நாய் கடித்த விவகாரம் : பெண் புகாரின் பேரில் கன்னட நடிகர் தர்ஷன் மீது வழக்கு
02 நவ, 2023 – 13:27 IST
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தர்ஷன். அதே சமயம் எந்த சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத மனிதர். பத்திரிகையாளர் ஒருவரை தரக்குறைவாக பேசினார் என்பதற்காக மீடியாக்கள் இவர் மீது விதித்திருந்த இரண்டு வருட தடை சமீபத்தில் தான் நீங்கியது. இந்த நிலையில் அவரே எதிர்பாராத விதமாக தற்போது வேறு ஒரு சிக்கலில் சிக்கியுள்ளதுடன் அவர் மீது போலீசார் எப்ஐஆரும் பதிந்துள்ளனர்.
விஷயம் இதுதான். தர்ஷன் வசிக்கும் வீட்டின் அருகில் உள்ள பக்கத்து வீட்டிற்கு அமிதா ஜிண்டால் என்கிற பெண்மணி வருகை தந்துள்ளார். அவர் இரண்டு வீட்டிற்கும் வெளியே நடுவில் உள்ள காலி இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு தனது நண்பர் வீட்டிற்கு சென்றவர் மீண்டும் திரும்பி வந்த போது காரின் அருகில் மூன்று நாய்கள் நின்றிருப்பதையும், அதை பிடித்துக் கொண்டு நாயின் பாதுகாவலர் ஒருவர் நிற்பதையும் கவனித்துள்ளார். அதேசமயம் அந்த நாய்களில் ஒன்று சங்கிலியால் கட்டப்படாமல் இருந்தது. அந்த பெண் காரில் ஏற முயற்சிக்கும் சமயத்தில் நாய்களில் ஒன்று எதிர்பாராத விதமாக அவரது வயிற்றில் கடித்து காயப்படுத்தி விட்டது.
இதனை தொடர்ந்து நாய் பராமரிப்பாளர் மற்றும் நாயின் உரிமையாளரான நடிகர் தர்ஷன் ஆகியோர் மீது பெங்களூரு ஆர்ஆர் போலீஸ் ஸ்டேஷனில் இவர் புகார் அளித்ததின் பேரில் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. காரில் அமிதா ஜிண்டால் ஏறுவதற்கு முன்பாக காரை அங்கே நிறுத்தியது குறித்து நாய்கள் பராமரிப்பாளருடன் சர்ச்சை ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் சங்கிலியால் கட்டப்படாமல் இருந்த நாய் தன் மீது தாவ முயற்சித்ததை பார்த்தும் கூட, வேண்டுமென்றே அதை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்றும் தனது புகாரில் கூறியுள்ளார் அந்த பெண்.
+ There are no comments
Add yours