தேவ் ஆனந்தின் ‘கைடு’, ‘பம்பாய் கா பாபு’, ‘தேரே கர் கே சாம்னே’,’ `ஜூவல் தீஃப்’ போன்ற படங்கள் எல்லாம் எஸ்.டி.பர்மனின் இசைக்காகவே கொண்டாடப்பட்ட படங்கள். இவ்வளவுக்கும் 60களில் கடுமையான ஆஸ்துமா பிரச்னையில் அவதிப்பட்டாலும்கூட பிஸியாக ரெக்கார்டிங்குகளில் நாள்களைக் கழித்தார் தாதா. குடும்பத்தினர் இவரை உரிமையோடு கோபித்தாலும் கூட இவரின் இசைத் தாகம் தணியவில்லை.
“உடல்நிலை சரியில்லை என்றால் நாம் ஓய்வெடுப்போம். ஆனால், தாதா ரெக்கார்டிங்கில் மூழ்கிக் கிடப்பார்! அவரது வலி நிவாரணி இசைதான்!” என்று முன்பு ஒருமுறை பாடகர் கிஷோர் குமார் தாதா பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அந்த அளவுக்கு இசையைத் தவிர வேறு ஒன்றை அறியாதவராய் இருந்தார் தாதா. அந்த அறியாமை அவரே தனக்குத்தானே இட்டுக்கொண்ட கவசம் எனலாம். “ரெக்கார்டிங் இல்லாத பொழுதுகளை அவர் விரும்புவதில்லை” என்கிறார் அவரை நன்கு புரிந்து வைத்திருந்த மனைவி மீரா தாஸ் குப்தா. கணவரின் பெங்காளி படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் இவர்!
இவர் தரும் வெற்றிலைத் தாம்பூலம்தான் தாதாவின் மிகச் சிறந்த வினையூக்கி என்பார்கள் விவரமறிந்தவர்கள். வாசனை வஸ்துக்கள் கலந்து தன் மனைவி கிள்ளித்தரும் வெற்றிலைகளை வாய்க்குள் அதக்கிக் கொண்டால் வாயூறுவதோடு இசையும் ஊறும் என்பது தாதாவின் நம்பிக்கை. ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் தப்பாய் பாடியவர்களைக் கூட விட்டுவிடுவார். ஆனால், தன் மனைவி மடித்துத் தந்த தாம்பூலத்தைக் காணவில்லை என்றால் தாம்பூலம் போடாமலே எடுத்தவர்களின் வாயும் கன்னமும் சிவந்து விடும் என்கிறார்கள். தாதா அந்த அளவுக்கு கோபக்காரரும் கூட. இதனாலேயே மெட்டமைக்கும் பொழுதுகளில் எக்ஸ்ட்ரா வெற்றிலை கட்டுகள் ஸ்டூடியோ உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்குமாம்!
+ There are no comments
Add yours