லஞ்சம் கொடுத்தது ஏன்? – விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை
21 அக், 2023 – 13:58 IST
விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் 15ம் தேதி வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது.
இந்தி பதிப்பினை தணிக்கை செய்ய தணிக்கை வாரிய குழு 6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக விஷால் குற்றம்சாட்டினார். மேலும் படத்தை வெளியிட வேண்டும் என்ற நெருக்கடியால் லஞ்சம் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. அடுத்து கட்ட நடவடிக்கையாக இதனை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்பட பல அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது. யார் யார் லஞ்சம் கேட்டார்கள், யாருக்கு எவ்வளவு கொடுத்தீர்கள், லஞ்சம் கொடுப்பது தவறு என்று தெரிந்தும் ஏன் செய்தீர்கள் என்பது மாதிரியான கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர். பின்னர் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பி உள்ளனர். இந்த வழக்கில் விஷாலிடமும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
+ There are no comments
Add yours