சென்னை: “விஜய்க்கு தலைவருக்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன. விரைவில் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார்” என்று நடிகர் அர்ஜுன் பேசியுள்ளார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ‘லியோ’ வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “நேற்று இரவு ஒரு மணிக்கு கனடாவிலிருந்து ஒரு போன்கால் வந்தது. நீங்க எப்டி ‘லியோ’ல பொய் சொல்லலாம்னு ஒருத்தன் கேக்குறான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. படத்தில் ஒரு பெரிய பிரச்சினை வரும்போது யாரோ விஜயகாந்த் போல ஒருவர் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது மரியம் ஜார்ஜ் வந்து நிற்கிறார். செம்ம அறிமுகம். தியேட்டரே அதிருகிறது. தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய்” என மன்சூர் அலிகான் பேசினார்.
மடோனா செபாஸ்டியன் பேசுகையில், “இந்தப் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தபோது, பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் நடிக்கப் போகிறோம் என ஆர்வத்துடன் வந்தேன். என்னுடைய கதாபாத்திரம் குறித்து கேட்டபோது, ‘மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம். நம்பி வாங்க’ என்றார். அவர் கூறியது போல், அற்புதமான அனுபவமாக இருந்தது. குறுகிய காலத்தில் நான் பல நடிகர்களுடன் பணியாற்றினேன். விஜய் ரசிகர்கள், எல்சியூ ரசிகர்களுக்கு நன்றி” என மடோனா கூறினார்.
கவுதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், “நான் கேட்டது யோகன் அத்தியாயம் ஒன்று. ஆனால், நான் மனதார சொல்கிறேன் அவர் எனக்கு கொடுத்தது ‘லியோ’. இந்தப் படத்துக்காக லலித் கொடுத்த சம்பளம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. ‘வாரிசு’ படத்தில் ஸ்ரீகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், நடிக்க முடியவில்லை. விஜய் ரொமான்டிக் படங்களுக்கு சரியான நபர். அதுக்கான கதவு ஒருநாள் திறக்கும். அப்போ பண்ணுவாரு. அது நம்ம தேடிப் போகக் கூடாது. அதுவா வரணும்” என்றார்.
அர்ஜுன் பேசுகையில், “மக்கள் என்னை எங்கு பார்த்தாலும் ஜெய்ஹிந்துன்னு சொல்வார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு ‘த்தேறிக்க’ என்கிறார்கள். ‘மங்காத்தா’ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தேன். அதன் பிறகு ‘லியோ’வில் நடித்திருக்கிறேன். இரண்டு படங்களிலும் ஜோடியாக இல்லை. சிவாஜிக்கு பிறகு விஜய்யிடம் நேரம் தவறாமையை பார்க்கிறேன். 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே செட்டுக்கு வந்துவிடுவார். அவ்வளவு அர்ப்பணிப்புள்ள சிம்பிளான ஒருவர். விஜய்க்கு தலைவருக்கான தகுதி உள்ளன. விரைவில் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார்” என அர்ஜுன் பேசினார்.
> ரத்னகுமார் பேச்சு: “எவ்வளவு உயரே பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆகணும்” – ‘லியோ’ வெற்றி விழாவில் ரத்னகுமார் பேச்சு
+ There are no comments
Add yours