காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்! | Actor Sivakumar Birthday

Estimated read time 2 min read

கருப்பு வெள்ளையிலிருந்து சினிமா கலருக்கு மாறியிருந்த நேரம். எம்ஜிஆர், சிவாஜியுடன் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்த சிவகுமார், தனி கதை நாயகனாக வலம் வரத் தொடங்கியிருந்தார். அவர் நடித்திருந்த ‘அன்னக்கிளி’ படத்தில்தான் இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றங்களைக் கண்ட சினிமாவைப் போலவே நடிகர் சிவகுமாரின் கேரியரிலும் நிறைய மாற்றங்கள் இருந்தன. குடும்பக் கதைகளை மையமாக கொண்ட திரைப்படங்களில் சிவகுமார் அதிகமாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவர் நடித்த படத்தில் இருந்து தனது இசை அமைப்பாளர் பயணத்தை தொடங்கிய இளையராஜாவும், சிவகுமார் நடித்த பல வெற்றித் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். அந்த வரிசையில், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி உள்ளிட்ட படங்களை ரசிகர்கள் இன்றளவும் ரசிக்கவே செய்கின்றனர்.

அதிக அறிமுகம் இல்லாத நடிகர்களின் திரைப்படங்களுக்கே திகட்டாத பாடல்களை கொடுக்கும் இளையராஜா, தனது முதல் படத்தின் நாயகனின் படங்களுக்காக இசை அமைத்த பாடல்கள் எல்லாமே காலம் கடந்தும் தனித்து நிற்பவை . அந்தப் பாடல்கள் நிகழ்காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் இடையிலான காலக் குறியீடுகளாக ரசிகர்களின் மனங்களில் உறைந்திருப்பவை. அந்தவகையில், இளையராஜாவின் இசையில் சிவகுமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள சில பாடல்கள் இவை.

சின்ன கண்ணன் அழைக்கிறான்: “கவிக்குயில்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு மயங்காதவர் எவரும் இல்லை. நாயகியின் மனதில் நினைக்கும் ஒரு ராகத்தை கண்டுபிடித்து நாயகன் பாடும் வகையில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டிருக்கும். பாலமுரளி கிருஷ்ணாவின் குரலும், இளையராஜாவின் புல்லாங்குழலும் உண்மையில் அந்த கண்ணனை எங்கிருந்தாலும் அழைத்து வந்துவிடும் உணர்வைக் கொடுக்கும்.

மயிலே மயிலே: “வாலியின் கைவண்ணத்தில் எழுதப்பட்ட இந்தப் பாடலை, எஸ்பிபி உடன் இணைந்து ஜென்சி பாடியிருப்பார். இப்பாடலில் வரும் இடையிசைகளும், கொஞ்சி கொஞ்சி பாடும் ஜென்சியின் குரலும், மயிலிறகைவிட மிருதுவாக இருக்கும். “கடவுள் அமைத்த மேடை” திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றிருக்கும்.

வா பொன் மயிலே: “பூந்தளிர்” திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருப்பார். இத் திரைப்படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே அதிகம் ரசிக்கப்பட்டவை. பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். எஸ்பிபி-யின் தனிப்பாடல்களை விரும்பிக் கேட்பவர்களின் பட்டியலில் நிச்சயம் இந்தப் பாடல் இடம்பிடித்திருக்கும்.

என் கண்மணி: “சிட்டுக்குருவி” திரைப்படத்தில் வரும் இப்பாடலை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். காரணம், இளையராஜாவின் இசை நுட்பங்களில் ஒன்றான கவுன்டர் பாய்ன்ட் குறித்து விளக்க இந்தப் பாடலைத்தான் அதிகம் குறிப்பிடுவார்கள். அதாவது பாடகர்கள் ஒரே நேரத்தில், வேறு வேறு லிரிக்ஸை பாடும் உக்தி அது. இந்தப் பாடலை எஸ்பிபி உடன் சுசிலா பாடியிருப்பார். அந்த காலத்து அரசுப் பேருந்தில் நடக்கும் ரொமன்ஸ் பாடலான இதுதான், இன்றுவரும் பேருந்து பாடல்களுக்கு எல்லாம் முன்னோடி.

https://www.youtube.com/watch?v=f448_EqundE

மஞ்சள் நிலாவுக்கு: “முதலிரவு” திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் ரயில் பயணங்களின்போது கேட்கும் பிளே லிஸ்டில் கட்டாயம் இடம்பெறும் பாடல். இந்தப் பாடலில் வரும் இடையிசை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வைத் தரும். கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலை ஜெயசந்திரன் உடன் இணைந்து சுசிலா பாடியிருப்பார்.

உச்சி வகுந்தெடுத்து: “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” திரைப்படத்தில் வரும் இந்தப்பாடல் ஒரு ஐகானிக் வகை பாடல். தனது மனைவி குறித்த ஊராரின் ஏச்சுப் பேச்சுக்களை எல்லாம் ஒரு பாடல் வழியே சோகத்துடன் கொட்டித் தீர்த்த இந்தப் பாடல் பல ஆண்டுகளாக சோகப்பாடல் பட்டியலில் தவறாது இடம்பிடித்திருக்கும். அதுவும், எஸ்பிபி பாடலை பாடியிருக்கும் விதமே சிவகுமாரின் மனக்குமுறலை எல்லாம் நமக்கு கடத்தியிருக்கும்.

இளஞ்சோலை பூத்ததால்: வைரமுத்துவின் வரிகளில் வரும் இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் “உனக்காகவே வாழ்கிறேன்”. எஸ்பிபி குரலில் வரும் இந்தப் பாடலை காலை நேரங்களில் கேட்பது அத்தனை சுகமாக இருக்கும். இன்றும் பாடல் போட்டிகளில் பங்குபெறும் பலரும் இந்தப் பாடலை பாடி வருவதை பார்க்க முடியும்.

பாடும் வானம்பாடி: “நான் பாடும் பாடல்” திரைப்படத்தில் வரும் இப்பாடல் வரும். முத்துலிங்கத்தின் வரிகளில் எஸ்பிபி குரலில் வரும் இப்பாடல் பலரது ஆல்டைம் பேஃவரைட் பாடல். சிவகுமார் – அம்பிகா காம்பினேஷனில் வரும் காட்சிகளுக்கு இளையராஜாவின் இசை செய்யும் மாயங்களை இப்பாடல் கொண்டிருக்கும்.

பூமாலை வாங்கி வந்தாள்: சிவகுமாரின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் “சிந்து பைரவி” திரைப்படத்துக்கே முதல் இடம். ஒரு கர்நாடக சங்கீத கலைஞராக இந்த திரைப்படத்தில் அவர் வாழ்ந்திருப்பார். இந்தப் பாடலை அவர் மேடையில் அமர்ந்து பாடும் தொனியும், நடிப்பும் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் நமக்கு எளிதாக சொல்லிவிடும். ஜேசுதாஸ் குரலில் இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம் சிவகுமார் நம் மனங்களுக்குள் அமர்ந்து கச்சேரி செய்வார்.

ஊமை நெஞ்சின் பந்தம்: வைரமுத்துவின் வரிகளில் வரும் இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருப்பார். எப்போதாவது தனிமையில் இருக்கும்போது அல்லது இரவுநேர பயணங்களின்போது இந்தப் பாடலைக் கேட்பது தனிசுகமானது. “மனிதனின் மறுபக்கம்” திரைப்படத்தில் வரும் இப்பாடலும், பாடலில் தோன்றும் சிவகுமாரின் உருவமும் காலத்தால் அழிக்கமுடியாதது.

இன்று – அக்.27 – நடிகர் சிவகுமார் பிறந்தநாள்

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours