‛லியோ’ பட வெற்றி விழாவுக்கு நிபந்தனையுடன் அனுமதி
30 அக், 2023 – 10:51 IST
சென்னையில் நவ., 1ல் நடக்கும் விஜய்யின் லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு போலீசார் நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.
மாஸ்டர் பட வெற்றிக்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த அக்., 19ல் வெளியான படம் ‛லியோ’. விஜய் உடன் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் 10 நாட்களில் உலகளவில் 500 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்துவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இசை வெளியீட்டு விழாவை பட தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், தற்போது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அதே நேரு உள்விளையாட்டு அரங்கில், லியோ படத்தின் வெற்றி விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டது.
அதன்படி, படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு போலீஸ் ஸ்டேஷனிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் ‛லியோ படத்தின் வெற்றி விழாவை வரும் நவம்பர் 1ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் கொண்டாட இருக்கிறோம். விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். எனவே பாதுகாப்பு வழங்குமாறு’ கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கடிதத்திற்கு போலீஸ் தரப்பில் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‛விழா எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும், எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. முக்கிய விருந்தினர்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள்?’ என கேள்வி எழுப்பியதுடன், விழாவுக்கு 5000 பேர் மட்டுமே இருக்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் போலீசார் கடும் நிபந்தனைகளுடன் நவ., 1ல் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் லியோ பட வெற்றி விழாவுக்கு அனுமதி வழங்கி உள்ளனர். அதன்படி 200 முதல் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பஸ்ஸில் வர அனுமதி கிடையாது. சொன்ன நேரத்தில் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். இருக்கைளுக்கு ஏற்றபடி ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
+ There are no comments
Add yours