Bigg Boss 7 Wild Card: `ஒண்ணு இல்ல 5 பேர்!' – வைல்டு கார்டில் நுழையும் முன்னாள் போட்டியாளரின் மகள்?

Estimated read time 1 min read

விஜய் டிவியில் மூன்றாவது வாரமாகப் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 7. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகத் தொடங்கிய ஷோவில் அனன்யா, பவா செல்லத்துரை, விஜய் வர்மா ஆகிய மூன்று பேர் எலிமினேட் ஆனதைத் தொடர்ந்து தற்போது 15 பேர் உள்ளனர்.

ஒவ்வொரு சீசனிலும் தொடக்கத்தில் உள்ளே நுழைந்த போட்டியாளர்களைத் தவிர வைல்டு கார்டு என்ட்ரி மூலம் சிலர் நிகழ்ச்சிக்குள் செல்வது வழக்கம்.

இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகள் இருப்பதால் வைல்டு கார்டு மூலம் செல்கிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கலாமென எதிர்பார்க்கப்பட்டது. நேற்று வெளியான புரொமோவில் கமலுமே இதை அறிவித்து விட்டார்.

அர்ச்சனா

இன்னொருபுறம் இந்த சீசனில் சில போட்டியாளர்கள் ரொம்பவே மந்தமாக விளையாடுவதாகவும், அப்படி எந்த விளையாட்டும் ஆடாதவர்கள் அடுத்தடுத்து வெளியேறலாம் எனவும், அவர்கள் இருப்பதால் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு குறைந்தது போல் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அதனாலேயே வைல்டு கார்டு போட்டியாளர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியதாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

எது எப்படியோ அடுத்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 20 ஆக உயரப் போகிறது.

மேலும் வைல்டு கார்டு மூலம் உள்ளே செல்கிறவர்கள், ஏற்கெனவே அங்கிருக்கும் போட்டியாளர்களின் குணங்கள் பற்றியும், பிக் பாஸ் வீட்டில் ஆடும் விளையாட்டு குறித்தும் நன்கு தெரிந்து கொண்டு செல்வதால், நிகழ்ச்சியில் கூடுதல் பரபரப்பும் சுவாரஸ்யமும் கிடைக்குமென நம்புகிறதாம் சேனல்.

சரி, வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் செல்கிற சில போட்டியாளர்கள் குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருக்கிறோம். அதன்படி, நடிகை அர்ச்சனா மற்றும் கானா பாலா ஆகியோர் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

மகள் பிரவீனா மாயாவுடன் நமீதா மாரிமுத்து

அடுத்ததாக தற்போது கிடைத்துள்ள ஒரு தகவல் படி ஏற்கெனவே ஒரு சீசனில் பிக் பாஸ் சென்று சில நாள்களிலேயே வெளியில் வந்துவிட்ட திருநங்கை நமீதா மாரிமுத்துவின் மகள் பிரவீனா மாயா வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் செல்கிறார் என்பதுதான்.

பிரவீனா மாயாவை சில வருடங்களுக்கு முன்புதான் நமீதா மகளாகத் தத்தெடுத்தார் என்கிறார்கள்.

அர்ச்சனா, கானா பாலா, பிரவீனா மாயா தவிர சின்னத்திரையிலிருந்து ஒரு நடிகர் மற்றும் இன்னொரு நடிகையும் வைல்டு கார்டு மூலம் செல்ல இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours