சாதாபத்தில் அழுது சீன் போடுகிறாரா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவரைப் பார்த்தால் ஒரு பக்கம் பரிதாபமாகவும் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதால் இன்னொரு பக்கம் எரிச்சலாகவும் இருக்கிறது. ‘தான் யார்… தன்னுடைய குணாதசியம் என்ன’ என்பதை சற்றாவது உள்ளுக்குள் அறிந்திருக்கிறவர்கள், தங்களுக்குப் பொருந்தாத இடங்களுக்குச் செல்லாமல் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம். அல்லது அவற்றை நேருக்கு நேராகச் சந்தித்துப் போராடும் உறுதியாவது இருக்க வேண்டும்.
அர்ச்சனாவிற்கு அட்வைஸ் செய்து டயர்ட் ஆன பிக் பாஸ்
‘என்னை தனியா விடுங்க’ என்று சொல்லித் தொடர்ந்து கண்கலங்கிக் கொண்டிருந்த அர்ச்சனாவை ‘கடவுளே… இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வெச்சுக்கிட்டு’ என்று நொந்தபடி வாக்குமூல அறைக்கு அழைத்தார் பிக் பாஸ்.
“இங்க ரொம்ப பிரஷரா இருக்கு… எல்லா வேலையும் பண்ணாலும் குறை சொல்றாங்க. மத்தவங்கள்லாம் ஜாலியா இருக்காங்க. என்னைச் சோ்த்துக்கவே மாட்றாங்க” என்று பள்ளி மாணவி மாதிரி புலம்பிய அர்ச்சனாவிடம், “நீங்க வந்து நாலு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள வெளிய போறேன்னு சொன்னா எப்படி..? ஒவ்வொரு போட்டியாளரும் உங்களுக்கு எதிராகத்தான் விளையாடுவாங்க. வியூகம் அமைப்பாங்க. அதை எதிர்கொள்றதும், இல்ல அதுக்குப் பலியாகறதும் உங்க கையிலதான் இருக்கு. மற்ற போட்டியாளர்களை நீங்க இம்ப்ரஸ் பண்ண வேண்டாம். மக்களை இம்ப்ரஸ் பண்ணா போதும். இந்த ஷோ பாத்துட்டுதானே வந்தீங்க? ஒருத்தர் அடிக்கடி கீழே விழலாம். ஆனால் எழுந்து நிக்கணும். இதெல்லாம் நிகழ்ச்சியோட பாகம். நான் அடிக்கடி மோட்டிவேட் பண்ணிட்டிருக்க முடியாது. நீங்கதான் தொடர்ந்து ஊக்கமா விளையாடனும்” என்று சரியான அறிவுரையைச் சொல்லிக் கொண்டிருந்தார் பிக் பாஸ்
இந்த வாரம் வெளியேறப் போகிறவர் யாராக இருக்கும்?
+ There are no comments
Add yours