உலக புகழ்பெற்ற இயக்குனர் 83 வயதில் படுகொலை
17 அக், 2023 – 13:07 IST
உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி போன்றே அவருக்கு அடுத்த நிலையில் புகழ்பெற்றவர் டாரிஷ் மெர்ஜி. டைமண்ட் 33, தி கவ், மிஸ்டர் நெயிவ், தி லாட்ஜர்ஸ், சாரா, பாரி, தி மிக்ஸ், குட் டூ பி பேக் உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களை இயக்கினார். மஜித் மஜிதியின் படங்கள் அன்பை, குடும்ப உணர்வை பேசும் மென்மையான படங்கள், இவரது படங்கள் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட படங்கள், கொஞ்சம் அதிரடியாகவும் இருக்கும். பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். பலமுறை கோவாவில் நடக்கும் சர்வதேச பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.
83 வயதான டாரிஷ் மெர்ஜி முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி ஈரானில் உள்ள கராஜ் நகரில் குடும்பத்தோடு வசித்து வந்தார். மனைவி வஹிதா முகமதிபாரும் அவருடன் வசித்து வந்தார். தந்தையையும், தாயையும் காண மகள் மோனா மெர்ஜி வந்தபோது வீட்டுக்குள் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் போலீசார் விரைந்து வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தன் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வருவதாக ஏற்கெனவே டாரிஷ் மெர்ஜி போலீசில் புகார் அளித்திருந்தார். டாரிஷ் மெர்ஜி படங்களுக்கு ஈரானில் உள்ள சில பழமைவாத அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அந்த அமைப்பினர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று அங்குள்ள மீடியாக்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த படுகொலை உலக சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours