“அப்பாவோட ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நானும் தங்கச்சியும் எங்க கையாலேயே செஞ்ச பொருட்களைத்தான் கிஃப்டா கொடுப்போம். பர்த்டே கேக்கையும் நான்தான் ஸ்பெஷலா செய்வேன். என்று அப்பாவின் பிறந்தநாளில் அவரை நினைத்து உருகியபடி பேசுகிறார் இயக்குநர் கே.வி. ஆனந்த் மகள் சாதனா.
ஒளிப்பதிவாளராக மட்டுமல்ல, ஒரு ஜனரஞ்சகமான ஹிட் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் நிரூபித்துக் காட்டிய கே.வி.ஆனந்தின் பிறந்தநாள் இன்று. ஆனால், அவர் உயிருடன் இல்லை. ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘கவண்’, ‘காப்பான்’ என அவர் இயக்கிய சூப்பர்ஹிட் படங்களால் இன்றும் ரசிகர்களுடன் உயிர்ப்போடு பயணித்துக்கொண்டிருக்கும் சூழலில், அவரது மகள் சாதனாவிடம் பேசினேன்.
“கடையில வாங்குறதையோ, ஆடம்பரப் பொருள்களையோ கிஃப்டா கொடுத்தா அப்பாவுக்குப் பிடிக்காது. அப்படியே தூக்கி ஓரமா வெச்சுடுவார். அதுவே அவருக்காக நாங்களே ஆசை ஆசையா ரெடி பண்ணின கிஃப்டா இருந்தா, ரொம்பவே ரசிச்சுப் பாராட்டுவார். பொக்கிஷம் போலப் பாதுகாக்கவும் செய்வார். ‘இந்த உலகத்துலேயே நீங்கதான் பெஸ்ட் அப்பா’ன்னு நாங்க சின்ன வயசுல எழுதிக் கொடுத்ததையெல்லாம் டெக்கரேஷன் பண்ணி வெச்சிருந்தார். அதுதான், அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. ரொம்ப சிம்பிளான மனிதர். தேவையில்லாததுக்கு எல்லாம் ரொம்ப செலவு பண்ணமாட்டார்.
ஆரம்பக் கட்டங்களில் ஒளிப்பதிவாளரா இருக்கும்போது எப்படி இருந்தாரோ, கடைசிவரைக்கும் அப்படியேதான் வாழ்ந்தார். பணம் வந்ததும் சிலருக்கு வாழ்க்கை மாறிவிடும். அப்பா எப்போதும் ஒரேமாதிரிதான். அவரு பெரிய இயக்குநர் ஆகிட்டார். நான் ரொம்ப நாளா ஐபோன் கேட்டுக்கிட்டே இருந்தேன். அவர் வாங்கியே தரல. அதுக்குக் காரணம், எளிமையான வாழ்க்கை வாழணும்ங்கிறதுதான். அப்பா மாதிரியேதான் நாங்களும் இப்போ வாழ்ந்திட்டிருக்கோம்.
அப்பா, நினைச்சிருந்தா எங்களை சினிமாவுக்குள்ளே கொண்டு வந்திருக்கலாம். அதை அவரும் விரும்பல. அதுக்குக் காரணம் எங்க சுதந்திரத்திலும் விருப்பத்திலும் தலையிடக்கூடாதுன்னு நினைச்சதாலதான். நாங்களே முடிவெடுக்கணும்னு நினைப்பார். எங்க விருப்பத்துக்குத் தடையா இருந்தது கிடையாது. எனக்கு ஆர்கிடெக் படிக்கணும்ங்கிறது ஆசை. என் தங்கை சினேகா டாக்டர் ஆக விரும்பினா. ரெண்டுப் பேரையுமே அவங்கவங்க துறையில சாதிக்க வெச்சிருக்கார்.
குறிப்பா, நாங்க ரெண்டுப் பேரும் பெண் குழந்தைங்க. பெரும்பாலான அப்பாக்கள் மாதிரி ரெண்டும் பெண் குழந்தைங்கன்னு என்னைக்குமே, அப்பா ஃபீல் பண்ணது கிடையாது. அப்பா ஒரு பெண்ணியவாதி. எங்களை ரொம்ப போல்டா வளர்த்திருக்கார். முக்கியமா, ‘நீங்க ரெண்டு பேரும் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. குறிப்பா, திருமணம் ஆகிட்டா, கணவரைச் சார்ந்திருக்கக்கூடாது. அப்படி இருந்தா, அடிமைப்பட்டுக் கிடக்கணும். வேலைக்குப் போகணும். உங்க உழைப்புல வாழணும். இண்டிபெண்டன்டா இருக்கணும்’ சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கார்.
ஒரு பிரச்னையோ, சூழலோ வந்தா அதை எப்படி எதிர்கொள்ளணும், அதிலிருந்து எப்படி மீண்டு வரணும்னெல்லாம் எங்களைத் தயார்ப்படுத்தி வெச்சிருக்கார். அப்பாவுக்கு ரொம்பப் பிடிச்சது செடி வளர்க்கிறதுதான். எங்க வீட்டுல இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைக்கும்போது, விவசாயத்துறை அதிகாரிகளை என்னைத்தான் போய் பார்த்துப் பேச வெச்சார். அதுக்குக் காரணம், ஒவ்வொரு விஷயத்தையும் நாங்களே எதிர்கொண்டு தெரிஞ்சிக்கணும்ங்கிறதுக்காகத்தான். எங்களுக்கு ஒரு நல்ல ஆசிரியர் அவர்.
ஆரம்பத்துல என் தங்கை எம்.பி.பி.எஸ் படிக்கக் கொஞ்சம் சிரமமா இருக்குன்னு ஃபீல் பண்ணப்போ, அவளை உட்கார வெச்சு, ‘நீ ஸ்மார்ட் கேர்ள். உன்னால நல்லா படிக்கமுடியும்’னு அழகா நம்பிக்கையூட்டினார். இப்போ, எம்.பி.பி.எஸ் பாஸ் பண்ணிட்டு வந்து ‘அப்பா உங்களை நான் பெருமைப்படுத்திட்டேன்’னு அப்பாவோட போட்டோ முன்னாடி விழுந்து ஆசீர்வாதம் வாங்கினா. அடுத்து, எம்.டி படிக்க நீட் தேர்வுக்காகத் தயாராகிட்டிருக்கா. டாக்டராகி நம்ம குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணணும்னு சொல்லிக்கிட்டே இருக்கா. அப்பாவோட வளர்ப்புதான் இதுக்கெல்லாம் காரணம்.
அப்பாவுக்குப் பெரிய பொழுதுபோக்குன்னா செடி வளர்க்கிறதும் விவசாயம் பண்றதும்தான். ஆரம்பாக்கத்துல இயற்கை முறையில தர்பூசணி விளைவிச்சு 15 ஆயிரம் ரூபாய் லாபமும் எடுத்தாரு. சினிமாவுல கோடி கோடியா சம்பாதிச்சார். ஆனா, விவசாயத்துல கிடைச்ச அந்த 15 ஆயிரம் கொடுத்த மனநிறைவு வேற எதிலும் கிடைக்கலன்னு சொல்வார். விவசாயம்னா அவருக்கு அப்படியொரு உயிரு.
எங்க வீட்டு பாத்ரூம்ல இருந்து எல்லா இடத்திலும் செடிங்கதான் வளர்த்துவந்தார். தினம் சமையலுக்குத் தக்காளி, கீரை, கத்தரிக்காய், பாகற்காய், பச்சைமிளகாய்னு வீட்டுத் தோட்டத்துலருந்து பறிச்சு சமைப்போம். அதைப் பெருமையா விரும்பிச் சாப்பிடுவார். ஓய்வா இருக்கும்போது, எங்களுக்கு ஆசையா சமைச்சும் கொடுப்பார்.
ஆனா, அப்பா எங்ககூட ரொம்ப நேரம் செலவிட்டதுன்னா, கடைசி மூன்று வருடங்கள்தான். எப்பவும் ஷூட்டிங்ல பிஸியா இருப்பார். எப்பவும் உழைப்பு உழைப்புதான். அப்படியொரு கடின உழைப்பாளியைப் பார்க்கவே முடியாது. அவரோட எல்லா படத்திலும் தகவல்களை ரொம்ப ஆழமா விரிவாகக் காட்டி ரசிகர்களுக்கு புரியவெக்கறதோட விழிப்புணர்வும் கொடுத்திருக்கார். ஒவ்வொரு படத்துக்கும் 40 புத்தகங்களாவது படிச்சிடுவார். வீடு முழுக்க புத்தகங்கள்தான். ‘காப்பான்’ படத்தின்போது கூட, டெல்லி போய் பிரதமரோட பாதுகாவலர்களைச் சந்தித்து தகவல்களைச் சேகரிச்சார். எந்த விஷயத்தையும் சரியா கொடுக்கணும்னு நினைப்பார். சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் உண்மையா இருந்தார். சமூகத்துமேலயும் அக்கறையா இருந்தார்.
பொதுவா, இயக்குநர்கள் வெளிநாடு ஷூட்டிங்னா குடும்பத்தையும் டூர் கூப்பிட்டுப் போவாங்க. ஆனா, தயாரிப்பாளருக்குத் தேவையில்லாத செலவு வெச்சுடக்கூடாதுன்னு நினைப்பார் அப்பா. இதுவரை எங்களை எந்த வெளிநாடு ஷூட்டிங்குக்கும் கூப்பிட்டுப் போனதில்லை. சொந்த காசுலதான் அழைச்சிக்கிட்டுப் போயிருக்கார். கொரோனா காலகட்டங்கள்லதான் அப்பாவோட அன்பு எங்களுக்கு முழுசா கிடைச்சது. எங்களோட செலவிட்ட நிமிடங்கள் ஒவ்வொன்னும் ரொம்ப அன்பானது; வேல்யூவானது. தினமும் கபிலன் வைரமுத்து அங்கிள் வருவாங்க. கொஞ்சநேரம் ஸ்கிரிப்ட் ஒர்க் போகும். அப்புறம், நானும் அப்பாவும் செடிகளுக்குத் தண்ணி ஊத்திக்கிட்டு ஜாலியா பேசிக்கிட்டிருப்போம்.
அப்பா, கடைசியா ஹாஸ்பிட்டல் போகும்போதுகூட ‘செடிக்கு தண்ணி ஊத்து’ன்னு என்கிட்ட சொல்லிட்டுப் போனார். அட்மிட் ஆனப்பவும் போன் பண்ணி ‘பப்பாளி செடிக்குத் தண்ணி ஊத்தும்மா. என்னை நினைச்சு யாரும் கவலைப்படாதீங்க. நான் சீக்கிரம் வந்துடுவேன். ஹாஸ்பிட்டல்ல நான் நல்லாருக்கேன். சாப்பாடுல்லாம் சூப்பரா இருக்கு. இங்கயும் ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருக்கேன். ஒரு வாரத்துல முடிச்சுடுவேன்’ன்னு கேஷுவலாதான் பேசிக்கிட்டிருந்தார்.
நாங்களும் அப்பாவோட வருகைக்காக நம்பிக்கையோட காத்திருந்தோம். அவர் வந்துடுவார்ன்னு நாங்களும் பெரிசா எடுத்துக்கல. ஆனா, அப்பா ஹாஸ்பிட்டல் சேர்ந்ததிலிருந்து அம்மா துடிச்சுப் போய்ட்டாங்க. எப்பவும் அப்பா நினைப்புதான். அந்தச் சூழலிலும் நான் பார்த்தே ஆகணும்னு, ஹாஸ்பிட்டல் போய் பார்த்துட்டு வந்தாங்க. ஆனா, அந்தக் கடைசி ரெண்டுநாள் நிலைமையே மாறிடுச்சு. இப்படியாகும்னு யாருமே எதிர்பார்க்கல” என்று தழுதழுத்தக் குரலில் பேசியவர், பின்பு இயல்புநிலைக்குத் திரும்பினார். அவரிடம், “அப்பா இல்லாத இந்த இரண்டு வருடங்களை எப்படிக் கடக்கிறீர்கள்? உங்கக் குடும்பம் இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டோம்.
“நாங்க எடுக்கும் ஒவ்வொரு முடிவின்போதும் அப்பா எங்களுக்கு சப்போர்ட்டிவா இருந்திருக்கார். எல்லா முடிவும் எங்களோடதா இருக்கும். ஆனா, ஒரு நண்பர் போல வழிகாட்டுவார். நான் மூத்தப் பொண்ணு. என் வாழ்க்கையில ஒரு முக்கியமான முடிவு எடுக்கும்போது, அப்பா இல்லாம போனது காலத்துக்கும் வலிதான். அது என்னோட திருமணம். எத்தனை பேரு வந்திருந்தாலும் எத்தனைப் பேர் வாழ்த்தியிருந்தாலும், அப்பாங்குற அந்த உறவுக்கும் அன்புக்கும் ஆசீர்வாதத்துக்கும் ஈடாகியிருக்குமா? அப்பா இல்லாத வெறுமை, வேதனையோடத்தான் தினம் நாள்களைக் கடத்திக்கிட்டிருக்கோம்.
அப்பா உயிரோட இருந்திருந்தா, எப்படி விமரிசையா என் கல்யாணத்தைப் பண்ணியிருப்பாரோ, அப்படித்தான் அம்மா பார்த்துப் பார்த்து பண்ணாங்க. குறிப்பா, ‘அயன்’ படத்துல நடிச்ச ‘நண்டு’ ஜெகன் அண்ணா, சொந்த அண்ணன் மாதிரியே எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செஞ்சார். எங்கக் கல்யாணத்துல அவரோட உழைப்பு ரொம்பப் பெருசு. இந்த நேரத்துல அவருக்கு நன்றியைத் தெரிவிச்சுக்குறோம். அவருக்கு அப்பாமேல இப்பவும் பெரிய மரியாதை இருக்கு. மத்தபடி, எங்கக் கல்யாணத்துக்கு விஜய் சேதுபதி சார், ஜீவா சார்லாம் வந்திருந்தாங்க. மணிரத்னம் சார் வந்து வாழ்த்தினார். சூர்யா சார் அவரோட மேனேஜர் மூலமா கிஃப்ட் அனுப்பினார். இப்போவரை, அம்மாகிட்ட எங்களை நலம் விசாரிப்பார் சூர்யா சார். ஹாரிஸ் ஜெயராஜ் சாரும் அப்படித்தான்.
அம்மா, தங்கச்சி, பாட்டின்னு எல்லோருக்குமே, என்னோட கணவர் விஷ்ணு ராஜை ரொம்பப் பிடிக்கும். மாப்பிள்ளையா இல்லாம எங்கக் குடும்பத்துக்கு மகனைப்போல இருக்கார். அப்பா உயிரோட இருந்திருந்தா அவரை ரொம்ப பிடிச்சிருக்கும். ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். கணவர்தான் அப்பாவோட அன்பையும் எனக்குச் சேர்த்துக் கொடுத்திட்டிருக்கார். என்னையும் என் குடும்பத்தையும் ரொம்ப நல்லா பார்த்துக்கிறார். அப்பா அவரை ஆசீர்வதிச்சுட்டுத்தான் இருப்பார்.
எங்க எல்லோரையும்விட அப்பா இல்லாதது அம்மாவுக்குத்தான் பேரிழப்பு. ஆனாலும் ரொம்ப ஸ்ட்ராங்கா குடும்பத்தைக் கொண்டுப் போயிட்டிருக்காங்க. அந்த தைரியத்தை அப்பா எங்களுக்கும் அம்மாவுக்கும் கொடுத்துட்டுப் போயிருக்கார். முக்கியமா, அப்பா அடையார்ல பெரிய வீடு கட்டினார். அந்த வீட்டைக் கட்டி முடிக்கக் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாச்சு. எங்கப் பாட்டிக்கூட ‘எதுக்குப்பா இவ்ளோ பெரிய வீடு?’ன்னு கேட்டதுக்கு, ‘ரெண்டு பொண்ணுங்க இருக்கு. நாளைக்கு அதுங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா, என் பேரக்குழந்தைங்க எல்லோரும் எங்க வந்து தங்குவாங்க? இந்த வீட்டுல எல்லோரும் சந்தோஷமா இருக்கணும். எல்லாத்தையும் யோசிச்சுதான் பெரிய வீடா கட்டுறேன்’ன்னு சொல்லியிருக்கார். இதுலயே அவர் எப்படிப்பட்ட அப்பாவா இருந்திருக்காருன்னு புரிஞ்சிருக்கும்.
எங்கக்கூட நேரம் செலவிடாம கடுமையா உழைச்சார். எல்லாம் நாங்க நல்லாருக்கணும்ங்கிறதுக்காகத்தான். அவரோட இழப்புக்குப்பிறகு, நாங்க எந்தப் பிரச்னையும் இல்லாம பொருளாதார ரீதியா நல்லபடியா இருக்கோம்னா, அவர் எங்களைப் பத்தி யோசிச்சதாலதான். ஆனா, அவர் ஆசை ஆசையா பார்த்துக் கட்டின வீட்டுல ஒன்றரை வருஷம்தான் வாழ்ந்தாரு. இப்போ நாங்களும் இந்த வீடும் அப்பாவோட நினைவுகளைச் சுமந்திட்டிருக்கோம். ஆனாலும் அப்பா எங்கக்கூடவே இருக்கிற மாதிரிதான் உணர்றோம். அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அவரே எங்களுக்கு அப்பாவா வரணும். ஹேப்பி பர்த்டே. லவ் யூ அப்பா!” என்று கண்கலங்கி, நெகிழ்கிறார்.
+ There are no comments
Add yours