வினோத் ராஜ் இயக்கத்தில், நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான படம் ‘கூழாங்கல்’.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. குறிப்பாக இந்தியா சார்பில் சிறந்த அயல்நாட்டுத் திரைப்பட பிரிவில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்ற இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ‘கூழாங்கல்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய விக்னேஷ் சிவன், “எங்கள் தயாரிப்பில் வெளியான முதல் படம் இது. ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக வித்தியாசமான, புதுமையான நல்ல படங்களைத் தயாரிக்கலாம் என்று நினைத்தபோது இப்படத்தைப் பார்த்தோம். சர்வதேச திரைப்பட விழாக்களில் கொண்டு சேர்த்தால் சர்வதேச அளவில் ரசிகர்கள் இந்த மாதிரியான படங்களைக் கொண்டாடுவார்கள். நிறைய விஷயங்கள் புதிதாகவும், மனநிறைவாகவும் இருக்கும்.
நானும் நிறையச் சர்வதேச திரைப்பட விழாக்களுக்குச் சென்றிருக்கிறேன். கான் திரைப்பட விழா (Cannes) போன்ற மற்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்குச் செல்லும் போது அவர்களின் சினிமா ரசனை வேறு மாதிரி இருக்கும். அந்த மாதிரியான திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆசை. எங்களுக்கு அதிகமான பெருமையை ஈட்டு கொடுத்த படம்தான் ‘கூழாங்கல்’. நாங்கள் எந்தத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினாலும் ஏதாவது ஒரு விருதை இப்படம் வென்று கொடுக்கும்.
குறிப்பாக ஆஸ்கருக்கான தேர்வுக்கு இந்தப் படம் பரிந்துரையிலிருந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என் வாழ்நாளில் மறக்கமுடியாத சந்தோஷமான அனுபவங்களை இந்தப் படம் எனக்குக் கொடுத்தது. கான் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் கூட என்னை ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர் என்றுதான் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
இயக்குநர் வினோத் தான் பார்த்த, உணர்ந்த விஷயங்களை வைத்து எடுத்த படம் இது. இந்தப் படத்தை மணிரத்னம் சார், வெற்றிமாறன் எனப் பலரும் பாராட்டினார்கள். படத்தை தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் சில காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இந்தப் படத்தின் ரசிகர்களுக்காகச் சர்வதேச தரத்திலிருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணித்தான் ஓ.டி.டி-யில் வெளியிட்டோம். இதை ஒரு தொடக்கமாகப் பார்க்கிறோம். எந்தத் திரைப்பட விழாவுக்குச் சென்றாலும் ‘கூழாங்கல்’ படத்தை அடையாளமாக எடுத்துச் செல்வேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
+ There are no comments
Add yours