Ram: `முரண்களும், மகத்துவமும், ப்ரியங்களும்' – இயக்குநர் ராம் பிறந்தநாள் பகிர்வு!

Estimated read time 1 min read

2007 அக்டோபர் 5 ஆம் தேதி இயக்குநர் ராமின் முதல் படைப்பான ‘கற்றது தமிழ்’ வெளியானது.

இயக்குநர் பாலுமகேந்திராவின் கூட்டிலிருந்து மற்றொரு பறவை சிறகடித்து வானில் பறக்கத் தொடங்கிய நாள். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள். ஆனால், இயக்கியது நான்கு படங்கள். ‘கற்றது தமிழ்’, `தங்க மீன்கள்’, `தரமணி’, `பேரன்பு’ என ஒவ்வொரு படைப்பும் வெவ்வேறு விதமான வாழ்வியல். என்னைப் பொறுத்தவரை ராம் – பாலுமகேந்திராவின் நகல். மனிதர்களின் உறவையும், உணர்வுகளையும், அறத்தையும், இயற்கையையும் படைப்புகளில் பிரதிபலிக்கும் கலைஞன். எடுத்தது நான்கு திரைப்படங்கள் என்றாலும் மக்களால், தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருப்பவர்.

இயக்குநர் ராம்

ராமின் படைப்புகள் தத்துவார்த்த ரீதியாகவும் சமூகத்தோடு உரையாடிக் கொண்டே இருக்கும். அதே சமயம், ராமின் படங்களில் வரும் காட்சிகளிலும் வசனங்களிலும் சில முரண்களும் உண்டு. பொதுப்பார்வையோடு பார்க்கக் கூடிய பார்வையாளர்களில் சிலருக்கு கேள்விகளும் எழலாம். கற்றது தமிழில், “பிரபாகரன் ஏன் வன்முறையை கையில எடுக்கணும்? அவர் ஏன் இத்தனை கொலைகள் பண்ணனும்? தமிழ் படிச்சவங்க இப்படித்தான் இருப்பாங்களா? அவரால மத்தவங்கள மாதிரி வாழ முடியாதா? நாங்க படிக்குறோம், அதனால ஐ.டி-யில சம்பாதிக்குறோம்?” என்ற கேள்விகள் அவரை நோக்கி முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ‘தரமணி’யிலும் இது போன்ற சில கேள்விகள் உண்டு. இதற்கெல்லாம் ராம் அளித்தது ஒரே பதில் தான், “திரைப்படம்-ங்கிறது சர்வாதிகாரம் கிடையாது. உங்களுக்கு என்ன புரியுதோ, அதுதான் புரியும். அதை நான் தீர்மானிக்கவும் முடியாது.

ஆனா, அதுக்காக நான் உங்கள குறைச்சி மதிப்பிடவும் முடியாது. உங்களுக்குப் புரியும்னு நான் நம்புறேன். உங்களுக்குப் புரியலனா அது பிரச்னை இல்ல. ஆனா, முழு படமே புரியாம இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல” வலி, குற்றம், குரூரம், வன்மம், தனிமை, துரோகம், ஏமாற்றம், அழுகை என அத்தனை உணர்ச்சிகளையும் தன் படங்களில் கையாள்பவர். இவற்றை திரை மொழியில் கடத்துவதும் அசாதாரணமானது. ஆனால், ராமின் படங்களில் பேசக்கூடியவை அனைத்தையும் கதாபாத்திரங்களும், இயற்கையும் தாங்கிப் பிடிக்கின்றன.

இயக்குநர் ராம்

ராமும் தனிமையும்!

தனிமை – எல்லோருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் எந்தக் காலத்திலாவது வந்து சேரக்கூடிய துயரம். `கற்றது தமிழ்’ பிரபாகரன் ஒரு ஐ.டி ஊழியரின் காரை மறித்து விட்டு, “பேச யாருமே இல்லடா. ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு போ!” என தயவுடனும், கோபத்துடன் மாறிமாறிப் பேசும் காட்சி சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்து வந்த பிரபாகரனுக்கு, இந்தச் சமூகத்தின் இன்னல்களுக்கு மத்தியில் வாழும் போது வெளிப்படும் வலி தான். தரமணியில் வரும் பிரபுநாத்திற்கும் இதே போன்ற நிலை தான். பெரிதாக எந்தப் பெண்களிடமும் பேசாத ஒருவன், தன்னுடைய காதலி ஏமாற்றிவிட்டதாக நினைத்துக் கொண்டு எல்லாப் பெண்களிடமும் செல்போனில் பேசி மயக்குவார்.

இப்படிச் செய்யும் போது, ஒரு கொலையும் அரங்கேறிவிடும். அதே போல, ஆண்ட்ரியாவும் தனிமையினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் சென்றுவிட்டு வருவார். ஒருவேளை, இவர்களெல்லாம் தனிமையில் இல்லாமல் தங்கள் குடும்பத்துடனோ அல்லது தாம் ஆசைப்பட்டவர்களுடன் வாழ்ந்திருந்தால் இதெல்லாம் நடக்க வாய்ப்புகள் குறைவு தானே. அதே போல, பேரன்பிலும் யாருக்கும் தொந்தரவில்லாத இடத்தில் தன் மகளை அழைத்துக் கொண்டு செல்வார். தங்க மீன்களிலும் மகளைப் பிரிந்த தந்தையின் தனிமையை ராம் அதிஆழமாக காட்சிப்படுத்தியிருப்பார்.  பாடல் வரிகளும் அதற்கேற்ப எழுதப்பட்டிருக்கும். 

“போய் பார்க்க யாரும் இல்லை. வந்து பார்க்கவும் யாரும் இல்லை. வழிப்போக்கன் வருவான், போவான். வழிகள் எங்கும் போகாது.”

தங்க மீன்கள்

ராமும் குழந்தைகளும்!

ராமின் படங்களில் வரும் குழந்தைகள் பெரும் தாக்கத்தைக் கடத்திவிட்டுச் செல்வர். கற்றது தமிழில் குட்டி ஆனந்தியும், குட்டி பிரபாகரும் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. ‘தங்கமீன்கள்’ படத்தில் தனது நண்பரிடம் கைமாற்றாக காசு வாங்கச் செல்லும் போது, நண்பரின் மகன் “அந்த அங்கிள் ஏன் பா வீட்டுக்குள்ள வரல” எனக் கேட்கும் போது, “கடன் வாங்குற மாமா-லாம் வீட்டுக்குள்ள வர மாட்டாங்க பா” என நண்பர் சொல்வார். நம் கருத்தை, குழந்தைகளிடம் திணிக்கும் போது தான், அவர்கள் குழந்தைக்கான இயல்பை இழந்து விடுகின்றனர். தரமணியில் ஆல்தியாவின் மகன் ஏட்ரின், ஆண்ட்ரியா குடித்து வைத்த மது பாட்டில்களைச் சேகரித்து லிஃப்டில் கொண்டுச் செல்வான். பழைய பேப்பர்களை வாங்கக்கூடிய ஒருவர், “இதையெல்லாம் யார் குடிச்சாங்க?” எனக் கேட்கும் போது, “எங்க அப்பா!” எனச் சொல்லும் சிறுவன் நம்மால் அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது.

இதற்கடுத்த காட்சியே, ஆண்ட்ரியாவின் அருகே வந்து “பிட்ச்-னா என்னம்மா? அப்படினா தப்பா மா” எனக் கேட்கும் கேள்வியும் கூட. இவை அனைத்தையும் குழந்தைகள் மூலம் நம்மிடையே எதிர் கேள்வியாக வைக்கின்றார், ராம். ரயிலில் இறந்த முதியவரின் வீட்டுக்குச் சென்று திருடிய பணத்தைத் திரும்பக் கொடுக்கும் காட்சியில், “மாமா… இந்தாங்க மாமா சாப்பிடுங்க” எனக் கையில் சாப்பாட்டுத் தட்டைக் கொடுக்கும் சிறுமி பேரன்பின் உருவமாய் காட்சிப்படுத்தியிருப்பார். ‘பேரன்பு’ படத்தில் மம்முட்டி தன் மகளைப் போல நடக்க முயற்சித்துப் பார்ப்பார். மகளைப் போல வாழ்வது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்த பின்னர்,  “ஒருத்தவங்க கிட்ட நீங்க ஏன் மத்தவங்களை மாதிரி இல்லைன்னு கேக்குறது எவ்ளோ பெரிய வன்முறைன்னு புரிஞ்சிகிட்டேன்” என்பது அனுபவிப்பவர்கள் மட்டுமே உணர்ந்த வசனம். நம்முடைய விருப்பு, வெறுப்புகளை குழந்தைகளுக்குள் திணிக்கும் போதுதான், அவர்களுக்குள் இருக்கும் குழந்தைமையை இழக்கின்றனர். 

“அவளை இங்க நான் குழந்தையா தான, விட்டுட்டுப் போனேன். திரும்பி வர்றதுக்குள்ள அந்த குழந்தைய கொன்னுட்டீங்கள்ல!”

ராமின் உலகில் பறவைகளும் விலங்குகளும்!

நல்லவர், கெட்டவர், ஏழை பணக்காரர் என்ற எந்தவித பாரபட்சமும் இல்லாமல் ஆறறிவு மனிதனை சரிசமமாக நடத்தக்கூடியவை ஐந்தறிவு பிராணிகளே. பல நேரங்களில், அலையடித்துக் கொண்டிருக்கும் மனதை பிராணிகள் ஆசுவாசப்படுத்துகின்றன. “அன்னைக்கு இவங்களால, இவங்களோட செல்ல நாய் டோனியை காப்பாத்த முடியல. இன்னைக்கு நம்மளால இவங்களை காப்பாத்த முடியல. உங்களுக்கு கொஞ்சம் நேரம் இருந்துச்சுனா, அச்சன்கோவில் பக்கம் வந்து பாருங்க சார்! குட்டி பிரபாகரும் குட்டி ஆனந்தியும் கையில் விளக்கோட, செல்ல நாய் டோனியோட காடுகள்ல திரிஞ்சிகிட்டு இருக்குறத நீங்க பார்க்கலாம்” எனப் பேசும் ராமின் குரல், கற்றது தமிழில் ரயிலில் அடிபட்டு மரித்துப் போகும் டோனியின் உயிருக்காக எல்லோரையும் கலங்க வைக்கும். தங்க மீன்களில், தன் மகள் ஆசைப்பட்ட ‘பக்’ நாய் எனும் குதிரையை வைத்து நம்மை உருக வைத்திருப்பார். கூடவே, படம் நெடுக கனவுகளும் நிஜங்களுமாய் வரும் தங்க மீன்களும்.

தங்க மீன்கள்

‘தரமணி’யில் 28வது மாடியில் குடியிருக்கும் ஆண்ட்ரியாவின் வீட்டிற்கு அடிக்கடி புறாக்கள் வந்து போகும். “இவர்கள் இங்கு வருவதற்கு முன்பு, இந்த வீடு இங்கு முளைப்பதற்கு முன்பு, வயலும் காடும் இங்கிருந்த காலத்திலிருந்து இந்த புறா இங்கு வந்து போகிறது. தான் தொலைத்த வயலையும் வயற்காட்டையும் தேடியதைப் பற்றி சொல்வதற்காக, தன் துணையைத் தேடிச் செல்கிறது.” என வாய்ஸ் ஓவரில் அறிமுகப்படுத்துவார். இதை ஆண்ட்ரியா – வசந்த் ரவியின் காதல் கதையோடு முடித்திருப்பார், ராம். ‘பேரன்பு’ படத்தில் தன் மீது கோபத்தில் உள்ள மகளை சாந்தப்படுத்துவதற்காக மம்மூட்டி குதிரை ஒன்றை வாங்கி வருவார். குதிரையைப் பார்த்தவுடன் தந்தையுடன் அன்பாகப் பழகுவாள். இப்படியாக, ராமின் உலகில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் எப்போதுமே இடமுண்டு.

“பசுத்தோல் போர்த்திய புலி, நீயா? நானா?”

ராமும் மன்னிப்பும்!

‘தரமணி’யில் பிரபுநாத், பல பெண்களுக்கு கால் செய்து பேசி ஏமாற்றி வருவார். இப்படி பேசும் போது, அழகம் பெருமாளின் மனைவியிடமும் பேசிவிடுவார். இது அழகம் பெருமாளுக்கு தெரியவரும் காட்சியில், ” நீ நல்லதுதான் பண்ணிருக்க லே. நீ நாசம் பண்ணல” எனச் சொல்லி கட்டியணைத்து மன்னித்துவிடுவார். ரயிலில் முதியவரிடம் திருடிய பணத்தை திருப்பிக் கொடுக்க நாகூருக்குச் செல்வார். இறந்தவரிடம் இருந்து பணத்தை திருடியவனைக் கூட சாப்பாடு போட்டு வழியனுப்புவார், அந்தப் பெண்மணி. அதே கிளைமாக்ஸ் காட்சியில் ஆண்ட்ரியாவி்டம் மீண்டும் வந்து, “நான் தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சிடு ஆல்தியா. தப்பெல்லாம் என்மேல தான். உண்மையிலேயே நான் மாறிட்டேன்” என வசந்த்ரவி சொல்வார். “நான் யாரு உன்னைய மன்னிக்கறதுக்கு. பெரும்பாலும் எல்லா ஆம்பளைங்களும் எல்லா பொம்பளைங்களுக்கு என்ன பண்ணுவாங்களோ, அததான் நீயும் பண்ணிருக்க” என்ற வசனம் எல்லா ஆணால் புரிந்துகொள்ளப்படாத பெண்ணின் வலி தோய்ந்த குரல்.

தரமணி

ஆனால், அடுத்த நாளே ரோஜாப்பூக்களுடன் மன்னிப்பு கேட்ட பிறகு பிரபுநாத்தை ஏற்றுக்கொண்டதாக காட்சி முடியும். வன்மம், திருட்டு, கயமை என அத்தனை குணங்களையும் கொண்டிருந்த மனிதர்களைக் கூட இயக்குநர் ராம் மட்டுமே மன்னிக்க முடியும். ‘பேரன்பு’ படத்தில் ஆதரவற்றவரை் என்ற முகமூடியோடு வரும் அஞ்சலியை மம்மூட்டி தன் மனைவியாக ஏற்றுக்கொள்வார். ஆனால், அஞ்சலியின் மூலம் வீட்டை எழுதி வாங்கிவிடுவர். அதற்கு அடுத்த காட்சியில் துணி எடுப்பதற்காக வீட்டிற்கு வரும் மம்மூட்டி, “சாரி சார். நீங்க தான் அவங்களோட ஹஸ்பன்ட்-ன்னு அன்னைக்கு எனக்குத் தெரியாது. இல்லனா, வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அப்படிலாம் பேசிருக்க மாட்டேன். மன்னிச்சுடுங்க பாபு” என அஞ்சலியின் கணவரிடம் கையெடுத்துக் கும்பிடுவார். தமிழ்சினிமாவில், இப்படியொரு மன்னிப்பை யாருமே கேட்டிருக்க மாட்டார்கள். ராமின் கதைகளில் வரும் மனிதர்கள் மகத்தானவர்கள்.

“இந்த உலகத்தில் முழுமை என்று எதுவும் கிடையாது. அழகானது என்று எதுவும் கிடையாது. அதீத உண்மை என்று எதுவும் கிடையாது. சரி, தவறு, குற்றம், பாவம் என எதுவுமே கிடையாது. இந்த உலகம் முழுமையற்றது, கேவலங்களால் நிறைந்தது. இந்த உலகத்தில் எதுவுமே திட்டவட்டமானது கிடையாது. அப்படித்தான் மனிதர்களும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.”

ராமின் புரிதல்!

‘தரமணி’யில் ஆண்ட்ரியா, தன்னுடைய கணவன் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் எனத் தெரிந்ததும் “இதைப்பத்தி ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?” எனக் கேட்பார். அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதை உணர்ந்த பின்னும், அவருடன் அன்பாக பேசி “You’re a Good Soul” எனச் சொல்லிவிட்டு பிரிந்துவிடுவார். ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து பேசும் போது, “உண்மைய சொல்லிருக்கலாம்ல. ஏன் உங்களை நீங்களே?” என வசந்த் ரவி கேட்கும் போதும், “நான் பரவால்ல, ஸ்ட்ரைட் வுமன். வாழ்ந்திடலாம். ஆனா, அவனை யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க. உங்களாலயே புரிஞ்சிக்க முடியலல்ல” எனச் சொல்லுவார். ஒருவேளை இந்த உண்மையைச் சொல்லியிருந்தால் ஆண்ட்ரியா மோசமாக அழைக்கப் பட்டிருக்க மாட்டார்.

பேரன்பு

ஆனாலும், இவையனைத்தையும் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு பெரும் புரிதலுடன் இருப்பார். ‘பேரன்பி’லும் இப்படியான ஒரு காட்சி எடுக்கப்பட்டிருக்கும். ஆள்அரவமற்ற காட்டில் தன் மகளுக்காக வாங்கிய வீட்டை ஏமாற்றி வாங்கிவிடுவார்கள்.  மம்மூட்டி, மீண்டும் அதே வீட்டிற்கு மகளின் துணியை எடுக்க வரும் போது, “எங்கள மன்னிச்சிடுங்க சார். நாங்க ஏன் அப்படி பண்ணுனோம்னு கேட்டுட்டு போய்டுங்க சார்” என அஞ்சலி சொல்வார். “உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாத அழகான ஒரு குழந்தை இருக்குறப்போ, என்னையப் போய் ஏமாத்த நினைச்சீங்களே. அப்போ, உங்களுக்கு எவ்ளோ பெரிய பிரச்னை இருந்திருக்கும்” எனச் சொல்லிவிட்டுச் செல்வார். வருத்தம், எரிச்சல், வன்மம், பழிவாங்கும் உணர்ச்சி என இவை அனைத்திற்கும் ஒரு அர்த்தமும் இல்லை என்பதை   மம்மூட்டியின் மூலம் நமக்குச் சொல்லியிருப்பார், ராம்.

“மனிதர்களை ஜட்ஜ் பண்ணக் கூடாது, புரிஞ்சிக்கணும். ஒருத்தவங்களை ஜட்ஜ் பண்ணிட்டா, அவங்கள கடைசி வரைக்கும் புரிஞ்சிக்கவே முடியாது”

ராமும் முரண்களும்!

கற்றது தமிழில் ” Touch me Here, If you Dare” என டி ஷர்ட் அணிந்திருந்த பெண்ணிடம் அத்துமீறுவார், பிரபாகர். இந்த காட்சியைப் பற்றி பலருக்கும் முரண்கள் உண்டு. படத்தின் கிளைமாக்ஸில் பேசும் ஒரு பெண், “என் டி-ஷர்ட் என் இஷ்டம். நான் என்ன எழுதுனா உங்களுக்கு என்ன? எழுதாட்டி பார்க்க மாட்டீங்களா? எழுதினாலும் எழுதலனாலும் பார்க்குறவன், பார்த்துட்டே தான் சார் இருக்கான். என்ன நாங்க எழுதுறதுனால, உங்களுக்கு உறுத்துது. Just a male Ego” எனச் சொல்லுவார். இதுவே அந்தக் காட்சிக்கான முரண்களை எல்லாம் கலைத்துப் போட்டு விடும். ‘தரமணி’யில் லிஃப்டில் பேசும் வசந்த் ரவி, “ஸ்கர்ட்டை இங்க வரைக்கும் போடாம, கொஞ்சம் கீழ இறக்கி அங்க வரைக்கும் போடலாம்ல” எனச் சொல்லுவார். உடனே ஆண்ட்ரியா “ஏன்” என கேள்வி கேட்க, “இல்ல, மத்தவங்க பார்க்கும் போது ஒரு மாதிரியா பார்ப்பாங்க. அதான்” என பதிலளிப்பார். “ஏன் நீ அப்படி பாக்குறியா? என் ஸ்கர்ட் பத்திலாம் பேச வேணாம்.

கற்றது தமிழ்

நீ ஒன்னும் அதைப் பத்திலாம் கவலைப் பட வேணாம்” என ஆண்ட்ரியா சொல்லும் வசனம் கற்றது தமிழின் நீட்சியே. கட்டுரையின் முன்பே சொன்னது போன்று கற்றது தமிழில் வரும் சில முரணான விஷயங்களுக்கு அதிலேயே பதில் இருக்கும். உலகமயமாதல் எனும் சூழல் வரும் போது சென்னை போன்ற நகரங்களில் வாழும் நடுத்தர மக்கள், பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் என்னவாக மாறுகிறது, உளவியலாக ஒருவன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதே கரு. தமிழ், வரலாறு, அரசியல் வரலாறு, பொருளியல், மானுடவியல் என கலைப் படிப்புகளை விட கணினி சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் இப்போது வரை நீடிக்கிறது. இந்த முரண்கள் எல்லாம் முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். 

” நிறைய முரண்கள் வரலாம். ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக்கலாம். ஆனா, அதை பேசி தான் வெளியில வர முடியும்.”

இப்படி ராமின் படங்களில் வரக்கூடிய வலி, குற்ற உணர்வு, ப்ரியம், பேரன்பு, மகிழ்ச்சி என பலவற்றையும் பேசிக் கொண்டே செல்லலாம். மனித உணர்வுகளையும் இயற்கையையும் மட்டுமே அவரின் படங்கள் பேசுகின்றன. பேசிப்பேசி தீர்க்க முடியாத இந்த இரண்டைப் பற்றியும் எவ்வளவு காலம், யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், இயக்குநர் ராம் அளவிற்கு காட்சிமொழியில் பேச முடியாது. அதேபோல, இவரின் படங்களில் வரும் உணர்வுகளையும் மனிதர்களையும் எதற்குள்ளும் வரையறுக்க முடியாது. 

இயக்குநர் ராம்

“இப்பொழுது படம் எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய என்னுடைய பிள்ளைகளில், ராமுடைய சினிமா எனக்கு மிகமிக பிடிக்கும். காரணம், ராம் தமிழ் படித்தவன். ராமுடைய சினிமாவில் தமிழ் இருக்கும். ராமுடைய சினிமாவில் ஒரு கவிதைத்தன்மை இருக்கும். ஒரு கவித்துவம் இருக்கும். ராமுடைய அணுகுமுறை உணர்வுப் பூர்வமானது” என இயக்குநர் பாலுமகேந்திரா சொல்லியிருப்பார். “சாதாரண மனிதனுக்கும் படைப்பாளிக்கும் இடையே உள்ள வித்தியாசம் – படைப்பாளிகளுக்குள் இருக்கும் கூர்மைப்படுத்தப்பட்ட நுண் உணர்வுகள் தான்” என்று பாலு மகேந்திரா சொல்லுவார்.

அந்த நுண் உணர்வுகளின் வழியே கதை சொல்லும் பேரன்பின் ஆதி ஊற்றான இயக்குநர் ராம் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours