மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் மாரடைப்பால் நேற்று காலமானார்.
மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளை செய்திருக்கிறார். பெண்கள் வழிபாட்டில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து பலரது பாராட்டையும் பெற்றார். இவரின் சேவையைப் பாராட்டி ஒன்றிய அரசு இவருக்கு 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வழங்கியது.
மாரடைப்பால் இறந்த பங்காரு அடிகளாரின் மறைவிற்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பலரும் இரங்கலைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா மலேசியாவில் இருந்து அடிகளாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், “ எங்களது ஆன்மீக குருநாதர் ‘அம்மா’ என்று அன்போடு அழைக்கும் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தியின் ஓங்காரத்தில் கடந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். கடந்த வாரம் வெள்ளிக்கிழமைதான் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து நானும், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தும் ஆசிர்வாதங்களைப் பெற்று வந்தோம்.
மனதே சரியில்லை. நேற்று இந்த செய்தியைக் கேட்டதும் ஏதோ ஒன்றை இழந்துவிட்டது போல் இருந்தது. என்றென்றும் அடிகளாரின் ஆசிர்வாதம் அனைவருக்கும் இருக்கும்” என்று தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours