Bigg Boss 7 Day 32: `நாம ஏன் ரொமான்ஸ் பண்ணக்கூடாது!'- பூர்ணிமாவிடம் தூதுவிடும் விஷ்ணு!

Estimated read time 1 min read

இந்த எபிசோடில் அப்பளத்தில் துவங்கி மட்டன் கிரேவி வரை எல்லாவற்றிலும் கலவரம்தான்.

அர்ச்சனாவின் டார்ச்சர் தாங்காமல் பெரிய வீட்டிற்கு விசித்ரா எகிறிக் குதித்து எஸ்கேப் ஆன சம்பவம் நடந்தது. மறைமுக ஸ்ட்ரைக்கைத் துவங்கிய விசித்ரா, பிறகு தாயுள்ளத்தோடு வீடு திரும்பினார். ஐஷூவிற்கும் பிரதீப்பிற்கும் இடையே ஒரு ரகசிய உடன்படிக்கை கையெழுத்தாகியிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

வாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் இன்று பிரச்னை அப்பளத்தின் மூலமாக வெடித்தது. உணவு போதாத காரணத்தால் நெக்சன் மணியடித்து காஃபி கேட்க மனுநீதிச் சோழனாக கருணையுடன் அதை பரிசீலிக்க விசித்ரா தயாராக இல்லை. “கொஞ்சமாவது உங்களுக்கு மனச்சாட்சி இருக்கா. நாங்களும் டாஸ்க் முடிச்சு லேட்டாதானே வந்து சமைச்சோம். இவ்வளவு நேரம் கழிச்சு மீண்டும் சமைக்கச் சொல்றீங்களே?” என்று கடுப்பானார். இது பெரும்பாலான வீடுகளில் இல்லத்தரசிகள் எதிர்கொள்ளும் அதே பிரச்சினை.

பெரிய வீடு இதனால் கோபம் அடைந்தது. அப்பளம் மாதிரியான சைஸில் வட்டமேசை மாநாடு கூடியது. “எங்களுக்கு மூணு நாளா சாப்பாடு பத்தவே இல்லை.. எவ்வளவுதான் சமைக்கிறீங்க?’ என்று சரமாரியான கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஜோவிகா – விக்ரம் – ஐஷூ

‘எவ்வளவு அரிசியை உலையில் போடறீங்க.. The nation wants to know now’.. என்று ஜோவிகா அதிகாரமாகத் தன் குரலை எழுப்பினார். தினேஷ் இதற்கு பொறுமையாக பதில் அளிக்க ஆரம்பித்தாலும் பெரிய வீட்டின் கோபம் அடங்கவில்லை. பசி வந்தால் பத்தும் பறக்கும்.

“நீங்க வேணும்னே இதை பண்ணீங்கன்னா.. பதிலுக்கு நாங்களும் நிறைய பண்ணுவோம்” என்று நிக்சன் எகிற, “ஓகே.. அப்படின்னா.. முடிஞ்சத பண்ணிக்குங்க” என்று தினேஷூம் பதிலுக்கு சூடானார். ‘ஒரு புறாவிற்கு அக்கப்போரா’ என்பது மாதிரி ஒரு சின்ன அப்பளப் பிரச்சினையால் வீடே இரண்டாக உடைந்து நொறுங்கியது.

விசித்ரா துவங்கிய மறைமுக கிச்சன் யுத்தம்

‘பிட்டு படம்டி’ என்கிற தெய்வீகப் பாடலுடன் நாள் 32 விடிந்தது. பாடலின் இடையே வரும் ஒரு சத்தத்தையும் விஷ்ணு கொட்டாவி விடுவதையும் எடிட்டிங் டீம் நகைச்சுவையாக மேட்ச் பண்ணி இருந்த விதம் அருமை.

“நான் இன்னைக்கு சமைக்கல.. கால் பயங்கரமா வலிக்குது. வேணும்னா கிளீனிங் ஒர்க் பண்றேன். அவங்க சமைக்கட்டும்” என்று தனது மறைமுக ஸ்ட்ரைக்கைத் துவங்கினார் விசித்ரா. ‘என்னை இங்க சமைக்கிற வேலைக்குத்தான் அனுப்பி இருக்காங்க’ என்று ஏற்கெனவே அனத்திக் கொண்டிருந்த விசித்ராவிற்கு பழிவாங்கும் நேரம் வந்து விட்டது. ‘நீங்க ஒக்காந்து குறிப்புகள் குடுங்க. நாங்க சமைக்கிறோம்’ என்று தினேஷும் பிராவோவும் ஒத்துழைப்பு தர முன்வந்தார்கள்.

நிக்சன் நடனம்

விசித்ரா செய்வது ஒரு வழக்கமான மாமியார் டெக்னிக். முரண்டு பிடிக்கும் புதுமருமகளுக்கு செக்மேட் வைக்க வேண்டுமென்றால் ‘எனக்கு உடம்பு சரியில்ல.அவ சமைக்கட்டும்’ என்று சொல்லி விடுவார்கள். ‘அப்போதுதான் என் அருமை தெரியும்’ என்கிற ரிவென்ஜ் மோடிற்கு சென்று விடுவார்கள். ‘அன்னபாரதி லீடராக இருந்து சமைக்கட்டும்’ என்பது விசித்ராவின் உள்நோக்கம் போல. அவர் வேலையே செய்வதில்லை என்பது விசித்ராவின் புகார். ஆனால் கூத்தில் கோமாளி புகுந்த கதையாக “Can I make rava Kichadi?” என்று கையைத் தூக்கி அனுமதி கேட்டார் அர்ச்சனா. ஆனால் அந்த கிச்சடி சுவற்றில் ஒட்டும் பச்சடி போல் வரப் போகிற விபத்தை யாருமே அப்போது யூகிக்கவில்லை.

அரச்சனா

ஐஷூவிடம் ரகசியம் பேசுவதில் நிக்சனிற்கும் பிரதீப்பிற்கும் இடையே ஒரு போட்டி நிலவுகிறது. நிக்சனை கடுப்பேற்றுவதற்காகவே சில விஷயங்களை பிரதீப் செய்கிறார் போலிருக்கிறது. இப்போதும் ஐஷூவின் காதில் ரகசியம் பேசிக் கொண்டிருந்த பிரதீப், ‘நிக்சன் ஏன் வேக்அப் பாட்டுக்கு வெறித்தனமா ஆடினான்… என்ன பிரச்சனை.. ஏன் உன் கழுத்துல காயம்?’ என்றெல்லாம் விசாரிக்க ‘இதெல்லாம் ஒரு மேட்டரா.. எனக்கு புடிச்ச பாட்டு அது’ என்று பிறகு சொல்லி சிரித்தார் நிக்சன்.

கிச்சடி என்கிற பெயரில் ஒரு விசித்திர பச்சடி

சமையல் முடிந்தது. கிச்சடி என்கிற பெயரில் மஞ்சள் நிறத்தில் ஒரு வஸ்துவும் சட்டினி என்கிற பெயரில் எரிமலைக்குழம்பு மாதிரி ஒரு விசித்திர அயிட்டமும் தட்டில் வைக்கப்பட்டதை பெரிய வீட்டார் கலவரத்தோடு பார்த்தார்கள். முகச்சுளிப்புடன் உண்பதற்கு முயற்சி செய்தார்கள். “கையில் எடுத்து வாயில் போட்டு விட்டு மீண்டும் கையைப் பார்க்கிறேன். உப்புமா அப்படியே கையில்தான் இருக்கிறது” என்று காமெடி செய்தார் சுரேஷ். “சூடா இருக்கும் போதே சீக்கிரம் வித்துடுங்க. அப்புறம் சரக்கு போவாது” என்று ஹோட்டல் ஓனர் மாதிரி ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார் பிரதீப்.

கிச்சடி

“விசித்ரா வேணுமின்னேதான் சமைக்கல. டாஸ்க் முடிஞ்சு ஒரு மணி நேரம் நின்னு பேசும்போது கால் வலி தெரியலையா?” என்று விசித்ராவின் தந்திரத்தைக் கண்டுபிடித்தார் பூர்ணிமா. “அடுத்த வாரம் மறுபடியும் அந்த அஞ்சு பேரையும் தூக்கணும்” என்று டெரரான ஐடியாவை மாயா தர ‘மறுபடியுமா?’ என்று சற்று மனச்சாட்சியுடன் தயங்கினார் பூர்ணிமா. ‘அப்படி பண்ணா.. ஓப்பனா தெரிஞ்சுடும். லிஸ்ட்ல உங்களையும் பிரதீப்பையும் கலந்து போடலாம்” என்று பூர்ணிமா ஐடியா தர ‘அப்ப.. நான் போயிட்டா?’ என்கிற சந்தேகத்தை மாயா எழுப்ப, “அப்படில்லாம் நீங்க போக மாட்டீங்க” என்று நம்பிக்கையாகச் சொன்னார் பூர்ணிமா. நெருக்கமான தோழிகள் என்றாலும் இருவரும் ‘வாங்க. போங்க’ என்று பேசிக் கொள்வது ஒரு விசித்திரம்.

கிச்சடி சரியாக வராத காரணத்தினால் மக்கள் கண்ணீருடன் சாப்பிடுவதைப் பார்த்து, தானும் பாவனையாக தாயுள்ளத்தோடு கண்கலங்கினார் விசித்ரா. சுற்றியிருந்த மக்களும் பாவனையாக ஆறுதல் சொன்னார்கள். ‘பிளான் சக்ஸஸ்’ என்று உள்ளுக்குள் விசித்ராவின் மைண்ட் வாய்ஸ் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும்

பிரதீப்பை ஜெயிலுக்கு அனுப்பிடலாம்..

ஷாப்பிங் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம். ‘சந்துல பொந்துல மாட்டிக்காத’ என்பது இந்த டாஸ்க்கின் ரைமிங்கான தலைப்பு. பத்து வெவ்வேறு வடிவங்களில் இடைவெளி இருக்கும் பலகைகளின் நடுவே பெரிய வீட்டார் அனைவரும் புகுந்து வர வேண்டும். டாஸ்க் முடியும் போது ஏழு வடிவங்கள் உடையாமல் இருக்க வேண்டும். ஒரு வேளை, இந்த டாஸ்க்கில் பெரிய வீடு தோற்றால் யாராவது ஒருவர் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும்.

பூர்ணிமா, அக்ஷயா

‘பிரதீப்பை ஜெயிலுக்கு அனுப்பிடலாம்’ என்று விஷ்ணு உள்ளிட்ட சிலர் ரகசியமான சிரிப்புடன் முடிவெடுக்க அதிலிருந்து தப்பிக்கும் வழியை பிரதீப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த டாஸ்க்கை சின்ன வீட்டில் இருந்து இரண்டு பேர் மேற்பார்வை செய்வார்கள். விசித்ராவும் கானா பாலாவும் இதற்காக சென்றார்கள். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு இந்த டாஸ்க்கை பெரிய வீடு வெற்றிகரமாக முடித்தது. அரை நிர்வாண நிலையில் வடிவங்களின் இடையே புகுந்து வெளியே வந்த சுரேஷ், ஒலிம்பிக் சாதனையை படைத்தது போல வீடு முழுதும் வெறியுடன் கத்திக் கொண்டு சுற்றி வந்தார்.

சுரேஷ்

கிச்சன் ஏரியாவில் மறுபடியும் ஒரு பிரச்சனை எரிய ஆரம்பித்தது. ‘ சின்ன வீட்டில் இருந்து இரண்டு பேர் நீதிபதிகளாக போகலாம் என்று சொன்னபோது என்னை யாருமே கலந்தாலோசிக்கவில்லை. நீங்களாக முடிவெடுத்து விட்டீர்கள்’ என்கிற உரிமைப் பிரச்சினையை எழுப்பினார் அர்ச்சனா. உண்மையில் சுரேஷ்தான் இந்தப் பிரச்னையை அர்ச்சனாவிடம் மேலும் பற்ற வைத்தார். அது நன்றாக பற்றிக்கொண்டு எரிந்தது. “யாரும் உன்னை வெத்தல பாக்கு வச்சி அழைக்க மாட்டாங்க. நீயாதான் உன் உரிமையை கேட்கணும்” என்று தினேஷ் சொன்னது சரியான வாதம்.

இது குறித்து விசித்ராவிடமும் தொடர்ந்து மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. “நீதான் எல்லாத்துக்கும் நோன்னு சொல்லுவியே?” என்று விசித்ரா சமாளிக்க முயல ‘அது சமையல் வேலைக்கு… இது டாஸ்க் இல்லையா?’ என்று சாமர்த்தியமாக தன் உரிமையை கோரினார் அர்ச்சனா. “நான் கேக்குறது புரியலையா.. இல்ல.. டிவிஸ்ட் பண்றீங்களா என்று அர்ச்சனா கேட்டது, விசித்ராவை பயங்கரமாகக் காண்டாக்கியது. பெரிய வீட்டார் தன்னைத் தனிமைப்படுத்தி அனுப்பி வைத்தது குறித்து ஏற்கனவே ஆதங்கத்தில் இருக்கும் விசித்ரா, இப்போது அர்ச்சனாவின் இம்சை தாங்காமல் சட்டென்று தீர்மானித்து பட்டென்று பெரிய வீட்டு பக்கம் எட்டிக் குதித்தார். (நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ!)

சின்ன பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய விசித்ரா

“என்னை ஏன் அங்க அனுப்பி வச்சீங்க.. டார்ச்சர் தாங்கலை. நான் என்ன கேனையா எல்லாத்தையும் கேட்டுட்டு உட்கார்ந்திருக்க.. பிக் பாஸ் தண்டனை கொடுத்தால் கொடுக்கட்டும்.. கேஸ் ஆஃப் பண்ணா பண்ணட்டும்.. எல்லோரும் பட்டினி கிடங்க.. என்றபடி கோபத்துடன் சென்று படுக்கையில் சரியாக விழுந்தார். ‘சின்ன வீட்டாரை விசித்ரா வெச்சி செய்வாங்க’ என்றுதான் பெரிய வீடு பிளான் செய்து இவரை அனுப்பியது. ஆனால் நிலைமை தலைகீழாகி “அவங்கதாம்ப்பா என்னை வச்சு செய்றாங்க” என்று விசித்ரா கதறியழும்படியாக சூழல் ஆகி விட்டது. அர்ச்சனாவின் திறமை அப்படி.

அடுப்பை அணைத்து கெத்து காட்டிய பிக் பாஸ்

“அங்க எல்லாருமே முதிர்ச்சி இல்லாத கருமங்கள். நான் இங்க சாக வரவில்லை” என்றெல்லாம் விசித்ரா வார்த்தைகளைக் கொட்ட “பொதுவா சொல்லாதீங்க.. யாரைன்னு குறிப்பிட்டு சொல்லுங்க” என்றார் தினேஷ். விசித்ராவின் கோபம் குறிப்பாக அர்ச்சனாவின் மீது என்று தெரிகிறது. தன்னுடைய உரிமையை அர்ச்சனா கேட்பதற்கு முழு நியாயமும் உள்ளது. ஆனால் இதையே தொடர்ந்து பேசி இம்சிக்கிறார் என்பதுதான் விசித்ராவின் டென்ஷனுக்கு காரணம்.

விசித்ரா எகிறிக் குதித்து விதிமீறல் செய்ததால், அடுப்பை அணைத்து தன்னுடைய கெத்தைக் காட்டினார் பிக் பாஸ். “ப்ளீஸ் வாங்க.. தண்ணில போட்ட மட்டன், சிக்கனா மாறிட்டு வருது” என்று தினேஷ் கெஞ்சினாலும் விசித்ரா மசியவில்லை. என்றாலும் சிறிது நேரத்திற்குப் பிறகு விசித்ராவின் தாயுள்ளம் தவிக்க ஆரம்பித்தது. மக்கள் பட்டினி கிடப்பதை பார்க்க சகிக்காமல் ‘சரி நான் இங்க கிளீன் பண்றேன். அதுக்குத்தான் வந்திருக்கேன்’ என்று ஒரு நாடகத்தை ஆரம்பித்து பிக் பாஸிற்கே அல்வா கிளறித் தர முயற்சித்தார். அப்படியும் அடுப்பு எரியவில்லை. பிக் பாஸா. கொக்கா..

மாயா – ஐஷூ

தன்னால்தான் விசித்ரா பெரிய வீட்டிற்கு ஜம்ப் செய்து போயிருக்கிறார், அங்கு தன்னைத்தான் மறைமுகமாக திட்டிக் கொண்டிருக்கிறார் என்பது அர்ச்சனாவுக்கு தெரிந்தாலும் மீண்டும் அழுது பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பாமல் திறமையாக சமாளிக்க முடிவு செய்தார் அர்ச்சனா. “ஆக்சுவலி.. விச்சும்மா எங்கிட்டதான் எப்பவுமே ப்ரீயா பேசுவாங்க.. ஸ்வீட் பெர்ஸன்.. அதெல்லாம் நான் அவங்களை ஈஸியா கன்வின்ஸ் பண்ணிடுவேன். ஒரு முத்தம் கொடுத்து சரியாக்கி விடுவேன்” என்றெல்லாம் பெருமையுடன் விக்ரமிடம் சொல்ல, அவரோ “ஆமாமாம்.. அந்த வீட்டிலேயே அர்ச்சனாவைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு விசித்ரா அங்க சொல்லிட்டு இருக்காங்க” என்று பிளேட்டைத் தலைகீழாகச் சொல்லி பின்குறிப்பாக வடிவேலு பாணியில் ‘அவ்வ்வ்வ்’ என்று ஜாலியான முகக்குறிப்பை காட்டி குறும்பு செய்தார் விக்ரம்.

மாமியார் விசித்ரா – மருமகள் அர்ச்சனா – யூனிவர்சல் பிரச்சினை

ஒரு வழியாக விசித்ராவும் அர்ச்சனாவும் நேருக்கு நேர் பேச ஆரம்பித்தார்கள். “உன் மேல எனக்கு கோவம்லாம் இல்லை (எதே?!) எனக்குத்தான் பொறுமை குறைந்து கொண்டே போகுது. ஒரு விஷயத்துக்கு எவ்வளவு நேரம்தான் பேசுவ?” என்று விசித்ரா சலித்துக் கொள்ள, “என் உரிமையைத்தானே மேம் கேட்டேன்” என்று மறுபடியும் மல்லுக் கட்டினார் அர்ச்சனா.

அர்ச்சனா

அர்ச்சனாவின் தரப்பு நியாயமானதுதான். இதே விசித்ரா, ‘எந்த டாஸ்க்கிலும் தன்னை சேர்க்காமல் ஒதுக்குகிறார்கள்’ என்று முன்பு சலித்துக் கொண்டவர்தான். எனவே அந்த நோக்கில் அர்ச்சனாவின் நிலைமையை கருணையுடன் பார்த்திருக்க வேண்டும். ‘இது என்னுடைய உரிமை’ என்று அர்ச்சனா கேட்பதும் சரிதான். ஆனால் உரிமைக்குரலை ஒன்றரை மணி நேரத்திற்கு விடாமல் ஓதினால் எவருக்கும் பைத்தியம் பிடித்து விடும்.

விசித்ரா

அர்ச்சனாவின் வாக்குவாதம் மீண்டும் துவங்கியதால் எரிச்சல் அடைந்த விசித்ரா “நான் இனிமே சமைக்கிறது தவிர எந்த வேலையும் இங்க செய்ய மாட்டேன்” என்று எரிந்து விழ மாமியாரால் கொடுமைப்படுத்தப்பட்ட மருமகள் மாதிரி அழுது கொண்டே பாத்ரூம் கிளீன் செய்யச் செல்வது போல் உள்ளே மறைந்தார் அர்ச்சனா. ஆக.. வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறியது. முத்தா டெக்னிக் வேலைக்கு ஆகவில்லை போல.

தொடரும் பிரதீப்பின் ராஜதந்திர நடவடிக்கைகள்

உணவிற்கான நேரம் தாண்டிக் கொண்டே இருந்தது. மட்டனும் மக்கிப் போக ஆரம்பித்தது. எனவே வேறு வழியில்லாமல் சின்ன வீட்டிற்கு திரும்பினார் விசித்ரா. ஆனால் அப்போதும் அடுப்பு எரிய ஆரம்பிக்கவில்லை. “நானும் மனுஷன்தான்.. நானும் இப்ப ஸ்ட்ரெட்ஸ்ல இருக்கேன். அது முடிஞ்சதும் சொல்றேன்” என்று கிண்டலாக அறிவித்து தன்னுடைய கெத்தைக் காட்டினார் பிக் பாஸ். ‘அரிசிய கிண்டி ஹெல்ப் செய்த ஜோவிகா சின்ன வீட்டுக்கு போய் இன்னும் நல்லா கிண்டட்டும்’ என்று ஜோவிகாவை சின்ன வீட்டுக்கு அனுப்பினார். அர்ச்சனாவின் டார்ச்சர் காரணமாக எரிச்சலில் இருந்த விசித்ராவிற்கு இது பெரிய ஆறுதல். மகிழ்ச்சியுடன் ஜோவிகாவை கட்டி அணைத்துக் கொண்டார். பிறகுதான் அடுப்பு எரிய ஆரம்பித்தது. மக்களின் வயிறு குளிர ஆரம்பித்தது.

அக்ஷயா

தன் ராஜதந்திர நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்தார் பிரதீப். “மஞ்சள் கலர் சட்டையை நீ எடுத்துக்கோ.. நான் சிவப்பு கலர் சட்டை எடுத்துக்கிறேன்” என்று தேர்வு செய்வது போல, “நீ அர்ச்சனாவை டார்கெட் பண்ணு.. நான் தினேஷை டார்கெட் பண்றேன்.. இந்த வாரம் கமல் பர்த்டேன்றதால ஒரு வேளை எவிக்ஷன் இல்லாம போகலாம். எப்படி இருந்தாலும் அந்த வீட்ல இருக்கிறவங்களை மொத்தமா வெச்சி செய்யலாம்” என்று பிரதீப் சரமாரியான ஐடியாக்களை டெரராக சொல்லிக் கொண்டிருக்க அவரது பிரதம சிஷ்யையான மாயா, “அர்ச்சனாவை இந்த வாரமே தூக்கிடுவேன்” என்று அடியாள் ரேஞ்சுக்கு பேசிக் கொண்டிருந்தார்.

பூர்ணிமா

ரொமான்ஸ் செய்யும் லிஸ்டில் விஷ்ணுவும் குதிக்க விரும்புகிறார் போலிருக்கிறது. பூர்ணிமாவிடம் “இங்கே என்ன சொல்லுது ஜெஸ்ஸி?” என்று அவர் நைசாக ஒரு பிட்டைப் போட “ஒண்ணுமே கேட்கலை. ஒரு பட்டாம்பூச்சியும் பறக்கலை” என்று பூர்ணிமா சாமர்த்தியமாக எஸ்கேப் ஆக முயல “ஒரு கரப்பான் பூச்சி, ஈ கூடவா இல்ல?” என்று விஷ்ணு கேட்டது கிரேசி மோகன் பாணியில் ஒரு நல்ல நகைச்சுவை.

ஒரு அரவணைப்புடன் கையெழுத்தான உடன்படிக்கை!

நிக்சனும் ஐஷூவும் மீண்டும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, “எக்ஸ்கியூஸ் மீ.. பத்து நிமிஷம் எனக்கு ஐஸ் வேணும்” என்று கேட்டு நிக்சனை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு அமர்ந்தார் பிரதீப். பிறகு ஒரு ரகசிய உடன்படிக்கையை ஐஷூவிடம் முன் வைத்தார். “ நான் டைட்டிலுக்காக ஆடுகிறேன்.. நீயும் ஆடு. ஒரு கட்டம் வரைக்கும் நாம கூட்டாளிகளாக இருப்போம். உன்னை நான் பாதுகாக்கிறேன். நீ மற்றவர்களின் தகவல்களை எனக்குச் சொல்லு. நானும் எனக்கு தெரிந்ததை ஷேர் பண்றேன்.. டீல் ஓகேவா?” என்று பிரதீப் கேட்க “உன்னை எப்படி நம்பறது?” என்கிற ஒரே கேள்வியில் பிரதீப் அதுவரை நீளமாக ஊற்றிய ஊத்தப்பத்தை தலைகீழாக கவிழ்த்தார் ஐஷூ.

பிரதீப் – ஐஷூ

“நல்ல கேள்வி.. நம்பித்தான் ஆகணும்.. வேற வழியில்லை” என்று சொன்ன பிரதீப் “சரி.. வா.. டீல் ஓகே ஆனதை கொண்டாடலாம்.. ஹக் பண்ணிக்கலாம்” என்று வேண்டுமென்றே நிக்சனின் காதில் புகையை வரவழைத்தார். பிரதீப் அகன்றதும் “இஙக என்ன ஓடுது?” என்று மாயாவும் நிச்சனும் வந்து கேட்க “ரம்பம் போட்டுட்டாரு” என்று சாமர்த்தியமாக சொல்லி எஸ்கேப் ஆனார் ஐஷூ.

புதிய வரவுகளில் தினேஷூம் அர்ச்சனாவும் தங்களின் இருப்பை வெற்றிகரமாக காட்டிக் கொள்கிறார்கள். பாலாவும் அவ்வப்போது பாடுவதால் தெரிந்து விடுகிறார். நீளமான தலைமுடி காரணமாக பிராவோவின் தலையும் அவ்வப்போது தெரிகிறது. ஆனால் இந்த அன்னபாரதி என்கிற ஜீவன் மட்டும் எங்கே இருக்கிறார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிதாக வந்தவர்களில் யார் கேமை சரியாக விளையாடுகிறார்கள்? உங்களின் தேர்வை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours