1970களில் ஸ்டூவர்ட்புரம் என்றொரு ஊரில் வாழ்ந்த நாகேஸ்வர ராவ் என்னும் `ராபின்ஹுட்’டைப் பற்றிய படம் இது.
பிரதமர் அலுவலகத்திலிருந்து DSP விஸ்வநாத் சாஸ்திரிக்கு (முரளி ஷர்மா) அழைப்பு விடுக்கப்பட, அவர் டெல்லி விரைகிறார். உளவுத்துறை அதிகாரி, தேசியப் பாதுகாப்பு அலோசகர் ஆகியோர் அந்த மீட்டிங்கில் இருக்கின்றனர். ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ (ரவி தேஜா) பற்றித் தெரிய வேண்டும் என்று முரளி ஷர்மாவிடம் கேட்கப்பட, “நாகேஸ்வர ராவ் பத்தி தெரிஞ்சுக்கணும்னா, அதுக்கு முதல்ல ஸ்டூவர்ட்புரத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும்” என்று ‘கே.ஜி.எஃப்’ பாணியில் தொடங்குகிறது ஃப்ளாஷ்பேக்!
‘எங்கு, எப்போது கொள்ளையடிக்கப் போகிறேன்’ என்பதை போலீஸுக்கு முன்னரே தகவல் கொடுத்துவிட்டு கொள்ளையடிப்பதுதான் நாகேஸ்வர ராவ் ஸ்டைல். அப்படி அவர் அடுத்ததாக பிரதமர் வீட்டில் கொள்ளையடிக்க இருப்பதாக தகவல் அனுப்பியிருக்கிறார் என்றும், அதனால்தான் முரளி ஷர்மா டெல்லி வரவழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொல்லி நம்மை அதிர வைக்கிறார்கள்.
நாகேஸ்வர ராவ் c/o ஸ்டூவர்ட்புரம் என்று இருந்த காலம் போய், ஸ்டூவர்ட்புரம் c/o நாகேஸ்வர ராவ் என்ற மாற்றம் நிகழ்கிறது. அதற்கு முக்கிய காரணம், நாகேஸ்வர ராவின் பயமறியா பல சம்பவங்கள்.
இந்த நாகேஸ்வர ராவைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள மாறு வேடத்தில் (எதே!) ஸ்டூவர்ட்புரம் விரைகிறார், உளவுத்துறை அதிகாரி ராகவேந்திர ராஜ்புத் (அனுபம் கேர்). நாகேஸ்வர ராவ் எதற்காகக் கொள்ளையடிக்கிறார், அவற்றையெல்லாம் என்ன செய்கிறார், ஸ்டூவர்ட்புரத்தில் நிகழும் மாற்றங்கள் என்னென்ன, அவரின் தனிப்பட்ட வாழ்க்கை கதை என்ன… ஆகியவற்றை புனைவு கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் வம்ஸீ.
`மாஸ் மஹாராஜா’ ரவி தேஜா அவரது ஜோனிலிருந்து முழுவதுமாக விலகி எடுத்துக்கொண்ட கதாபாத்திரத்திற்கான நியாயத்தைச் செய்ய கடும் உழைப்பைப் போட்டிருக்கிறார். சில ஹீரோயிச மொமன்டுகள் நன்றாகவே வொர்க் ஆகியிருக்கின்றன. ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். சில இடங்களில் மிகவும் முதிர்ச்சியான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
முரளி ஷர்மாவுக்கு வழக்கமான கதாபாத்திரம்தான் என்றாலும் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஒரு நீண்ட கேமியோவில் அனுபம் கேர். ‘மேடம் ப்ரைம் மினிஸ்டர்’ என்று வசனம் பேசும்போது, உளவுத்துறை அதிகாரிக்குரிய மிடுக்கு தெரிகிறது. ஹரீஷ் பரேடி, சுதேவ் நாயர், ஜிஸ்ஸு செங்குப்தா ஆகியோருக்கு நல்ல கதாபாத்திரங்கள். நெகட்டிவ் ரோலை பாசிட்டிவாகச் செய்திருக்கிறார்கள். நுபுர் சனோன், அனு கீர்த்தி வாஸ், காயத்ரி பரத்வாஜ் இவர்கள் மூவரும் மிகவும் குறைவான நேரம்தான் வருகிறார்கள். நாசர் கைத்தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ரவி தேஜாவுக்கான மாஸையும் நாகேஸ்வர ராவ் செய்த ஹீரோயிசத்தையும் இணைத்து இயக்குநர் வம்ஸீ பல இடங்களில் அப்ளாஸ் வாங்குகிறார். ஶ்ரீகாந்த் விஸ்ஸாவின் வசனங்கள் படத்திற்கான பில்டப்பையும் மாஸையும் அதிகரிக்கின்றன.
“அவன் அரசியல்ல இருந்திருந்தா சாதுர்யத்தால நிச்சயம் தேர்தல்ல ஜெயிச்சிருப்பான், அவன் விளையாட்டுத் துறையில இருந்திருந்தா, திறமையால நிச்சயம் இந்தியாவுக்கு பல பதக்கங்களை வாங்கிக் கொடுத்திருப்பான், ராணுவத்துல சேர்ந்திருந்தா தைரியத்தால போர்ல ஜெயிச்சிருப்பான். ஆனா, துரதிஷ்டவசமா அவன் க்ரிமினலாகிட்டான்”,
“காட்டு விலங்குகள் கூட ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் பால் குடிச்சுதான் வளரும். ஆன, இவன் ரொம்ப சின்ன வயசுலயே ரத்தம் குடிச்சு வளர்ந்தவன்”,
“சிலரோட வரலாறு கண்ணீரால எழுதப்படும், சிலரோடது ரத்தத்தால எழுதப்படும். ஆனா, நாகேஸ்வர ராவோடு வரலாறு கண்ணீராலும் ரத்தத்தாலும் சேர்த்து எழுதப்பட்டிருக்கு” என்பதாக பில்டப் செய்கின்றனர்.
ஆனால், இப்படியான வசனங்களுக்குப் போட்ட உழைப்பை காட்சிகளுக்கும் போட்டிருந்தால், பன்ச் வசனங்கள் இல்லாமலே அந்த ஹீரோயிஸ ஃபீல் நமக்கு வந்திருக்கும்.
முதல் பாதி முழுக்க நாகேஸ்வர ராவின் கொள்ளை, அவர் எப்படி ராபின்ஹுட்டானார் என்பதை முரளி ஷர்மா வாயிலாக சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியில் ஏன் அவற்றையெல்லம் செய்தார், அதனால் என்னவெல்லாம் நேர்ந்தது என்பதை நாகேஸ்வர ராவின் குருவான நாசர் வாயிலாகத் தெரியப்படுத்தியிருப்பது சிறப்பு!
ஒளிப்பதிவாளர் மதியின் பணி பாராட்டுக்குரியது. குறிப்பாக, ஸ்டன்ட் காட்சிகளில் வாவ்! பீரியட் போர்ஷன் என்பதால் கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா கிடைக்கும் இடத்தில் நம்பகத்தன்மையைக் கூட்ட உழைத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.
ராம் லக்ஷ்மன், பீட்டர் ஹெய்ன், ஜோஷ்வா, வெங்கட், ராகுல் – நிகில் என ஒரு பெரும் படையே ஆக்ஷன் சீக்வென்ஸிற்காக உழைப்பைப் போட்டிருக்கிறது. நிறைய இடங்களில் ஆச்சர்யப்பட வைத்தாலும் ஒரு கட்டத்தில் ‘என்னடா இது’ என்றும் சொல்ல வைக்கின்றன ஸ்டன்ட் காட்சிகள். வில்லன் டீமில் பார்ப்பவர்களை எல்லாம் தலையை வெட்டுகிறார், கால்களை வெட்டுகிறார் நாகேஸ்வர ராவ். கறிக்கடையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஆட்டைப்போல அடியாட்கள் தலை, கால், கை வெட்டப்பட்டு தொங்கவிடப்படுகிறார்கள்.
நுபுர் சனோனும் அவர் வரும் காட்சிகளும் இப்படியான படத்திற்கு ஒட்டவேயில்லை. படம் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கும்போது வரும் லவ் போர்ஷன் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. நாகேஸ்வர ராவ் ஸ்டூவர்ட்புரத்திற்காக என்னென்ன தியாகத்தை எல்லாம் செய்திருக்கிறார் என்பதை இரண்டாம் பாதிக்கு நகர்த்தவே முதல் பாதியில் காதல் டிராக்கை நுழைத்து நேரம் கடத்திய ஃபீல்! அதிலும் வெறும் கிளாமருக்காகவே நுபுர் சனோன், அனு கீர்த்தி வாஸ் ஆகியோரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘தெலுங்கு சினிமால எல்லாம் மாறிடுச்சு. ஆனா இது மட்டும்…’ என்று நாமும் மைண்ட் வாய்ஸில் பன்ச் பேச வேண்டியிருக்கிறது.
சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால், இடையில் வரும் இதுபோன்ற தேவையில்லாத காட்சிகள் அயர்ச்சியைக் கொடுக்கின்றன. இதனாலேயே, படம் கிட்டத்தட்ட மூன்று நேரம் ஓடுகிறது. எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கொஞ்சம் மனது வைத்திருத்தால் படத்தின் இடையில் நாம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றைப் பார்த்திருக்கும் தேவை இருந்திருக்காது.
படம் ஆரம்பிக்கும்போதே, ‘Inspired from True Rumours’ என்ற கார்டுடன்தான் தொடங்குகிறார்கள். டைகர் நாகேஸ்வர ராவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சில விஷயங்களை மட்டுமே எடுத்திருக்கிறார்கள். மற்றவை எல்லாம் புனைவுதான்! அதனால், கொஞ்சம் இஷ்டத்துக்கு இறங்கி ஆடியிருக்கிறார்கள். வரலாற்றில் புனைவு இருக்கலாம். ஆனால், இங்கு புனைவிற்குள்தான் ஆங்காங்கே வரலாறு தென்படுகிறது. இதனை பயோபிக் என்று சொல்வதை விட பீரியட் ஆக்ஷன் டிராமா என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.
படத்தின் டோனும் பில்டப்பும் ‘கே.ஜி.எஃப்’ உள்ளிட்ட பல ஹீரோயிஸ படங்களை நினைவுப்படுத்துகின்றன. இன்ட்ரோ காட்சியில் இடம்பெற்றிருக்கும் கிராஃபிக்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். காதல், பாடல் போன்ற கமர்ஷியல் விஷயங்களைக் குறைத்து, சொல்ல வந்த விஷயத்தை (டைகர் நாகேஸ்வர ராவின் வாழ்க்கை) சரியான மேக்கிங்கில் சொல்லியிருந்தாலே மற்ற படங்களில் இருந்து விலகி, தனித்து தெரிந்திருக்கும்.
ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லப்போகிறோம் என்றால், அது மொழி கடந்து மக்களை போய் சேர வேண்டும். படத்தில் இருக்கும் ஓவர் டோஸ் மசாலா வாடை அதை செய்யத் தவறியிருக்கிறது.
தெலுங்கு கமெர்ஷியல் ஆக்ஷன் படங்களை ரசிக்கும் ரசிக்கும் நபர்களுக்கு வேண்டுமானால் `டைகர் நாகேஸ்வர ராவ்’ நல்லதொரு என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும்!
+ There are no comments
Add yours