நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் வெளியாகியுள்ள படம் லியோ. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
முக்கியமாக விஜய்க்கு அதிக ரசிகர்களைக் கொண்ட கேரள மாநிலத்தில் படம் வசூலைக் குவித்து வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல இன்று கேரளா சென்றார்.
முதல்கட்டமாக பாலக்காடு, திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார். அதன்படி இன்று காலை பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரோமா திரையரங்கிற்குச் சென்றார். அவரது வருகையை ஒட்டி தியேட்டரில் ஏராளமான விஜய் ரசிகர்கள் குவிந்தனர்.
முதல்நாள் முதல் காட்சியைப் போல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கினார்கள். லோகேஷ் பேசும்போது, எல்லோரின் சார்பாக தான் இங்கு வந்துள்ளேன். ரொம்ப நன்றி. லவ் யூ ஆல்.” என்றார்.
அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். ரசிகர்களுடன் லோகேஷ் எடுத்த செல்ஃபி வைரலாகி வருகிறது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்களின் கூட்ட நெரிசால் லோகேஷ் நகர முடியாமல் தவித்தார்.
படியில் இருந்து இறங்கும்போது ஸ்லிப் ஆகி, அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தைக் கட்டுப்படுத்தி லோகேஷை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், கேரள ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்தும், சிறிய காயத்தால் மற்ற இடங்களுக்குச் செல்லவில்லை எனவும், இதனால் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் பதிவிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours