Bigg Boss 7 Day 17: வயலன்ட் விஜய்; எமோஷனல் ரவீனா – மணி; அடிதடி ஆக்சிஜன் ரவுண்ட்

Estimated read time 1 min read

‘ரெண்டு வீடும் வாயிலேயே பேசிட்டிருந்தா எப்படி..? அடிச்சுக் காமிங்க’ என்கிற மோடிற்கு பிக் பாஸ் நகர்ந்து விட்டார். உக்கிரமான பிஸிக்கல் டாஸ்க் இந்த எபிசோடில் இருந்து தொடங்கியது.

ஆக்சிஜன் சிலிண்டரை கைப்பற்ற இருதரப்பும் மூச்சுத்திணற போராடினார்கள். மல்யுத்த வீரர்கள் மாதிரி ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு தரையில் கிடந்தார்கள். இந்த தள்ளுமுள்ளுவில் கதவு கண்ணாடி உடைந்தது. ‘சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா.. படுபாவிங்களா’ என்று பிக் பாஸ் உள்ளுக்குள் கதறியிருப்பார். இத்தனை ரணகளத்திற்கு நடுவிலும் மணி – ரவீனா – நிக்சன் என்கிற ரொமான்டிக் டிரையாங்கிள் டிராக், பொசசிவ் புகைச்சலுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘ஜிங்கிலியா.. ஜிங்கிலியா’ என்கிற அயல்கிரகத்துப் பாடல் காலையில் ஒலிக்கும் போதே தெரிந்து விட்டது.. ‘ஏதோவொன்று இன்று சரியில்லை. விபரீதமாக ஏதோ நடக்கப் போகிறது’. ‘மணியும் ரவீனாவும் அவங்க கேமை விளையாடல. ஒருத்தர் காரெக்ட்டருக்குள்ள ஒருத்தர் கலந்திருக்காங்க.. விளையாட்டுல பர்சனல் இருக்கக்கூடாது. இது தப்பு ப்ரோ’ என்று விக்ரமிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தார் நிக்சன். (காதில் புகை வராதது மட்டும்தான் பாக்கி!)

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 – DAY 18 ( EP 19)

‘உனக்கு இதுல என்ன?’ என்று விக்ரம் கேட்ட போது ‘பர்சனல் அக்கறைதான்’ என்றார். என்னா மேன் லாஜிக் இது? பர்சனல் வேண்டாம் என்று சொல்கிற அதே நிக்சன், தனிப்பட்ட அக்கறை என்று சொல்வது முரண். ரவீனாவை எவரும் நெருங்காதவாறு மணி கதவை அடைத்திருப்பதுதான் நிக்சனின் இந்த ஆட்சேபத்திற்குக் காரணமோ என்று தோன்றுகிறது. மற்றபடி அந்த இருவரும் சரியாக விளையாடவில்லையென்றால் அது நிக்சன் உட்பட மற்றவர்களுக்கு சாதகமான விஷயம்தானே?!

‘இந்த வீட்டில் கன்டென்ட், எண்டர்டெயின்மென்ட் போன்ற ஆக்சிஜன் விஷயங்கள் குறைந்திருக்கிறது. அதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்து ஒரு டாஸ்க். இந்த O2 தான் உங்களுக்கு ஓட்டுக்களாக மாறப் போகிறது. (O2.. ஓட்டு.. கவித.. கவித..). இந்தப் போட்டியில் இரு வீட்டாரும் கலந்து கொள்ள வேண்டும். யார் அதிக சிலிண்டர்களை கைப்பற்றுகிறார்களோ அதற்கேற்ப அடுத்த வார கேப்டன் பதவிக்கு போட்டியிடும் தகுதி கிடைக்கும்.  

‘கேப்டன் யுகேந்திரன் போட்டியில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும்’ என்று பிக் பாஸ் அறிவித்து விட்டார். எந்த வீட்டின் சார்பாக அவர் ஆடவிருக்கிறார் என்பதை யுகேந்திரன் முடிவு செய்து கொள்ளலாம். கேப்டன் என்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் யுகேந்திரனோ, பெரிய வீட்டுக்குத்தான் முழு விசுவாசமாக இருந்தார். எனவே ‘விஷ்ணுவிற்குப் பதிலாக நான் ஆடுகிறேன்’ என்று அவர் எடுத்தது புத்திசாலித்தனமான மூவ்.

சண்டைக்கோழியாக இருக்கிற விஷ்ணுவைச் சமாளிப்பது பெரிய வீட்டிற்கு சவாலாக இருக்கும் என்பதால் விஷ்ணுவை ஓரங்கட்டி அமர வைக்க முடிவு செய்தார் யுகேந்திரன். “இது சரியில்ல கேப்டன். அக்ஷயா கைல கல்லு இருக்கு. அவளால சரியா விளையாட முடியாது. அவங்களுக்குப் பதிலா ஆடறதுதான் நேர்மையா இருக்கும்’ என்று சின்ன வீடு லாஜிக்கலாக மடக்கியதும் ‘சரி’ என்று வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார், யுகேந்திரன்.

ரவீனா

மூச்சு திணறத் திணற நடந்த ஆக்சிஜன் டாஸ்க்

போட்டி துவங்கியது. கார்டன் ஏரியாவில் 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டத்தின் நடுவில் வைக்கப்பட்டிருந்தன. சுற்றிலும் போட்டியாளர்கள் நின்று ‘ஆ’வென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸர் அடித்ததும், தானியம் தூவப்பட்டதும் பாய்ந்து ஓடி வருகின்ற பறவைகள் மாதிரி சிலிண்டர் மீது பாய்ந்தார்கள். கைக்கு கிடைத்ததைத் தூக்கிக்கொண்டு வெவ்வேறு திசைகளில் பறந்தார்கள். ஆனால் சிலர் மட்டும் சிறகொடிந்த பறவைகள் மாதிரி அங்கேயே இணைபிரியாமல் கட்டியணைத்து உருண்டு கொண்டிருந்தார்கள். விஜய் போட்ட உடும்புப்பிடியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் விஷ்ணு. (அப்ப சவுண்டு மட்டும்தான் போல!)

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 – DAY 18 ( EP 19)

சிலிண்டர்களை எடுத்துச் சென்ற போட்டியாளர்கள் அதை வெவ்வேறு இடங்களில் பதுக்க ஆரம்பிக்க “கீழே வைக்கக்கூடாது. கையில்தான் வைத்திருக்கணும்” என்று பிக் பாஸ் அறிவிக்க, ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் பார்வையாளராக வேடிக்கை பார்க்கும் சுரேஷ், ‘இது என்ன பயங்கரமான கேமே இருக்கே’ என்று மிரண்டார். இந்த முறை அவரது ‘ஸ்ரீகாந்த்’ கமெண்ட்ரி தொந்தரவு இல்லை.

சிலிண்டர்களை எடுத்துச் சென்ற சின்ன வீட்டார் கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொள்ள, ஹீரோ மாதிரி ஓடி வந்த நிக்சன் அதன் மீது மோதியதில் கதவு சுக்கல் சுக்கலாக உடைந்தது. ‘பீப்’ ஒலியால் மூடப்பட்ட வசையில் நிக்சனைத் திட்டினார் பிரதீப். கண்ணாடிக்கான செலவைக் கணக்கிட்டபடியே எரிச்சலான பிக் பாஸ், ‘இந்த ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என்று அறிவித்தார். (இவனுகளுக்கு மூணு வேளை சோறு போட்டு இந்த கேமை நான் நடத்தி முடித்தறதுக்குள்ள!. முடியல!).

‘இந்த விஜய் என் கழுத்தை உடைச்சிட்டாம்ப்பா’ என்று பரிதாபமாகப் புலம்பினார் விஷ்ணு. ‘கண்ணாடியாடா உடைக்கறீங்க?!. இருக்குடா. உங்களுக்கு!’ என்று கறுவிக் கொண்ட பிக் பாஸ், ‘இந்தப் போட்டி மீண்டும் முதலில் இருந்து நடைபெறும்’ என்று டெரராக அறிவித்தார்.

மணி – ரவீனா – நிக்சன் – தொடரும் பரமபத ஆட்டம்

இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக, ரவீனா விஷயம் நிக்சனின் மண்டையை தொடர்ந்து குடாய்கிறதுபோல. எனவே ரவீனாவை தனியாக அழைத்து ‘முதல் வாரம் சின்ன வீட்டுல நீ இருந்த போது எல்லோர் கூடயும் பேசின. எப்ப பெரிய வீட்டுக்கு வந்தியோ, மணி எத்தனைன்னு கூட பார்க்காம இருபத்து நான்கு மணி நேரமும் மணியோடதான் இருக்கே. இந்த கேம் தப்பு’ என்று உபதேசம் செய்ய ‘அப்படியா சொல்ற?” என்று அப்பாவித்தனமான பாவனையுடன் கேட்டுக் கொண்டார் ரவீனா. ‘தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து’ என்கிற விளையாட்டை ரவீனா திறமையாகவே ஆடுகிறார்.

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 – DAY 18 ( EP 19)

மீண்டும் சிலிண்டர் ஆட்டம் ஆரம்பித்தது. பறவைகள் தானியங்களைக் கொத்திக் கொண்டு வெவ்வேறு திசைகளில் பறந்தன. கொடி காத்த குமரன் போல சிலிண்டர்களைக் கட்டியணைத்துக் கொண்டு போராடினார் ஐஷூ. எந்தப் பக்கம் விளையாடுகிறார் என்பதே தெரியாமல் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தார் யுகேந்திரன். படுக்கையை உதறிப் போடுவது போல, தன்னுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த பிரதீப்பை தூக்கி அப்படியே கீழே போட்டார் விஜய். சற்று நேரம் மூச்சுத் திணறிய பிரதீப், உடனே சுதாரித்துக் கொண்டு எழுந்து ஓடினார். ரவீனாவின் கால்களை விக்ரம் சுரண்ட, அந்தச் சமயத்திலும் குக்கர் விசில் மாதிரி சிரித்துக் கொண்டேயிருந்தார் ரவீனா.

சிலிண்டர்களை தூக்கிக் கொண்டு பாத்ரூமிற்குள் மணி மறைய, கதவுக்கு அருகில் ஒரு கலவரம் நடந்தது. வாயிற்காப்பானாக விஜய் மற்றவர்களை தடுத்து நிற்க, யுகேந்திரனின் இடுப்பில் கிச்சு மூச்சு மூட்டி விலக்க முயன்றார் நிக்சன். பூர்ணிமாவின் கையைப் பிடித்து ரவீனா இழுக்க.., மணியின் கையைப் பிடித்து பூர்ணிமா இழுக்க. இந்த கைகலப்பு போராட்டம் கலகலப்பாக நடந்தது.

இந்தக் களேபரத்தில் ரவீனா கீழே விழ, ‘நீதான் தள்ளிட்டே’ என்று பூர்ணிமாவை குற்றம் சாட்டினார் மணி. “நான் ரவீனா கைய பிடிச்சிட்டு இருந்தேன். நீ என்னைத் தள்ளியதால சேர்ந்து விழுந்தோம்” என்று பதிலுக்கு மணியைக் குற்றம் சாட்டினார் பூர்ணிமா. இந்த ‘நீதான் தள்ளினே’ பஞ்சாயத்து நெடும் நேரமாக அவ்வப்போது புகைந்து கொண்டிருந்தது. (குறும்படம் போடாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது!).

உடைந்த கண்ணாடிக் கதவு, சிதறிய இரும்பு கேட்

ஒருவழியாக இந்த ஆட்டத்தின் முதல் சற்று முடிந்தது. அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது பெரிய வீடு. எனவே அடுத்த வார கேப்டன் போட்டிக்கு அங்கிருந்து இரண்டு பேர் தகுதியாவார்கள். கல்லாகும் சாபம் பெற்ற அகலிகை போல, கல்லைச் சுமந்து கொண்டிருக்கும் அகலிகையாக அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார் அக்ஷயா. கடந்த ரவுண்டில் கண்ணாடிக் கதவு உடைந்தது போல, இந்தச் சுற்றில் சின்ன வீட்டின் கேட்டு உடைந்தது. (அப்ப எல்லாமே செட்அப்பா கோப்பால்! நேசமணிதான் பிக் பாஸ் வீட்டை கட்டிய காண்டிராக்கட்டர் போலிருக்கிறது!).

‘இந்த விஜய் என்னை அடிக்கறாம்ப்பா.. பிதாகமகன் விக்ரம் மாதிரி .சங்கை கடிச்சிருவான் போலிருக்கு’ என்று மீண்டும் அனத்திக் கொண்டிருந்தார் விஷ்ணு. ‘நான் வேணும்ன்ட்டுதான் ரவீனாவோட சேர்ந்து கீழ விழுந்தேன்’ என்று மாயாவிடம் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தார் பூர்ணிமா. ஆனால் தள்ளிவிட்டது மணிதானாம். மாயாவோடு சேர்ந்து இன்னொரு மாயாவாக பூர்ணிமா மாறி விடுவார் போலிருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 – DAY 18 ( EP 19)

நிக்சன் காலையில் பற்ற வைத்த நெருப்பு தொடர்ந்து புகைந்து கொண்டிருந்தது. நிக்சன் தன்னிடம் சொன்னதை மணியிடம் ரவீனா சொல்ல, நிக்சனிடம் சென்று பேசினார் மணி. (இவிய்ங்க இம்சை வேற நடுவுல!). “ரவீனாவும் நீயும் உங்களோட கேமை ஆடலை. ஈருடல் ஓருயிரா இருக்கீங்க” என்று நிக்சன் சொல்ல, ‘நானும் இப்பத்தான் அதை ஃபீல் பண்றேன் (எதே!). இன்னில இருந்து அதை ஸ்டாப் பண்ணிக்கறேன்’ என்று மணி சொன்னாலும் ‘நீ எதுக்கு சொல்றேன்னு எனக்குத் தெரியும்டா’ என்று மனதிற்குள் நினைத்திருப்பார்.

அடுத்த சுற்று ஆட்டத்தை ஆரம்பித்த பிக் பாஸ் ‘எந்தவொரு கதவையும் மூடக்கூடாது’ என்று அறிவித்தார். (பாத்ரூம் கதவையும் ஒடச்சிடாதீங்கடா… அப்ரண்டிஸ்களா!). ‘பிக் பாஸ் அங்கிள்.. பிரதீப்ஜிக்கு ஒடம்பு சரியில்ல.. நான் போய் விளையாடட்டுமா அங்கிள்?’ என்று அக்ஷயா கேட்க ‘நீயே போய் அங்க வேடிக்கைதான் பார்க்கப் போற..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பிக் பாஸ் “ஓகே.. ஆனா கல்லு முக்கியம் பிகிலு.. அதை கீழே வைக்கக்கூடாது” என்று முன்னர் போட்ட விதியில் கறார் காட்டினார்.

கரோத்தே ஸ்டைலில் குறளி வித்தை காட்டிய மாயா

மீண்டும் டாஸ்க் ஆரம்பித்தது. பறவைகள் ஆளுக்கொரு திசையில் பறக்க, தன்னிடம் சிலிண்டர்களை பிடுங்க வரும் எதிரிகளை ‘கன் ஃபைட் காஞ்சனா’ மாதிரி கராத்தே அடியில் மிரட்டினார் மாயா. (இவர் வர்மக்கலையிலும் தேர்ந்தவர் என்று கூறப்படுகிறது!). பிறகு படுத்தபடியே காலால் எட்டி உதைத்து தற்காப்பில் ஈடுபட்டாலும் அனைத்து சிலிண்டர்களையும் பரிதாபமாக பறிகொடுத்தார் மாயா. (இனிமே போன் பண்ணி கேஸ் சிலிண்டர் புக் பண்ணாதான் உண்டு!).

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 – DAY 18 ( EP 19)

விஷ்ணுவின் கழுத்தின் மீது விஜய்க்கு அப்படி என்ன பிரியமோ தெரியவில்லை. அந்த ஏரியாவிலேயே அவர் மீண்டும் குறிவைக்க “என்னடா.. நெக்குலா.. நெக்கு மேல கைவெக்கற?’ என்று விஷ்ணு டெரராக கேட்க இருவரும் சண்டைக்கோழிகள் போல் எதிரும் புதிருமாக விறைத்து நின்றார்கள். பிறகுதான் அந்தப் பயங்கரமான சம்பவம் நடந்தது. இருவருமே எதிரெதிர் திசையில் விலகி சென்று விட்டார்கள். ஒன்றுமே ஆகவில்லை.

“நான் இந்த கேம் ஆடலைப்பா.. ரொம்ப டேன்சரஸ். பேயா அடிச்சுக்கறாங்க… நான் வீட்டுக்குப் போறேன்” என்று மறுபடியும் ஆரம்பித்து விட்டார் மாயா. ‘இப்படி பண்ணியிருக்கலாம். அப்படி பண்ணியிருக்கலாம்ன்னு என் கிட்ட சொல்லாதீங்க. நான் ஃபுல் எஃபர்ட் போட்டுத்தான் ஆடினேன். என்னைக் குறை சொல்லாதீங்க” என்று யுகேந்திரனிடம் எரிந்து விழுந்தார் மாயா. (கராத்தே கிளாஸிற்கு முழுசா போகலை போலிருக்கு!).

‘நல்ல வேளை!.. நாம யாரையும் அடிச்சு ஆடலைப்பா..’ என்று பெரிய வீடு, அவர்களுக்கு அவர்களே முன்ஜாமீன் வழங்கிக் கொண்டார்கள். இரண்டாவது சுற்றிலும் பெரிய வீடு வெற்றி. எனவே சின்ன வீட்டிலிருந்து ஒருவரை நேரடியாக நாமினேட் செய்யலாம். ‘நாமினேஷன்ல இல்லைன்னு தெரிஞ்சவுடனே விஷ்ணுவோட பிஹேவியர் மாறிடுச்சு.. நல்ல பையனாட்டம் சீன் போடறான். அவனை திருப்பியும் களத்தில் இறக்கி விடுவோம்” என்று ஆலோசித்த பெரிய வீடு, நேரடி நாமினேஷன் தேர்வாக விஷ்ணுவின் பெயரைச் சொன்னது. ‘அடப்பாவிங்களா.. இந்த வாரம் தப்பிச்சிட்டோம்ன்னு முழுசா கூட சந்தோஷப்பட்டு முடிக்கலை. அதுக்குள்ளயா?’ என்று விஷ்ணு நொந்திருப்பார்.

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 – DAY 18 ( EP 19)

“மிக்சர் சாப்ட்டு உக்காந்திருக்கறவன்லாம் ஜாலியா இருக்கான். (இதை ஏற்கெனவே எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கே?!). வேலை செய்யற என்னை நாமினேட் பண்ணியிருக்காங்க.. என்னைப் பழிவாங்கறதுக்காடா.. இத்தனை பர்னிச்சரை உடைச்சீங்க,.. இப்ப தெரியுதா என் பவரு?” என்று தனக்குத்தானே பன்ச் பேசி, பெரிய வீட்டாரைப் பற்றி அனத்திக் கொண்டிருந்தார் விஷ்ணு. “இந்த விஜய் பய வேற.. என் மூஞ்சை உடைச்சிடுவான் போல. நடிப்புக்கு மூஞ்சிதானே முக்கியம்!” என்று மேலும் அனத்திக் கொண்டிருந்தார்.

‘ஆக்சுவலி.. விஜய்.. வயலன்ஸ் பண்ணலை’ – மாயாவின் ஆதரவு

“விஜய் வயலன்ட்டா ஆடினதா பேசிக்கறாங்க… நான் பார்க்கலை. ஒருவேளை இன்னொரு யெல்லோ கார்டு விஜய்க்கு கொடுத்துடுவாங்களோ.. ஆனா நம்ம மேல அவன் கைய வைக்க மாட்டான்.. நைஸ் ஃபெலோ’ என்று விஜய்க்கு சான்றிதழ் தந்து பூர்ணிமாவிடம் பேசிக் கொண்டிருந்தார் மாயா. ஊருக்கெல்லாம் சந்திரமுகி போல டெரராக இருந்தாலும், விஜய் என்று வந்து விட்டால் மட்டும் ஜோதிகாவாக மாறி விடுகிறார் மாயா. என்ன மாயமோ?! (அப்ப அதானே ஜெஸ்ஸி?!  கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பாவம் விஜய்.. யாரு பெத்த புள்ளயோ. சூதானமா இருந்து பொழச்சிக்கப்பா!). ‘கொட்டிக்கீட்டிங்கள்ல.. சாப்பிட்டதுக்கு பில்லைக் கட்டுங்க” என்று அடுத்ததாக ஷாப்பிங் டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஆக்டிவிட்டி ஏரியாவில் பாம்கள் இருக்குமாம். தரப்பட்டிருக்கும் குறிப்புகளின்படி குண்டுகளை செயலிழக்க வைக்க வேண்டுமாம். இந்த அறிவிப்பை வாசிக்கும் போது ‘பாம்கள்’ என்பதை ‘பாம்புகள்’ என்பது மாதிரியே படித்துக் கொண்டிருந்தார் ரவீனா.

வெடிகுண்டு டாஸ்க் ஆரம்பித்தது. வெவ்வேறு நிறங்கள் வரிசையாகக் காட்டப்படும். எந்த எண் சொல்லப்படுகிறதோ, அந்த நிறத்தை நினைவிற்கு கொண்டு வந்து சம்பந்தப்பட்ட ஒயரைத் துண்டிக்க வேண்டும். இந்த முயற்சியில் ஐஷூ தவற வெடிகுண்டு வெடித்தது. (பச்சை ஒயரை சரியா கட் பண்ணி மக்களைக் காப்பாத்தற ஹீரோக்களின் திறமை இப்பத்தான் புரியுது!)  இந்த டாஸ்க்கில் தோற்றதின் மூலம் பெரிய வீட்டார் உடைகளைத் தியாகம் செய்ய வேண்டும். தற்போது அணிந்திருக்கும் உடையையே இந்த வாரம் முழுக்க அணிய வேண்டும்.

“யெஸ்.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.. சப்பை டாஸ்க்குல தோத்துட்டாங்க..  அங்க இருக்கும் போது பர்த்டே அன்னிக்கு கூட அழுக்கு டிரஸ் போட வேண்டியதா இருந்தது. இப்ப ஒரே டிரஸ்ஸை போட்டு அவங்க அவஸ்தைப்படட்டும்.  நான் மூணு வேளையும் டிரஸ் மாத்தி மாத்தி போடுவேன்’ என்று ரகசியமாக அகம் மகிழ்ந்து கொண்டிருந்தார் பூர்ணிமா. (என்னாவொரு வில்லத்தனம்!).

“மத்தவங்க கூடல்லாம் பேச முடியுது. உன் கூட என்ன பேசறதுன்னே தெரியல.. முன்ன மாதிரி நீ இல்ல.. மாறிட்டே’ என்று நிக்சனைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஐஷூ. நிக்சன் ரவீனாவிற்கு உபதேசம் செய்து கொண்டிருக்க, இப்போது நிக்சனுக்கு உபதேசம் செய்ய ஒரு ஆள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து தூரத்தில் ஒரு குழு புறணி பேசிக் கொண்டிருந்தது. “இந்த ஐஷூ. எல்லோருடைய குட் புக்லயும் இருக்கா.. ஆனா என் புக்ல இல்லை” என்று ரவீனா சொல்ல, எதையோ சொல்ல வந்த மணி சட்டென்று வாயை மூடிக் கொண்டு ‘அவங்க. அவங்க ஆப்புல அவங்களே போய் உக்கார்றாங்க” என்றார். (அந்த ஆப்பை எங்கே டவுன்லோட் பண்ணணும்?!) “ஐஷூ ஒரு ‘குட்டி மாயா’வா மாறிட்டு வர்றாங்கன்னு தோணுது” என்பது மாதிரி சொன்ன விக்ரம், பிறகு மணி அதை திருப்பிக் கேட்டதும் ‘குட்டிம்மான்னு செல்லமா சொன்னேன்” என்று மாற்றி விட்டார். (என்னது! குட்டிம்மாவா!.. விக்ரம்தான் இன்னமும் பாக்கி. அவரும் ரொமான்ஸ் ஜோதில குதிக்க டிரை பண்றார் போல).

ரவீனாவை தனியாக ஓரங்கட்டிய மணி “நிக்சன் என்ற சொன்னான்?.. நீ யார் கிட்டயும் எமோஷனலா கனெக்ட் ஆகாத.” என்று ஆரம்பித்து மீண்டும் பாயைப் பிறாண்ட, ‘என்னாலயே முடியலைடா டேய்” என்று நொந்த பிக் பாஸ், அன்றைய எபிசோடை சட்டென்று முடித்து விட்டார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours