Bigg Boss 7 Day 23: `நீ ரொம்ப அழகா இருக்க!' – அலப்பறையைத் தொடங்கிய அடுத்த காதல் ஜோடி!

Estimated read time 1 min read

இருப்பது போதாதென்று, வீட்டில் இன்னொரு ரொமான்ஸ் டிராக்கும் இணைந்து விடும் போலிருக்கிறது. மணி -ரவீனா, நிக்சன் – ஐஷூ செய்யும் அலப்பறைகளை வேடிக்கை பார்த்த பூர்ணிமா, ‘எங்க கிட்டயும் சீப்பு இருக்கு, நாங்களும் சீவுவோம்’ என்று முடிவு செய்தாரோ, என்னமோ, ‘ஏய்.. நீ ரொம்ப அளகா இருக்கே’ என்று விக்ரமிடம் சொல்ல, தேன் குடித்த Hyena-வைப் போல அவரின் முகத்தில் பரவசம் வழிந்தது. (வெட்கப்படுகிறாராமாம்!)

‘ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க வேண்டும்’ என்கிற பொன்மொழியில் விஷ்ணு ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர் போலிருக்கிறது. ‘வாடா. சண்டைக்கு வாடா’ மோடிற்கு அடிக்கடி மாறி வீட்டிலுள்ள அத்தனை காமிராக்களும் தன்னை நோக்கித்தான் இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். மேலும் ஐந்து புதிய கத்திகள் இந்த வாரத்தில் வரவிருக்கிறதாம்! என்னவாகப் போகிறதோ?!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

மணி – ரவீனா உரையாடல்களே நமக்கு கொலைவெறியைத் தருகிறது. இது போதாதென்று இந்த வரிசையில் நிக்சன் – ஐஷூவும் சேர்ந்திருக்கிறார்கள். ‘இருக்கு.. ஆனா .. இல்லை’ என்று இவர்கள் அடிக்கடி கூடி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் நமக்குத்தான் பாயைப் பிறாண்டத் தோன்றுகிறது. ஒருவழியாக உரையாடலின் இறுதியில் ‘நமக்குள்ள ஒண்ணுமில்லன்னு உலகத்திற்கு அறிவிச்சிடலாமா?’ என்று நிக்சன் கேட்க “நாங்க ஒண்ணுமே நெனக்கலையேன்னு அவங்க சொல்லிட்டா?’ என்று மறுபடியும் முதல் பாயிண்ட்டிற்கு அழைத்துச் சென்றார் ஐஷூ.

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 – DAY 23 ( EP 24)

‘டமாலு டுமீலு’ என்கிற பாடலின் சத்தத்துடன் நாள் 23 விடிந்தது. கிச்சன் டீமிற்கு யூனிபார்ம், தலையுறை உள்ளிட்ட வசதிகளைத் தந்து அழகு பார்த்தார் சின்ன பிக் பாஸ். அவர்களை முழு சமையற்காரர்களாக மாற்றுவதுதான் பிளான் போல. ஆனால் அவர்களோ ‘எங்களுக்கு வலிக்கவேயில்லையே.. இதெல்லாம் பெருமையா.. கடமை’ என்கிற மாதிரியே சிரித்து சோகத்தை துயரத்தை மறைத்துக் கொள்கிறார்கள்.

‘நாங்க ஒண்ணா பேசிட்டிருக்கறதை வெச்சு கலாய்ச்சு முத்திரை குத்தறீங்கள்ல.. அது போல யார் பண்ணாலும் நானும் குத்துவேன்.. நீ பண்ணாலும் குத்துவேன். யார் கூடயும் எமோஷனலா கனெக்ட் ஆகாதன்னு’ ஒரு மகான் என் கிட்ட சொல்லியிருக்கார்’ என்று நிக்சனிடம் டெரராக சொல்லிக் கொண்டிருந்தார் ரவீனா. அமுல் பேபி என்று நினைத்தால் இந்தப் பெண் ரவுடி பேபியாக இருக்கிறது.

ஆடை தியாகத்தில் டிவிஸ்ட் வைத்த பிக் பாஸ்

அடுத்த டாஸ்க் துவங்கியது. இதில் தோற்றால் பெரிய வீடு உடைகளைத் தியாகம் செய்ய வேண்டுமாம். (வேறு ஏதாச்சும் புதுசா யோசிக்கலாம்!). இரண்டு வீட்டில் இருந்தும் தலா ஒருவர் வந்து ஆட வேண்டும். ‘ஆக்சிசன் சிலிண்டர் டாஸ்க்கில் எனக்கு ஏற்பட்ட அவப்பழியை சரித்திரத்தில் இருந்து துடைத்தெடுக்க விரும்புகிறேன். இந்த முறை நான் செல்கிறேன். உண்மையாக ஆடுவேன்’ என்று யுகேந்திரன் சொன்ன லாஜிக்கை கேப்டன் பூர்ணிமாவும் ஏற்றுக் கொண்டார்.

இந்த டாஸ்க்கில் தோற்றால் சின்ன வீட்டிற்கு பாதிப்பு ஏதும் கிடையாது. மற்றவர்களாக இருந்தால் வேண்டுமென்றே கோளாறு செய்ய வாய்ப்புண்டு. ஆனால் யுகேந்திரனுக்கு தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆவேசம் இருக்கிறது என்பதால் நேர்மையாக ஆடுவார் என்று பெரிய வீடு கருதுகிறது. குறிப்பாக பூர்ணிமா இதை நம்புகிறார். ஆனால் விசித்ராவிற்கு மட்டும் இதில் ஒப்புதல் இல்லை.

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 – DAY 23 ( EP 24)

ஆட்டம் துவங்கியது. ஒரு சுவற்றின் இடைவெளியில் செங்கற்களை துரிதமாக பரிமாறிக் கொள்ள வேண்டும். மாயாவும் யுகேந்திரனும் பரபரவென செயல்பட்டாலும் இறுதியில் தோற்றார்கள். பாவம், யுகேந்திரனுக்கு நாக்கு தள்ளி விட்டது. ‘டைல்ஸ்ல இருக்கிற பெயிண்ட் ரொம்ப ஒட்டுது. அதனாலதான் முடிக்க முடியலை. ஏதாவது டிஸ்கவுண்ட் பண்ணுங்க பிக் பாஸ்’ என்று மாயா கெஞ்சியதை பிக் பாஸ் ஏற்றுக் கொண்டார். (மாயாவோட கண்ட்ரோல்லதான் பிக் பாஸ் இருக்கிறார் என்று பூர்ணிமா சொன்னது உண்மைதான் போல!)

‘யாராவது ஐந்து பேர் மட்டும் உடைகளைத் தியாகம் செய்தால் போதும்’ என்கிற சிறப்புச் சலுகையை அவர் அறிவிக்க சுரேஷ் முதலில் கைதூக்கினார். பிறகு நான்கு பேர் இணைந்தார்கள். இதில் ஒரு சுவாரசியமான டிவிஸ்ட் நடந்தது. அவர்களை தனியாக நிற்க வைத்த பிக் பாஸ், ‘இவர்களைத் தவிர மற்றவர்கள்தான் உடைகளைத் தியாகம் செய்ய வேண்டும்’ என்று பிளேட்டை தலைகீழாகப் போட்டு அறிவிக்க ‘அய்யய்யோ’ என்று மற்றவர்கள் தலையில் கை வைத்துக் கொண்டார்கள்.

வீட்டில் உதயமான புது ரொமான்ஸ் டிராக்

ரவீனாவும் மணியும் பேச அமர்ந்தார்கள். (அந்த ரிமோட்டை எடுங்கப்பா.. சானலை மாத்தணும்!). “நீ என் கூட பேச மாட்டேன்ற.. என்னை அவாய்ட் பண்றன்னு தோணுது.. ஏன் இதையெல்லாம் நான் எதிர்பார்க்கறன்னு எனக்கே தெரியல’ என்றெல்லாம் அனத்திக் கொண்டிருந்த மணி, கடைசியில் சொன்னதுதான் சுயபரிசீலனையுடன் உதிர்த்த திருவாசக வாக்குமூலம். ‘நான் ரொம்ப கிரிஞ்ஞா பேசிட்டிருக்கிறேன் போல’.

‘பூர்ணிமா போயிட்டா நீ அழுவியா?’ என்று விஷ்ணுவின் வாயைக் கிளறத் துவங்கினார் மாயா. (பொழுது போகணுமில்ல!) ‘நான் போறதுக்குள்ள மத்தவங்க எல்லோரையும் அழவெச்சுட்டுதான் போவேன்’ என்று வில்லன் மோடிலேயே டெரராக பேசினார் விஷ்ணு. ‘மாயா போனா கூட நான் அழ மாட்டேன்’ என்று கெத்து காட்டினார் பூர்ணிமா. ‘அங்க என்ன சத்தம்?!’ என்று இடைமறித்த வினுஷா ‘நான் போனா யாருமே அழமாட்டாங்க’ என்று சொன்னது முத்தாய்ப்பான வாசகம்.

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 – DAY 23 ( EP 24)

மணி – ரவீனா, நிக்சன் – ஐஷூ என்று இந்த இரண்டு கூட்டணிகளும் வீடு முழுக்க அமர்ந்து பேசும் செய்யும் அலப்பறைகளைப் பார்த்த பூர்ணிமாவிற்கு ‘நானும் கெத்துதான்’ என்பதை நிரூபிக்கத் தோன்றியிருக்க வேண்டும். எனவே அந்த வீட்டின் பிள்ளைப் பூச்சியான விக்ரமை பக்கத்தில் அமர வைத்து ஆசையாகப் பேசத் துவங்கினார். ‘என்ன புள்ள. குறுகுறுன்னு பார்க்கறே?” என்று விக்ரம் கேட்க “இல்ல.. நீ ரொம்ப அளகா இருக்கே” என்று பூர்ணிமா கிண்டலடிக்க “ஊர்ல என்னை நிறைய பேர் அப்படித்தான் சொல்வாங்க” என்று விக்ரம் வழிய, பக்கத்து வீட்டு பாட்டி மாதிரி காமிரா இவர்களை ஜூம் செய்ய “இவன் வேற.. இன்னமும் ஆரம்பிக்கவேயில்ல.. அதுக்குள்ள வந்து எட்டிப் பார்க்கறான்” என்று சந்தோஷத்துடன் அலுத்துக் கொண்டார் விக்ரம். ஆக.. இவர்களின் ரொமான்ஸ் அலப்பறைகளையும் சேர்த்து இனி சகித்துக் கொள்ள வேண்டும் போல. (அந்த ரிமோட்டை எடுங்க!)

ஷாக் அடித்த செல்போன் சார்ஜிங் ஆட்டம்

‘நீங்க ரொமான்ஸ் பண்ணதெல்லாம் போதும். அடுத்தது ‘ஆக்ஷன் பிளாக்கிற்கு போலாமா?’ என்கிற மாதிரி புதிய டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘பேட்டரி டெட்’ என்பது இதன் பெயர். (வில்லங்கமா இருக்கே!) இந்த ஆட்டத்தில் வெல்பவருக்கு இரண்டு கோல்டு ஸ்டார்கள் கிடைக்குமாம். போட்டியாளர்களின் புகைப்படங்கள் உள்ள செல்போன் அட்டைகள் இருக்கும். பஸ்ஸர் அடித்ததும் அதை எடுத்து சார்ஜிங் சாக்கெட்டில் செருக வேண்டும். ஒருவர் அவருடைய சொந்த புகைப்படத்தை எடுக்கக்கூடாது. யாருக்கு சார்ஜிங் பாயிண்ட் இல்லையோ, அந்தப் புகைப்படத்தில் உள்ளவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறுவார். இது மற்றவர்களுக்காக ஆடும் ஆட்டம்.

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 – DAY 23 ( EP 24)

முதல் ரவுண்டு ஆரம்பித்தது. பஸ்ஸர் அடித்ததும் மக்கள் ஆவேசமாகப் பாய்ந்து புகைப்படங்களைக் கைப்பற்றி சார்ஜிங் பாயிண்ட்டில் செருகினார்கள். இந்தச் சுற்றில் வெளியேறியவர்கள் யுகேந்திரன், மணி, பிரதீப். ஆட்டத்தின் இடைவேளையில், யார் யாரைக் காப்பாற்றலாம், காப்பாற்றக்கூடாது என்கிற பேரங்கள், ஒப்பந்தங்கள் தீவிரமாக அரங்கேறின.

அடுத்த ரவுண்டு ஆரம்பித்தது. சிதறு தேங்காய்க்காக ஓடுபவர்கள் போல மக்கள் ஆவேசமாக ஓடினார்கள். புகைப்பட அட்டைகளை மற்றவர்களிடமிருந்து பறிப்பதில் கடுமையான இழுபறி நடந்தது. ரவீனா விலக வேண்டும் என்கிற நோக்கில் ஆடிய மாயாவிடம் மல்லுக்கட்டினார் விக்ரம். ஆனால் ரவீனாவோ பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவரையும் டார்கெட் செய்து வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் விசித்ரா, ரவீனா, பூர்ணிமா மற்றும் மாயா ஆகியோர் வெளியேறினர். ஐஷூவும் நிக்சனும் டீல் போட்டுக் கொண்டார்கள். விக்ரமும் அக்ஷயாவும் இன்னொரு பக்கம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘அக்ஷயாவிற்கு ஏற்கெனவே ஸ்டார் இருக்கு’ என்று அவரை டார்கெட் செய்ய முடிவு செய்தார் விஷ்ணு.

ஏண்டா. என்னைத் தள்ளி விட்டே?’ – விஷ்ணுவின் அலப்பறை

அடுத்த சுற்று ஆரம்பித்து மக்கள் ஓடிய போது விஷ்ணு பொதோ் என்று கீழே விழுந்தார். இப்படி கீழே விழும் போது கூட ஓடி வந்தவர்களை குறை சொல்வதுதான் ஸ்கூல் பிள்ளைகளின் வழக்கம். இதையே இப்போது செய்த விஷ்ணு, தனது பரம எதிரியான அக்ஷயாவிடம் “நீதான் என்னைத் தள்ளி விட்டே.. இனி நீ எப்படி ஆடறன்னு பார்க்கறேன்” என்று ஆவேசமாகத் துவங்கி பிறகு ‘வாடி.. போடி’ என்று ஏக வசனத்தில் பேசத் துவங்கி விட்டார். மறுத்து விவாதிக்க வந்த அக்ஷயாவின் கையை வேகமாகத் தட்டி விட்டார். இதைக் கடுமையாக ஆட்சேபித்த நிக்சன், விக்ரமிடமும் சண்டைக்கோழி போல் எகிறினார் விஷ்ணு.

‘ஏண்டா…. இப்படில்லாம் பண்றே..’ என்று பிரதீப்பும் சுரேஷூம் கத்தித் தடுத்து விஷ்ணுவின் ஆவேசத்தைத் தணிக்க முயன்றார்கள். மற்றவர்கள் சுட்டிக் காட்டியதால் சற்று தணிந்த விஷ்ணு, ‘யெல்லோ கார்டு’ அச்சத்தினாலோ, என்னமோ ‘அதாவது.. அவ கையை உயர்த்திக்கிட்டு வந்ததால நான் தடுத்தேன். அவ்வளவுதான்’ என்று பம்மிப் பேசினார். ‘குறும்படத்துல எல்லாம் தெரிஞ்சுடும்.. பார்த்துக்கலாம்’ என்று பேசியவுடன் சூடு சற்று தணிந்தது. (இந்த வாரமாவது டீசர் வெளியாகுமா?!)

கடைசி சுற்று. ஒரேயொரு சார்ஜிங் பாயிண்ட் மட்டும்தான் இருந்தது. புகைப்படங்களைக் கவிழ்த்து வைத்த பூர்ணிமாவிடம் ‘குட் ஜாப்’ என்று பாராட்டினார் பிக் பாஸ். (ராஜதந்திரங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பத்திருக்கிறாய்!)

ஆட்டத்தில் கடைசியாக மிஞ்சிய ஐவரும் ஓடிவந்து புகைப்படங்களை எடுக்க முயன்றார்கள். சுரேஷின் கையில் இரண்டு அட்டைகள் மாட்டியது. எதை தேர்வு செய்வது என்று தெரியாமல் அவர் தடுமாற, அட்டை கிடைக்காத ஜோவிகா, ‘நான் விளையாட மாட்டேன்’ என்று கோபமாக அறிவிக்க எதைப் பற்றியும் கவலைப்படாத பிக் பாஸ் பஸ்ஸரை அடிக்க, ஓடிச் சென்று சார்ஜிங் பாயிண்ட்டை கைப்பற்றினார் ஜோவிகா.

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 – DAY 23 ( EP 24)

பிறகு அக்ஷயா அதில் அட்டையைச் செருக முயல, அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று ஆவேசமாக வந்த விஷ்ணு, பலவந்தமாக அட்டையைப் பிடுங்க முயன்றார். ஆனால் கொடி காத்த குமரன் மாதிரி அக்ஷயா உறுதியாக போராடி ஜோவிகாவின் புகைப்படத்தை செருக.. ஒருவழியாக இந்த ஆட்டம் முடிவடைந்தது. இதன் மூலம் ஜோவிகாவிற்கு இரண்டு ஸ்டார்கள் கிடைக்கும். மனவுறுதியுடன் விடாமல் போராடிய அக்ஷயாவை பலரும் பாராட்டினார்கள்.

ஆட்டத்தில் நிகழ்ந்த கலவரம் பற்றியே பிறகு ஆங்காங்கே மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘என்னையே எல்லோரும் டார்கெட் பண்றாங்க. நான் வெளிய போகணும்னு நெனக்கறாங்க.. இருங்க உங்க எல்லோருக்கும் வெச்சுக்கறேன்’ என்று விஷ்ணு ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்தார். “வீடியோ வரட்டுமே. அதுக்குள்ள நீ ஏன் அவசரப்படறே?’ என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் விசித்ரா.

அக்ஷயாவை மரியாதையில்லாமல் விஷ்ணு பேசிய விதத்தை இன்னொரு பக்கம் ஜோவிகா ஆட்சேபித்துக் கொண்டிருந்தார். ‘அநியாயம் எங்க நடந்தாலும் இந்த நிக்சன் அதை தட்டிக் கேட்பான்’ என்று கொதித்துக் கொண்டிருந்த நிக்சனை ‘ஹீரோயிசத்தைக் குறை. எமோஷனை அடக்கு.. உன்னை தட்டிடப் போறாங்க’ என்று ரெட் கார்ட் எச்சரிக்கையை தந்து கொண்டிருந்தார்கள். ‘அம்மா. அம்மா. இந்த வாரம் உங்களை நாமினேட் பண்ணட்டுமான்னு இந்த ஐஷூ புள்ள என் கிட்ட வந்து கேட்குது.. எனக்கு மனசே உடைஞ்சு போச்சு’ என்று அநாவசியமாக கண்கலங்கிக் கொண்டிருந்தார் விசித்ரா.

காதல், மோதல், ஊடல், கண்ணீர், ஆக்ஷன் என்று ஒரு தமிழ் சினிமாவின் அத்தனை லட்சணங்களுடன் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ‘படம் அப்படியொண்ணும் சுவாரசியமா இல்லையேப்பா’ என்றுதான் ஒவ்வொரு சீன் முடிந்ததும் தோன்றுகிறது. பார்ப்போம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours