இந்தியாவில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி வரும் அமைப்பு ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’. இவ்வமைப்பு ‘பாடறிவோம் படிப்பறிவோம்’ அமைப்புடன் இணைந்து 108-மணி நேர இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சி குறித்து இக்குழுவின் செயல் அதிகாரி நாகேஸ்வர் சுந்தரம் கூறியதாவது:
மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முன்கூட்டியே கண்டறிந்து அகற்றவும் 10008 பெண்களுக்குப் பரிசோதனை செய்யவும், நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியை கடந்த 18ம் தேதி தொடங்கி, 22ம் தேதிவரை 108 மணி நேர, தொடர் நிகழ்ச்சியாக நடத்தினோம்.
இசை ஆர்வலர்களுக்கு மேடை அமைத்து தரும் ‘பாடறிவோம் படிப்பறிவோம்’ மற்றும் ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’, ‘ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா’, கல்யாண்மயி அமைப்புகள் ஒருங்கிணைந்து சென்னை விமான நிலையத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தின.
பின்னணிப் பாடகர் முகேஷ், ‘கடம்’ கார்த்திக், கோபால கிருஷ்ணன், இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர் உதயப்பிரகாஷ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடக்க நாளில் கர்னாடக இசையிலான பாடல்களும் பக்திப் பாடல்களும் பாடப்பட்டன. பின், திரை இசைப் பாடல்கள் பாடப்பட்டன. பிரபல பாடகர்களுடன் 120-க்கும் மேற்பட்ட வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு இதுதான் முதல் மேடை நிகழ்ச்சி என்பது கூடுதல் சிறப்பு.
+ There are no comments
Add yours