விஜய் டிவியின் ஹிட் ஷோவான பிக் பாஸ் தமிழின் சீசன் 7 கடந்த அக்டோபர் முதல் தேதி தொடங்கியது. இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகள். ஒவ்வொரு வாரமும் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இடம்பிடிப்பவர்கள் இரண்டாவது வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
இந்த இரண்டாவது வீட்டிற்குச் செல்கிற போட்டியாளர்கள்தான் மற்ற போட்டியாளர்கள் எல்லோருக்குமான சமையல் உள்ளிட்ட எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சில சீசன்களில், ‘முதல் வாரம் பிக் பாஸ் யாரையும் வெளியில் அனுப்ப விரும்பவில்லை’ எனச் சொல்லி எவிக்ஷன் இல்லாமலிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த சீசனில் அந்தச் சலுகையெல்லாம் இல்லை.
முதல் எவிக்ஷன் நேற்று நிகழ்ந்தது. அனன்யா எலிமினேட்டாகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் பார்த்தால் யுகேந்திரனே மிகக் குறைந்த ஓட்டுகள் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது. அதற்கடுத்த இடங்களில் பவா செல்லத்துரையும் அனன்யாவும் இருந்த நிலையில் யுகேந்திரன், பவாவைத் தாண்டி அனன்யா வெளியேறியது கடைசி நிமிட அதிரடி என்றார்கள்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத இன்னொரு சம்பவமும் ஞாயிற்றுக் கிழமையான நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளது.
அதாவது பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டனாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் தேர்வாகியிருக்கிறார். அவரிடம், சக போட்டியாளர்களைப் பற்றி ஓரே வார்த்தையில் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கிறார் பிக் பாஸ்.
ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தன் கருத்தைச் சொல்லி வந்த சரவணன், பவா செல்லத்துரை குறித்துக் குறிப்பிடும் போது ‘சோம்பேறி’ எனக் குறிப்பிட்டாராம்.
அதுமட்டுமின்றி, தொடர்ந்து இந்த வாரமும் பவா செல்லத்துரை இரண்டாம் வீட்டிலேயே இருக்கிற மாதிரியான சூழல்தான் உருவானதாம்.
எனவே, அதிருப்தியடைந்த பவா, “இந்த வீட்டில் என்னால் சில டாஸ்குகளைச் செய்ய இயலாது. இந்த வீட்டுக்கு நான் வரும் போது சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் இருக்குமெனத் தெரிந்துதான் வந்தேன். ஆனால் இங்குக் கூடுதலாக வன்மமும் அதிகமாக இருக்கிறது. எனவே தொடர்ந்து இங்கு இருந்து டாஸ்குகளைச் செய்ய என் உடலும் ஒத்துழைக்காது. எனவே நான் வெளியேறி விடுகிறேன்” எனச் சொல்லி, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விட்டாராம்.
பவா செல்லத்துரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற போதே ‘இவர் ஏன் இந்த நிகழ்ச்சிக்குப் போறார்’ என்கிற விமர்சனங்கள் பல தரப்பிலிருந்தும் எழுந்தன. ஆனாலும் அவர் விரும்பியே நிகழ்ச்சிக்குச் சென்றதாகச் சொன்னார்கள். நிகழ்ச்சியிலும் ஒரே வாரத்தில் தன் நடவடிக்கைகளால் சர்ச்சைகளில் சிக்கினார், சக போட்டியாளர்களின் கேலி கிண்டலுக்கும் ஆளானார். இவர் சின்சியராக கதை சொல்லிக் கொண்டிருந்த போது சில போட்டியாளர்கள் கொட்டாவி விட்டதெல்லாம் நடந்தது. ஓர் எழுத்தாளர் ஊறுகாய் விற்கும் பெண்ணை அத்துமீறித் தொட்டது, அதற்காக அறை வாங்கியது போன்ற கதையையெல்லாம் இவர் சொன்ன போது, போட்டியாளர்களில் சிலர் இவரை விமர்சனம் செய்தார்கள்.
உச்சமாக நடிகை வனிதா விஜய்குமாரின் மகள் ஜோவிகா ’படிச்சா மட்டும்தான் வாழ முடியுமா’ எனக் கேட்ட போது அவர் கருத்துக்கு ஆதரவாக இவர் பேசியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ‘ஓர் எழுத்தாளர் இப்படிப் பேசலாமா’ என்றார்கள். அதே ஜோவிகாவை இவர் பாராட்டிக் கை குலுக்கச் செல்ல, அவர் இவரது வயதைக் கூடப் பொருட்படுத்தாமல் பதில் மரியாதைத் தராமல், அதாவது கை கொடுக்காமலேயே அலட்சியமாகச் சென்றுவிட்டதும் நடந்தது.
தொடர்ந்து நடந்த இது மாதிரியான சம்பவங்களின் காரணமாகவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.
பவா வெளியேறியது குறித்து முறைப்படி பிக் பாஸ் இன்று தெரிவிக்கலாம் எனத் தெரிகிறது. பவாவின் இந்த முடிவு குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் சொல்லுங்கள்.
+ There are no comments
Add yours