ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘REBEL’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்குகிறார். மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிடப்பட்டிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், “1980-களில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் கதை, கல்லூரியை களமாக கொண்டிருக்கிறது. இப்படத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்” என்றார்.
போஸ்டர் எப்படி?: பெட்ரோல் குண்டை கையில் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் அதை எறிய தயாராக இருக்கிறார். போராட்டம் நடக்கும் பகுதியில் செங்கொடிகள் உயர்ந்து நிற்கின்றன. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
+ There are no comments
Add yours