Bigg Boss 7 Day 15: `மன்னிச்சுடுங்க அக்கா!' – புதிய கூட்டணி; `ஜெஸ்ஸி' கூல் சுரேஷின் காதல் கீதம்

Estimated read time 1 min read

இந்த வாரத்தின் முதல் நாள் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி இயல்பாக கடந்தது. ஆச்சரியகரமாக சிறிது நகைச்சுவைகூட இருந்தது.

அட்டாக் மோடை கைவிட்டு ‘ஃபன் மோடிற்கு’ மாறுவோம் என்று மாயாவும் பூர்ணிமாவும் தீர்மானித்தது நல்ல விஷயம். சரவணனைப் போல் தத்தளிக்காமல் யுகேந்திரன் கேப்டன் பதவியை ஒரு மாதிரியாக சமாளித்து விடுவார் என்று தோன்றுகிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 15 EP16)

நள்ளிரவில் எல்லை தாண்டிய சாகசச் செயலில் ஈடுபட்டார் நிக்சன். கிச்சன் ஏரியாவிலிருந்து எகிறிக் குதித்து சின்ன வீ்ட்டுக்குள் புகுந்து ஐஸ் கட்டிகளை எடுத்து வந்தார். விஜய்க்கு காலில் அடிபட்டிருப்பதால், மருத்துவ தேவைக்காக. இது மனிதாபிமான தீவிரவாதம் என்பதால் பிக் பாஸ் விசாரணையோடு நிறுத்திக் கொண்டார். ‘காமிரா’ முன்பாக ஒரு வார்த்தை வேண்டுகோள் வைத்த பிறகு நிக்சன் இதைச் செய்திருக்கலாம். வீட்டைச் சுற்றிலும் ‘Eyes’ இருப்பதை அவர் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.

பிரதீப் – கூல் சுரேஷ்

‘டசக்கு டசக்கு டசக்கு டும்டும்’ என்று காதுகளை கசக்கிப் போடுமளவிற்கான குத்துப்பாடலுடன் நாள் 15 விடிந்தது. இதுவரை எதிரும் புதிருமாக காம்பவுணட் சுவரில் சாய்ந்து வம்பு பேசிய பூர்ணமாவிற்கு இப்போது இன்னமும் வசதியாகப் போய் வி்ட்டது. சின்ன வீட்டிற்குள் ஷிப்ஃட் ஆகி விட்டதால் திண்ணையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு மாயாவுடன் புறணி பேசிக் கொண்டிருந்தார். வழக்கம் போல் ‘அடிச்சுடுவோம்.. தூக்கிடுவோம்’ என்று சீன் போட்டுக் கொண்டிருந்தார் மாயா. ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆவதில்லை.

கச்சிதமாக காய் நகர்த்தி டார்க்கெட்டுகளை தூக்கிய சின்ன வீடு

இந்த வாரம் ‘யார் யாரை’ டார்கெட் செய்து நாமினேட் செய்யலாம் என்று இவர்கள் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். ‘சின்ன வீட்டுல இருக்கற நாம ஆறு பேரும் ஒண்ணா பேசி கரெக்ட்டா அடிச்சா விக்கெட்டுங்க சரியா விழும். ஒருத்தருக்கு இரண்டு ஓட்டுக்களாவது வந்தாத்தான் நாமினேட் ஆவாங்க. நாம கலைச்சு கலைச்சுப் போட்டா வோட்டு வேஸ்ட்டுதான்’ என்று சின்ன வீட்டார் போட்ட ஸ்ட்ராட்டஜி அருமையானது. பிறகு சொன்னபடியே செய்து கச்சிதமாக காய்களை நகர்த்தினார்கள்.

சின்ன வீட்டுக்கான நாமினேஷன் முதலில் தொடங்கியது. ஏற்கெனவே பிளான் செய்த படி ஆளுக்கு இரண்டு ஓட்டுக்களை சரியாக தேர்ந்தெடுத்து நச்சென்று இறக்கியதில் வாக்குகள் வீணாகாமல், சிந்தாமல் சிதறாமல் விக்கெட்டுக்கள் வீழ்ந்தன.

பிக் பாஸ்

இந்த முறை ஒரு சிறிய டிவிஸ்ட் வைத்தார் பிக் பாஸ். வழக்கமாக அனைவரின் நாமினேஷன் முடிந்தவுடன்தான் லிஸ்ட் அறிவிக்கப்படும். ஆனால் அதற்கு மாறாக சின்ன வீட்டாரின் நாமினேஷன் முடிந்தவுடன் பட்டியலை பொதுவில் அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். “நல்லதாப் போச்சு.. அவங்க யாருக்கு குத்தியிருக்காங்கன்னு பார்த்து அதற்கேற்ப நம்மளோட எதிர் ஆக்ஷனை வெச்சுக்கலாம்” என்று பெரிய வீடு உற்சாகப்பட்டது. ஆனால சின்ன வீட்டைப் போல் பெரிய வீடு சரியாகத் திட்டமிடவில்லையா அல்லது போதிய அவகாசம் கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை. முக்கியமான டார்கெட் கைதவறிப் போயிற்று.

ரவீனா

பெரிய வீட்டின் நாமினேஷன் ஆரம்பமாகியது. ‘Beauty with no brains’ என்கிற காரணத்தைச் சொல்லி பூர்ணிமாவின் மீது குத்தினார் ரவீனா. பூர்ணிமா தனியாக ஆடினால் ஒருவேளை பிழைக்கலாம். மாயாவுடன் இணைந்து வம்பு பேசி சீக்கிரமே இந்த வீட்டை விட்டு போகப் போகிறார் என்று தோன்றுகிறது. ‘அவங்க கேமை இன்னமும் ஆரம்பிக்கல’ என்று வினுஷாவின் மீது சரமாரியான வாக்குகள் விழுந்தன. பாவம், பாரதி கண்ணம்மாவின் காதில் மட்டும் இது விழுந்தால் மூசுமூசுவென்று அழ ஆரம்பித்து விடுவார்.

‘என்னது?.. விஷ்ணு நாமினேஷன்ல இல்லையா?’..

பெரிய வீட்டின் நாமினேஷன் முடிவுகள் வந்தன. அதில் ஒரு ஆச்சரியமும் அதிர்ச்சியும் இருந்தது. யெஸ்.. விஷ்ணுவின் பெயர் அதில் இல்லை. இதைக் கேட்டதும் விஷ்ணுவால் நம்பவே முடியவில்லை. உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். கீழே விழுந்து சந்தோஷத்தில் புரண்டார். ‘லவ் யூ கய்ஸ்’ என்று பெரிய வீட்டாருக்கு பறக்கும் முத்தங்களை அள்ளி வீசினார். சின்ன வீட்டாருக்கு கூட இது ஷாக்தான். ‘எப்படி விஷ்ணு தப்பினான்?” சரியாகப் படிக்காத மக்குப் பையன் முதலிடத்தில் பாஸ் ஆனதைப் போல சின்ன வீடு ஆச்சரியப்பட்டது.

‘இல்ல. எனக்குப் புரியல.. கேமே புரியலை’ என்று ஷாக் ஆனார் விசித்ரா. விஷ்ணு எஸ்கேப் ஆனதில் அவருக்கு ஆச்சரியத்தை விடவும் அதிர்ச்சிதான் அதிகமிருந்தது. விஷ்ணுவை நாமினேட் செய்திருந்தவர்களில் விசித்ராவும் ஒருவர். தனது கோபத்தால் வீடு முழுக்க எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் விஷ்ணுவால் எப்படித் தப்பிக்க முடிந்தது? என்று பலருக்கும் ஆச்சரியம்.

விஷ்ணு

ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்களின் முழுமையான பட்டியலைப் பார்த்து விடுவோம். நிக்சன், அக்ஷயா, மணி, விசித்ரா, ஐஷூ, விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா, விக்ரம் மற்றும் பிரதீப்.

‘பிரதீப் மேல வோட்டு போட்டு வேஸ்ட் பண்ணக்கூடாது. எப்படியும் அவன் போக மாட்டான்’ என்று ஜோவிகா யூகித்தது சரியானது. ஏனெனில் பிரதீப்பின் மகத்தான ஆதரவிற்கு பார்வையாளர்களின் கைத்தட்டல் ஒரு சாட்சியமாக இருக்கிறது. நாமினேஷனில் வந்தாலும் அவர் எப்படியும் தப்பி விடுவார். இப்போதைக்கு அவரை டார்கெட் செய்வதை விடவும் வேறு யாரையாவது குறி வைக்கலாம். ஜோவிகா நிச்சயம் புத்திசாலிதான்.

‘Fun’ மோடிற்கு மாறிடலாம்’ – ஆலோசித்த பூர்ணிமா மற்றும் மாயா

மக்கள் ஷாப்பிங் செய்யும் நேரம். இதிலும் ஒரு டிவிஸ்ட் வைத்தார் பிக் பாஸ். ‘இரண்டு நபர்கள் மட்டும்தான் ஷாப்பிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்’ என்று பிக் பாஸ் சொன்னதும் ‘ஷிட்’ என்றொரு சலிப்புக்குரல் எழுந்தது. ‘அதையெல்லாம் ஷாப்பிங் செய்ய முடியாது’ என்று பிக் பாஸ் கலாய்த்திருக்கலாம். மக்களின் கருத்து கணிப்பு படி ‘எந்தப் பொருளை நீக்கலாம்?’ என்பதற்கு ‘ஆட்டா’ என்று வந்தது. எனவே ஆட்டாவை மட்டும் இவர்கள் எடுக்க முடியாது. “சர்க்கரையை அதிகம் எடுங்கப்பா.. அடுத்த வாரம் அதை தூக்கிடப் போறாங்க” என்று கத்தியதின் மூலம் பிக் பாஸிற்கே ஐடியா கொடுத்தார் பிரதீப். யுகேந்திரனும் நிக்சனும் இணைந்து சென்று இரண்டு கூடைகளில் வழிய வழிய பொருட்களை அள்ளி வந்தார்கள்.

விஷ்ணு – மாயா – பிரதீப்

‘அடிச்சுடுவோம்.. தூக்கிடுவோம்’ என்று வில்லன் மாதிரியே பேசிக் கொண்டிருந்த மாயாவிற்கு அந்த கேரக்ட்டர் தமக்கு செட் ஆகவில்லை என்பது இப்போதுதான் தோன்றியிருக்கிறது. மக்களின் எதிர்வினை வேறு மாதிரியாக இருக்கிறது. எனவே தனது பாத்திரத்தை காமெடியாக மாற்றலாமா என்று பூர்ணிமாவுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ‘இல்ல.. எனக்கு கேம் புரியல. எப்படி அட்டாக் பண்றதுன்னு தெரியல. பேசாம ஃபன் மோடிற்கு மாறிடுவோமா?’ என்று பூர்ணிமாவைக் கேட்க, அவர் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினார். என்னதான் உணர்ச்சிகளை செயற்கையாக மாற்றி நடிக்க ஆரம்பித்தாலும் அது சிறிது நேரத்திற்குத்தான் தாக்குப் பிடிக்கும் பிறகு அடிப்படையான குணாதிசயம் வெளிப்பட்டு விடும்.

பிரதீப்

‘சினிமால நல்ல பாத்திரத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்கும்ன்னுதான் இங்க வந்தேன். ஆனா இங்க பாத்திரம் கழுவ விட்டுட்டாங்க. வெளியே போனா ஏதாவது ஒரு ஹோட்டல்ல கழுவற வேலைதான் கிடைக்கும் போல’ என்று நொந்து அனத்தியபடி பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார் விஷ்ணு. இவரிடம் ஒரு நல்ல சென்ஸ் ஆஃப் ஹியூமர் இருக்கிறது. ‘ஆங்க்ரி பேர்ட்’ மோடிலிருந்து வெளியே வந்து நகைச்சுவையை அதிகமாக வளர்த்துக் கொண்டால் மக்களின் பிரியத்தைச் சம்பாதிக்கலாம்.

ஆக்ஷன் பிளான்களை வழங்கிய சின்ன பிக் பாஸ்

சின்ன வீட்டின் பழைய மெம்பர்களை ஒன்று திரட்டிய சின்ன பிக் பாஸ் “வண்டில புது பேசன்ஞர்களா ஏறியிருப்பாங்கன்னு பார்த்தா.. இன்னமும் அதே ஆளுங்கதான் இருக்கீங்க.. விட்டா இங்கயே செட்டில் ஆயிடுவீங்க போல’ என்று பங்கமாக கிண்டலடித்தார். ‘இரண்டு வீடும் போட்டி போட்டு கலந்து ஆடற மாதிரி டாஸ்க் வெச்சா நல்லாயிருக்கும்” என்று இவர்கள் கோரிக்கை வைத்தார்கள். ‘அட்டாக் மோடு முடிஞ்சு அன்பு மோடிற்கு மாறியிருக்கோம். சொல்லுங்க.. வேணுமின்னா அட்டாக் மோடிற்கு மறுபடியும் போயிடறோம்’ என்று குட்டையைக் குழப்பினார் மாயா. ‘நான் எப்பவும் ஸ்ட்ராட்டஜிதான். அதுலதான் பல்லு வௌக்கி தலையை வாருவேன்’ என்று பீற்றிக் கொண்டார் பிரதீப். “நீங்க என்ன செய்வீங்களோ.. தெரியாது. வீடு கலகலன்னு இருக்கணும். அதுக்கு நீங்கதான் பொறுப்பு” என்று உத்தரவிட்டார் சின்ன பிக் பாஸ்.

விசித்ரா

அடுத்ததாக வீட்டிற்கு வந்த புதிய உறுப்பினர்களை அழைத்த சின்ன பிக் பாஸ் “நீங்க ஆக்ஷன் மோடுல இருங்க” என்று இவர்களுக்கு வேறு வியூகத்தை அளித்தார். ‘நான் எப்பவுமே சின்ன வீட்டைச் சேர்ந்தவதான். பெரிய வீட்ல இருந்தாலும் என் மனசெல்லாம் இங்கதான் இருக்கும்’ என்று உண்மையை பளிச்சென்று ஒப்புக் கொண்டார் பூர்ணிமா. (Beauty with no brains). கூடிய சீக்கிரம் அங்கும் இடமில்லாமல் வெளியே போகப் போகிறார்.

யுகேந்திரன்

சின்ன வீட்டாரை தனித்தனி டீமாக அழைத்து ஏதோ ரகசியம் பேசியது பெரிய வீட்டாரின் மண்டையைப் பிறாண்ட வைத்தது. என்னவாக இருக்கும்? எனவே பிரதீப்பை அழைத்த யுகேந்திரன் “என்னன்னு சொல்லுங்க. நாம டீல் போட்டுக்கலாம்’ என்று பேரம் பேச “அணி ஒப்பந்தத்தை என்னால மீற முடியாது. தனித்தனியா டாஸ்க் கொடுத்தாங்க.. அவ்ளதான் இப்பத்திக்கு சொல்ல முடியும்” என்று சொன்ன பிரதீப், பின்குறிப்பாக ஒரு விஷயத்தைச் செய்தார். வேறென்ன, அவரது பிரத்யேக பிராண்ட் சிரிப்புதான். டீயை கழனித் தண்ணீர் மாதிரி தயாரித்து வைத்திருந்தார் வினுஷா. “ஹே.. ஹே.. பாருங்கப்பா. புள்ளப் பூச்சி மாதிரி இருந்த பொண்ணு கூட அட்டாக் மோடிற்கு மாறியிருக்கு” என்று அகம் மகிழ்ந்தார் மாயா.

சுரேஷ் அடைந்த தீடீர் சுளுக்கும் குறையாத தளுக்கும்

வீடு சுத்தம் செய்யும் பணிக்கான டாஸ்க் துவங்கியது. இரண்டு வீடும் மோதிக் கொண்டன. விஷ்ணுவும் மணியும் ஆடிய ஆட்டத்தில் விஷ்ணு வெற்றி பெற்றார். (விஷ்ணுவிற்கு சுக்கிர திசை ஆரம்பிச்சிருக்கு போல. ஒரே அதிர்ஷ்டமா கொட்டுது!). தங்கள் அணி வெற்றி பெற்றதால் சின்ன வீட்டார் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்கள். ஆக, பெரிய வீட்டார்தான் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

அடுத்ததாக பாத்ரூம் சுத்தம் செய்யும் பணிக்கான டாஸ்க். இதில் பிரதீப்பும் ‘கூல்’ சுரேஷூம் மோதினார்கள். முதல் ரவுண்டில் இருவருமே தவறியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. பிரதீப் பின்தங்கியதால் சுரேஷ் வெற்றி பெற்றார். அந்த உற்சாகத்தில் அவர் வழக்கம் போல கைகளை உயர்த்தி ஹைடெஸிபலில் கத்த, கை சட்டென்று சுளுக்கிக் கொண்டது. வலியால் அவஸ்தைப்பட்டு முகம் சுளித்த சுரேஷிடம் பிக் பாஸ் பரிவாக விசாரிக்க ‘ஓவரா சீன் போட்டாரு.. அதான்” என்று சிரிப்பை அடக்க முடியாமல் சொன்னார் யுகேந்திரன்.

மாயா – பூர்ணிமா

சுளுக்கு ஏற்பட்டாலும் சுரேஷின் வழக்கமான தளுக்கு குறையவில்லை. தான் வெற்றி பெற்ற உற்சாகத்தை அரைநிர்வாணக் கோலத்துடன் வீடெங்கும் சுற்றிச் சுற்றி ஓடி அறிவித்தார். தரையில் உருண்டு புரண்டார். WWF வீரர் மாதிரி மார்பில் ஆவேசத்துடன் அறைந்து கொண்டார். (டம்ளரை அடுக்கி வெச்ச விளையாட்டுக்கு ஒலிம்பிக்ல தங்கம் வாங்கின மாதிரி என்னாவொரு பில்டப்பு?!). ஆக.. சின்ன வீட்டார்தான் பாத்ரூம் சுத்தம் செய்ய வேண்டும். ‘கழுவப் போறது.. யாரு.. நீதான்..’ என்று எதிர் அணியை பாடி வெறுப்பேற்றினார்கள். (கமலோட பாட்டு இதுக்கா ஃபேமஸ் ஆகணும்?!).

மாயாவின் துணி மூட்டைகள் படுக்கையை அடைத்துக் கொண்டிருப்பதால் அதை எடுக்கச் சொல்லும் வேண்டுகோளுடன் அவரை அணுகினார் ஐஷூ. ‘உங்க வீட்டுல எடுத்து வெச்சுக்கங்களேன்’ என்று ஐஷூ சொல்வதைப் பார்த்தால் மாயா நிரந்தரமாக அங்கேயே இருப்பார் என்று அவர் முடிவு செய்து கொண்டதைப் போல் இருக்கிறது. ‘ஹலோ.. ஒரு வாரத்திற்கான துணிகளை எடுத்துக் கொண்டு போங்கன்னுதான் பிக் பாஸ் சொல்லியிருக்காரு..’ என்று மாயா ரூல் பேச, ‘அக்கா.. ப்ளீஸ்க்கா.. ஸாரி… மன்னிச்சூ… நீ சொல்றதையெல்லாம் செய்யறேன்” என்று திருட்டுக் கெஞ்சு கெஞ்சினார் ஐஷூ. ‘அப்படி வா.. வழிக்கு..’ என்று தன்னை பெருமிதமாக உணர்ந்தார் மாயா. (நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்!).

சரவண விக்ரம் – பூர்ணிமா – வினுஜா

பூர்ணிமாவுடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார் சுரேஷ். ‘ஹார்ட்’ வடிவத்தில் அவர் சுட்டுக் கொடுத்த சப்பாத்தியை ‘ஜெஸ்ஸி.. ஜெஸ்ஸி’ என்கிற வசனத்துடன் காவியப் பொருள் மாதிரியாக வர்ணித்து, இதை நெஞ்சுக்குப் பக்கத்துலயே வெச்சுப்பேன்’ என்று சட்டைக்குள் ரொமான்ஸாக செருகிக் கொண்டார். (உவ்வேக்!). ‘என் கெரகம். என்ன பண்றது.. இந்தக் காமெடியை எல்லாம் சகிச்சுக்கிட்டு இந்த வீட்ல குப்பைக் கொட்ட வேண்டியிருக்கு’ என்பது பூர்ணிமாவின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கலாம்.

துவக்க நாளில் போட்டியாளர்கள் உள்ளே வந்த ஆர்டரின் படி, ஒரு ராப் பாடலை பாடி ஒவ்வொருவரையும் பற்றி வரிசையாக அதில் எழுதியிருந்தார் நிக்சன். ரைமிங்கும் கிண்டலும் பாராட்டும் கலந்திருந்த வரிகளையும் நிக்சன் பாடிய விதத்தையும் மக்கள் ரசித்துக் கேட்டார்கள். இந்த இனிமையான நினைவுகளோடு இந்த நாள் முடிந்தது.

சண்டை, சச்சரவு எல்லாம் சற்று தணிந்து வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது. ஆனால் பிக் பாஸிற்கு இது நிச்சயம் பிடிக்காது. எதையாவது பற்ற வைத்து சண்டைக்கோழிகளை தயார் செய்து விடுவார்.

எனவே வரும் நாட்களில் இப்படியான ரணகள வேடிக்கைகள் நிச்சயம் நிகழும். காத்திருந்து பார்ப்போம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours