அரேபிய கதையில் இருந்து உருவான ‘பாக்தாத் பேரழகி’ | Baghdad Perazhagi movie analysis

Estimated read time 1 min read

அரேபியக் கதையான ஆயிரத்தொரு இரவுகளில் இருந்து எம்.ஜி.ஆர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த ‘குலேபகாவலி’யை இயக்கிய டி.ஆர்.ராமண்ணா, மீண்டும் ஓர் அரேபியக் கதையைப் படமாக்கினார். அது ‘பாக்தாத் பேரழகி’. ‘குலேபகாவலி’கதையையே கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி உருவான கதை இது.

குவிஸ்தான் நாட்டுக்கு வரும் நடன அழகி சுபைதா, நாட்டின் மன்னர் மனதில் குடியேறுகிறார். பிறகு, அவளும் அவள் சகோதரன் முராஸும் நாட்டை கைக்குள் கொண்டு வருகிறார்கள். பட்டத்து ராணி சிறையில் அடைக்கப்படுகிறார். காட்டுவாசிகளிடம் மாட்டிக்கொள்கிறார், இளவரசி. நாடற்றவன் ஆகிறான் இளவரசன் அப்துல்லா. பாக்தாத் பேரழகி மும்தாஜ் நடத்தும் போட்டிகளில் வெற்றி பெரும் இளவரசன், அவள் மனதையும் வெல்கிறான். அவள் உதவியுடன் நாட்டுக்கு எதிரானவர்களை அழித்து ஆட்சியை எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை.

பேரழகி மும்தாஜாக ஜெயலலிதா, இளவரசனாக ரவிச்சந்திரன், சுபைதாவாக சிஐடி சகுந்தலா, இளவரசியாக ஜெயசுதா, ராணி கதீஜாவாக சாவித்திரி, தளபதி முராஸாக ஆர்.எஸ்.மனோகர், மன்னர் சுல்தான் செய்யது அலி ஹாசனாக மேஜர் சுந்தர்ராஜன், ராஜகுரு சர்தாராக அசோகன், நாகேஷ், வி.கே.ராமசாமி உட்பட ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம்.

ஈஸ்ட்மென் கலரில் உருவான இந்தப் படத்தின் பிரம்மாண்ட அரங்கங்களும் எம்.ஏ.ரஹ்மானின் ஒளிப்பதிவும் பாராட்டப்பட்டன. இந்தப் படத்துக்குக் கதை வசனம் எழுதியது ரவீந்தர் என்ற காஜா முகைதீன். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’என அழைக்கப்படும் இவர், எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் கண்ணதாசனுடன் இணைந்து வசனம் எழுதியவர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் புலமைப்பித்தன் பாடல்கள் எழுதியிருந்தார். கேள்விகேட்டு பதில் சொல்லும் ‘நவாப்புக்கு ஒரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லய்யா’ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தில் ஜெயலலிதாவுக்கு ஆடல் பாடலோடு, வாள் சண்டைக் காட்சிகளும் உண்டு. அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் ஜெயலலிதா. நாகேஷ், சச்சு, வி.கே ராமசாமி, தேங்காய் சீனிவாசன் காமெடி பகுதியைக் கவனித்துக்கொண்டார்கள். 1973ம் ஆண்டு இதே நாளில் வெளியான ‘பாக்தாக் பேரழகி’ பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours