அர்ச்சனா நடத்திய ரேங்க்கிங் டாஸ்க்
முதலிடத்தை ஜோவிகாவிற்கு வழங்கிய அர்ச்சனா, ‘மரியாதையாக பேசினால் நன்று’ என்கிற உபதேச குறிப்பையும் கூடவே வழங்கினார். இரண்டாவது இடம் மாயாவிற்கு. மூன்றாவது இடம் விசித்ராவிற்கு. “இந்த வயதிலும் இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்தது ஒரு சாதனை” என்பது போல் அர்ச்சனா சொன்னதும் விசித்ராவின் முகத்தில் அதிக வெளிச்சம். கடைசி இடம் வினுஷாவிற்குக் கிடைத்தது.
ஒரு சூழலில் புதிய நபர்கள் உள்ளே நுழையும்போது பழைய நபர்கள் அதிர்ச்சி அடைவதும் இடையூறாக எண்ணுவதும் உலக மரபுதான். பிறகு இது பழகி விடும். புதியவர்களோடு நெருக்கமான கூட்டணி கூட அமையலாம். ஆனால் பெண்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கு இது புரியவில்லை.
“சரியா ஹோம் ஒர்க் பண்ணாமயே வந்து நம்மள ஜட்ஜ் பண்றாங்க” என்று மாயா சொல்ல, “அவங்க யாரு.. நம்மை மதிப்பிடுவதற்கு?” என்று ஆவேசப்பட்டார் ஜோவிகா. கூடவே நின்று அனத்தினார் பூர்ணிமா. இந்த மூவர் கூட்டணி பாத்ரூம் ஏரியாவில் நின்று இது பற்றி தனியாகப் பேசிக் கொண்டிருந்தது.
நான்காவது வைல்டு கார்டு என்ட்ரி, ஆர் ஜே பிராவோ. வால்பாறை சொந்த ஊர் என்றாலும் துபாயில் நீண்ட காலமாக வசிக்கிறாராம். அங்குள்ள ரேடியோ பிரபலமாம். துபாய் தமிழர்களை கவர்வதற்காக இவர் நிகழ்ச்சிக்குள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
+ There are no comments
Add yours