“விக்ரம் உழைப்பை பார்த்து பயம் வந்துவிட்டது” – பா.ரஞ்சித் பகிர்வு | Pa Ranjith Speech at Thangalaan Teaser Launch

Estimated read time 1 min read

சென்னை: “படத்தில் விக்ரமின் உழைப்பையும், ஈடுபாட்டையும் பார்த்து எனக்கு பயம் வந்துவிட்டது. நம்மை நம்பி வந்திருக்கிறார். அதற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என நினைத்தேன்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “ஞானவேல் ராஜா என்னை மிகவும் நம்பியிருக்கிறார். என்னுடைய படங்கள்தான் இந்த நம்பிக்கையை அவரிடம் ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய முதல் படமான ‘அட்டகத்தி’ தொடங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அவருக்கும் எனக்குமான உறவு இருந்து வருகிறது. அந்த உறவை ‘தங்கலான்’ இன்னும் உறுதிப்படுத்தும் என நம்புகிறேன். கமர்ஷியல் படங்களை இயக்கும் அவர், ஆர்டிஸ்டிக்கான படத்தை தயாரிப்பதை என்னிடமிருந்தே தொடங்குகிறார் என நினைக்கிறேன். இந்த டீசருக்கு கூட அவரை திருப்திப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டேன். இறுதியில் டீசர் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூறினார்.

விக்ரமை நான் என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். அவர் கமர்ஷியலாக நிறைய படங்கள் நடித்திருக்கிறார். நடிகராக அவர் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. அவருடன் இணைந்து பணியாற்ற போகிறோம் என்றபோது எப்படியான கதைக்களத்தை தேர்தெடுப்பது என யோசித்து பீரியட் டிராமாவை தேர்ந்தெடுத்தேன். இந்தக் கதைக்களத்தை அடுத்த கட்டத்துக்கு அவர் நகர்த்தி சென்றுவிடுவார் என நினைத்தேன்.

ஒரு நடிகராக அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஒருநாள் அவரிடம், ‘இத்தனை வருடத்துக்குப் பிறகும் எதற்காக இப்படி உழைக்கிறீர்கள்? எது உங்களை இந்த அளவுக்கு உந்தித் தள்ளுகிறது?’ என கேட்டேன். இடையில் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு அவர் படப்பிடிப்புக்கு வந்ததும் ஸ்டண்ட் காட்சி எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. படப்பிடிப்பின்போது மட்டும் நான் பயங்கரமான சுயநலவாதியாக இருப்பேன். காரணம், என்னை நம்பி வந்திருக்கிறார். அதற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என நினைப்பேன்.

ஒரு கட்டத்தில் விக்ரமின் உழைப்பையும் ஈடுபாட்டையும் பார்த்து எனக்கு பயம் வந்துவிட்டது. சொல்லப்போனால் அதுதான் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுத்தது. படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டார். அந்தக் கதாபாத்திரத்தை யதார்த்தமாக காட்ட கடினமாக உழைத்தார். பார்வதி, மாளவிகாவின் சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம். இந்தப் படம் உங்களுக்குள் உறவாடும் என நினைக்கிறேன்.

நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கடும் உழைப்பை செலுத்தியிருக்கிறார். படத்தில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. விஎஃபெக்ஸ் படங்களுக்கு இந்தப் படம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்து வேலை செய்தோம். உங்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தப் படம் அதனை முழுமையாக பூர்த்தி செய்யும் என நான் நம்புகிறேன். இதில் பேசியிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். தொன்மத்துக்கும், வரலாற்றுக்கும் இடையில் இருக்கும் நம்பிக்கையை இந்தப் படம் பேசும். தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படமாக இது இருக்கும்” என்று பேசினார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours