வாஞ்சிநாதன் முருகேஷனின் ஒளிப்பதிவும், தியாகுவின் படத்தொகுப்பும் படத்திற்கு எந்தப் பலத்தையும் சேர்க்கவில்லை. பழநி வட்டார கிராமங்களையும் அதன் வீடுகளையும் காட்சிகளில் நேர்த்தியாகவும் பாடல்களில் அழகாகவும் காட்டிய விதம் மட்டும் கொஞ்சம் ஆறுதல்! இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை. ‘பிடிச்சுருக்கா’ என்ற பாடலைப் ‘புதுமையாக’ கொடுக்க முயன்று, நம்மைச் சோதிக்கிறார். பின்னணி இசையில் இரண்டாம் பாதியில் மட்டும் இறங்கி விளையாடியிருக்கிறார். ஆனாலும், சில காட்சிகளில் ‘விடுதலை’ படத்தின் பின்னணி இசையை நினைவூட்டுகிறார். சுசீந்திரனின் திரைக்கதையும், செல்லா செல்வத்தின் வசனங்களும் இறுதிக்காட்சியில் மட்டும் வாய் திறக்கிறது.

90களின் பிற்பகுதியில் நடக்கும் கதைக்களத்திற்கு, 90களுக்கும் முந்தைய திரைமொழியைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். வாய்ஸ் ஓவர்கள், மேடை நாடக பாணியிலான கதாபாத்திர அறிமுகங்கள், காட்சியமைப்புகள், நடிகர்களின் செயற்கையான நடிப்பு, கதைக்களத்துக்கே செல்லாமல் நீளும் சுவாரஸ்யமற்ற திரைக்கதை, நேர்த்தியற்ற தொழில்நுட்ப முயற்சி… என முதல்பாதி முழுவதுமே முதிர்ச்சியற்ற திரையாக்கமே வெளிப்படுகிறது.
ஒரு கிராமத்தைக் கையில் எடுத்திருக்கும் இயக்குநர், அக்கிராமத்தின் மக்கள், அவர்களின் வாழ்வியல், தொழில், திருவிழா, சாதிகளுக்கு இடையிலான உறவு போன்ற புறச்சூழலையே பேசாமல், வெறும் முதன்மை கதாபாத்திரங்களை நம்பியே களமிறங்கியிருக்கிறார். அக்கதாபாத்திரங்களும் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல், வழக்கமான சினிமா கதாபாத்திரங்களாகவே வருகின்றன, பேசுகின்றன, போகின்றன. இதனாலேயே ஆக்ஷன் கட்டுக்கு இடையே சிக்கித் தவிக்கும் படமாக இது மாறிவிடுகிறது.
+ There are no comments
Add yours