"`முகத்துல ஆசிட் ஊத்திடுவேன்'னாங்க.!"- சொத்துப் பிரச்னையில் நடிகர் மோகன் சர்மாவுக்கு நடந்தது என்ன?

Estimated read time 1 min read

தமிழ், மலையாளத் திரைப்படங்கள் மற்றும் சில தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருப்பவர் நடிகர் மோகன் சர்மா. இவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தாக்கியதாகச் சொல்லப்பட்ட விவகாரத்தில் மர்மம் இன்னும் விலகியபாடில்லை.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் தான் வைத்திருந்த வீட்டை மோகன் சர்மா விற்றதில் பிரச்னை என்றும், அது தொடர்பாகவே இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் பேச்சுகள் எழ, மோகன் சர்மாவிடமே பேசினோம்.

”ஆமாங்க. போயஸ் கார்டன் பகுதியில இருந்த என்னுடைய அந்த வீட்டை விற்க விளம்பரம் கொடுத்திருந்தேன். அப்ப ஒரு புரோக்கர் அறிமுகமாகி அவரே வாங்க ஆள் கூட்டிட்டு வர்றதா சொன்னார். அதனால வீட்டுச் சாவியை அந்தப் புரோக்கர்கிட்ட கொடுத்திருந்தேன். கொஞ்ச நாள் கழிச்சு அவரே ராஜாராமன்னு ஒரு டாக்டரைக் கூட்டிட்டு வந்தார். வீட்டின் பேருல வங்கியில இருந்த கடனை தன் பேருக்குத் திருப்பிக் கொண்ட அந்த டாக்டர் மிச்சத் தொகையையும் தந்துட்டார்.

மோகன் சர்மா

முறைப்படி வீட்டை அவருக்கு வித்தாச்சு. அப்பவே, அதாவது டாகுமென்ட் கைமாறுகிறப்பவே அந்த டாக்டர்கிட்ட வீட்டுச் சாவியை வாங்கிக்கோங்கன்னு சொன்னேன். அவர்தான், ‘புரோக்கர்கிட்டதானே இருக்கு, நான் பார்த்துக்கறேன்’ன்னு சொல்லிட்டார். வீட்டை வாடகைக்கு விடுவாரா இருக்கும்னு நினைச்சு, இனி அவங்க ரெண்டு பேர் பாடுன்னு நான் ஒதுங்கிட்டேன்.

பிறகு திடீர்னு ஒரு நாள் வீட்டை வாங்கின டாக்டர் போன் செய்து, புரோக்கர் தன்னுடைய குடும்பத்தையே அந்த வீட்டுல வச்சிருக்கிறதாகவும், சாவியைக் கேட்டா மிரட்டுறதாகவும் சொல்லி, வீட்டை நான் மீட்டுக் கொடுக்கணும்னும் கேட்டார்.

ஆரம்பத்துல விட்டுட்டு இப்ப எங்கிட்ட வந்து கேட்டா என்ன சொல்றது? இருந்தாலும் நான் அந்தப் புரோக்கர்கிட்டப் பேசினேன். அவரோ, இனி இந்தப் பிரச்னையில நீங்க தலையிடாதீங்கனு சொன்னார். இருந்தாலும் டாக்டருக்கு ஆதரவாக விவகாரத்தை கோர்ட்டுக்குக் கொண்டு போயிருக்கேன். இந்த விவகாரத்துல தலையிட்டதுக்குத்தான் மிரட்டினாங்களோனு தோணுது.

அன்னைக்கு சாயங்காலம் என் வீட்டுல இருந்து கொஞ்ச தூரத்துலதான் அந்தச் சம்பவம் நடந்தது. கார்ல போயிட்டிருந்த என்னை வழி மறிச்ச சிலர், ‘வீட்டைக் காலி செய்யணும்னு நினைச்சு இந்த விவகாரத்துல தலையிட்டா மூஞ்சுல ஆசிட் ஊத்திடுவோம், பார்த்துக்கோ’னு நேரடியா சொல்றாங்க. போலீஸ் மேல பயமெல்லாம் சுத்தமா இல்லை. இருந்திருந்தா பப்ளிக்கா இப்படி ரவுடித்தனம் பண்ணி மிரட்டிட்டுப் போவாங்களா?” எனக் கேட்கிற மோகன், அந்தப் புரோக்கருக்கு அரசியல் பின்னணி இருப்பதாகவும் சொன்னார்.

மோகன் சர்மா

சொத்தை மாற்றிய போதே ராஜாராமன் பெயருக்குப் பத்திரப் பதிவு செய்யப்பட்டதா, அந்தப் பத்திரம் தற்போது யாரிடம் உள்ளது என்பன போன்ற கேள்விகளுக்கு மோகனிடம் தெளிவான பதில் கிடைக்காத சூழலில், வீட்டை வாங்கியதாகச் சொல்லப்படும் டாக்டர் ராஜாராமனைத் தொடர்பு கொண்டோம்.

“போயஸ் கார்டன் வீட்டு விவகாரம்…” என்றதுமே, “நான் முக்கியமான ஒரு வேலையில இருக்கேன். பிறகு பேசலாம்” என தொடர்பைத் துண்டித்து விட்டார். மீண்டும் தொடர்பு கொண்டபோது நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours