தமிழக அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாகச் சில கட்டுப்பாடுகளை தெளிவுபடுத்தி, அதிகாலை காட்சிக்கு அனுமதியில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தது.
அதில், ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என மொத்தம் 6 நாள்களுக்கு அதாவது, 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மட்டுமே அனுமதி. அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும். காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. இதைக் கண்காணிக்க தனிக்குழு ஒன்றையும் அமைப்பதாகக் கூறியிருந்தது.
அதுமட்டுமின்றி இதற்கு முன் ‘துணிவு’, ‘வாரிசு’, ‘பத்து தல’ ஆகிய படங்களுக்கு அனுமதியின்றி அதிகாலை காட்சிகளைத் திரையிட்ட ரோஹிணி திரையரங்கின் மீது நடவடிக்கை எடுத்து அதற்கு விதித்த அபாரதமும் செல்லும் என்றும் அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளைத் திரையிடும் திரையரங்குகள் மீது இனி சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியிருந்தது.
இந்நிலையில் ‘லியோ’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ’ காலை 4 மணி காட்சி திரையிட அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இன்று மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில் நாளை விசாரிக்கப்படும் என இந்த வழக்கு ஒத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால், “ஒரு நாளைக்கு 5 காட்சிகள், காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்பது அரசின் விதிமுறை. அரசின் இந்த விதிமுறையை மீறி நாம் எதுவும் செய்யமுடியாது. அதன்படி இனி திரைப்படங்களுக்கு அதிகாலை காட்சிகள் இருக்காது. ரசிகர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள். மற்றபடி திரையரங்கைப் பொருத்தவரை டிக்கெட் விற்பனையில் அதிகவிலை வைத்து விற்கும் முறைகேடுகள் ஏதுமில்லை” என்றார்.
கடந்த மாதம் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்திப் பதிப்பிற்கு ‘CBFC’ சான்றிதழ் பெறுவதற்கு மும்பையில் இருக்கும் திரைப்படச் சான்றிதழ் அலுவலகத்தினர் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டார்கள்!’ என்ற குற்றச்சாட்டை வெளிப்படையாக முன்வைத்திருந்தார் நடிகர் விஷால். இதற்கு மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தது. இதையடுத்து இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியும், “2016ல் வெளியான ‘அப்பா’ படத்திற்கு வரிவிலக்கு வாங்க லஞ்சம் கொடுக்க வேண்டிருந்தது” என்று சென்சார் போர்டு குறித்து மனம் திறந்து பேசியிருந்தார்.
தற்போது இதுபற்றிப் பேசிய விஷால், “வட இந்திய சென்சார்டு போர்டு அதிகாரிகள்தான் லஞ்சம் கேட்கிறார்கள். தென்னிந்திய சென்சார்டு போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours