ஒருவர் அடிப்படையில் நல்லவராகவே இருக்கலாம். ஆனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்துதான் அவரைப் பற்றிய சித்திரம் மற்றவர்களின் மனதில் வரையப்படுகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 14 EP 15)
ஒட்டுப் போட்ட கோட்டுடன் அரங்கத்திற்குள் நுழைந்த கமல், நேரடியாக விஷயத்திற்குள் வந்தார். “இவங்க சண்டை போட்டதைப் பற்றி நிறைய விசாரிச்சுட்டோம். ஆனால் தொக்கி நிற்கும் கேள்வி ஒன்று இருக்கிறது. குடுமிப்பிடி சண்டைக்கு நடுவுல தலைவர் என்னதான் செஞ்சார்? புறம் பேசாமல் அவரிடமே விசாரிப்போம்” என்று அகம் டிவி வழியாக உள்ளே சென்றார்.
‘ஹய்யோ… என்னையே குறுகுறுன்னு பார்க்கறாரே… பார்க்கறாரே’ என்றபடி சங்கடத்துடன் நின்றிருந்தார் சரவணன். ‘கடந்த வார கேப்டன் எப்படிச் செயல்பட்டார்?’ என்று மற்றவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார், கமல். “அண்ணன் ரொம்ப நல்லவரு… வல்லவரு… பொறுமையானவரு. இரண்டு வீட்டிற்கும் பொதுவா இருந்தாரு… நிதானமா ஹாண்டில் பண்ணாரு” என்கிற பாசிட்டிவ் கமெண்ட்டுகள் ஒரு பக்கம் வந்தாலும் ‘கமாண்டிங்கா இல்ல’ என்கிற நெகட்டிவ் கமெண்ட்டுகளும் வந்தன.
“சரி இருங்க… அவர் கிட்டயே நேரடியா விசாரிக்கலாம்’ என்ற கமல், ஓர் இடைவெளி விட்டு, “பிக் பாஸ்… நீங்க என்ன சொல்றீங்க… ஏன்னா சரவணன் கிட்ட கேள்வி கேட்டா… எப்படியும் அவர் உங்க கிட்டதான் வந்து நிக்கப் போறாரு. அதுக்குத்தான் ஸ்ட்ரையிட்டா உங்க கிட்டயே வந்துட்டேன்” என்று கலாய்த்தது அநியாயமான குறும்பு. வெட்கத்தில் தலை சொறிந்தார் சரவணன். “அத வேற ஞாபகப்படுத்திட்டீங்க… மனசெல்லாம் புண்ணா இருக்கு தம்பி. அவ்ளோ கேள்விகள் கேட்டு என்னை இம்சைப்படுத்திட்டாங்க” என்று பிக் பாஸ் கண்கலங்கினார். பிக் பாஸையே கதற விட்ட இந்த சீசனின் மக்களும் கேப்டனும் உண்மையிலேயே கில்லாடிகள்தான்.
+ There are no comments
Add yours