மதுரைக்கு வெளியே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடக்கின்ற விபத்தில் தனது கணவன் (சந்தோஷ் பிரதாப்) மற்றும் மகனை இழந்து தனிமையாகிறார் மீரா (த்ரிஷா). அதே நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட சாலையில் பல்வேறு விபத்துகள் மர்மமான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருவது தெரிய வருகிறது. இதனால் சந்தேகம் அடையும் மீரா, கான்ஸ்டபிள் சுப்ரமணி (எம்.எஸ். பாஸ்கர்) மற்றும் தனது தோழி அனு (மியா ஜார்ஜ்) ஆகியோரின் உதவியோடு அதன் பின்னணியை ஆராய்வதாக ஒரு கதை நகர்கிறது.
இதற்கு இணையாக வரும் மற்றொரு கதையில், மாயன் (ஷபீர்) என்பவர் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அங்கே ஒரு மாணவி (லட்சுமி பிரியா) அவரை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஒருநாள் அந்த மாணவி மாயனிடம் காதலைச் சொல்ல அதை ஏற்க மறுக்கிறார். இதனால் கோபமடையும் அந்தப் பெண் அவர் மேல் பொய்யான பாலியல் புகாரினை அளிக்க அவரது வேலைப் பறிபோகிறது. அதனைத் தொடர்ந்து அவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறார்கள். இப்படி இரண்டு சாலைகளில் பயணிக்கும் இரு கதைகளை ஒரே புள்ளியில் எவ்வாறு சந்திக்க வைக்கிறார்கள் என்பதே ‘தி ரோட்’ படத்தின் கதை.
விபத்தில் குடும்பத்தை இழந்து பதறும் காட்சிகளிலும், குற்றத்தை விசாரிக்கப் போராடும் காட்சிகளிலும் த்ரிஷா தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இல்லத்தரசியாக வரும் காட்சிகளின் எழுத்திலிருந்த செயற்கைத்தனம் அவரது நடிப்பிலும் ஒட்டிக்கொள்கிறது. செய்யாதத் தவற்றுக்குத் தண்டனைப் பெற்று அழுகிற இடத்திலும், தனது தந்தையின் தற்கொலைக்குத் தன்னைச் சுற்றி நடக்கிற பிரச்னைகள்தான் காரணம் என்று கையறு நிலையில் உடைகிற இடத்திலும் தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார் ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர். ஆனால், இரண்டாம் பாதியில் அவரும் ‘செயற்கையான நடிப்பு’ மோடுக்குப் போனது ஏன் என்பது புரியவில்லை.
நாயகியின் தோழியாக வரும் மியா ஜார்ஜுக்குப் பெரிய வேலை இல்லை. அதே போலத் தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தும் எம்.எஸ்.பாஸ்கரை வெறும் ஓடுவதற்கு மட்டும் பயன்படுத்தி வீணடித்துவிட்டனர். கொள்ளையராக வரும் செம்மலர் அன்னம் நடிப்பில் மிகைத்தன்மை எட்டிப்பார்க்கிறது. பட்டு ரோசாவாக வரும் நேகா தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். வேல ராமமூர்த்திக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் கதாபாத்திரம் இல்லையென்றாலும், தனது முந்தைய படங்களின் இருக்கும் டெம்ப்ளேட் முகபாவனைகளை அப்படியே செய்து கொண்டிருக்கிறார்.
படம் ஆரம்பித்தவுடனே ஒரு கும்பல் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வரும் தம்பதியின் நகையைக் கொள்ளையடித்து, அவர்களைக் கொன்று விபத்தாக மாற்றுவதாகக் கதை ஆரம்பிக்கிறது. அதற்கு அடுத்த காட்சியிலே த்ரிஷாவின் குடும்பம் ‘ரோட் ட்ரிப்’ போவதாகச் சொல்ல, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது. அதே நேரத்தில் இணைக் கதையாகப் பயணிக்கும் ஷபீரின் கதையின் திரையாக்கம் ‘டிவி சீரியல்’ போன்ற நாடகத் தன்மையான உணர்வினைத் தருகிறது. இப்படி இருவேறு கதைக்கு மாற்றி மாற்றிப் பயணிக்கும் திரைக்கதை அமைப்பு எதனுடனும் ஒன்றிச் செல்ல முடியாத ஓர் உணர்வினைத் தந்து அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அடுத்து என்ன என்கிற சஸ்பேன்ஸோ, எதிர்பாராத ஆச்சரியங்களோ இல்லாமல் கதையின் வரிசையை மட்டும் மாற்றி, ‘இது என்ன வகையறா படம்?’ என்று மட்டுமே யோசிக்க வைத்துள்ளார் இயக்குநர் அருண் வசீகரன். அதேபோல விபத்து நடந்த நீண்ட ஹைவேயில் சில நொடிகளிலேயே வண்டி காணாமல் போகிறது, சுற்றி எந்த ஆட்களையும் காணவில்லை. பின்னர் எப்படி வண்டி காணாமல் போனது, யார் தூக்கிச் சென்றார்கள் என்கிற கேள்விகள் எழ, படம் முடிந்த பின்னரும் அதற்கு விடை கிடைக்கவில்லை.
ஒரு காலத்தில் யார் வீட்டிலும் களவு செய்யக் கூடாது என்பதற்காக தங்கள் சமூகத்துக்குக் காவல்கூலி கொடுக்கப்பட்டது என்றும், அதனால் இப்போது நீ படித்து முன்னேற வேண்டும் என்றும் மகனுக்குத் தந்தை அறிவுரை கூறுவதாக வசனம் இருக்கிறது. ஆனால் அந்தக் கதாபாத்திரம் இறுதியில் கொடூரமான கொள்ளையனாகவும், ஈவு இரக்கமின்றி கொலைகள் செய்வதாகவும் காட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் இயக்குநர் சமூகத்துக்குச் சொல்ல வரும் கருத்து என்ன?
மேலும் தொடர் கொலைகளுக்கு மார்ச்சுவரியில் வேலை செய்பவர், பஞ்சர் ஒட்டுபவர், பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்கள் என்று விளிம்புநிலை சாமானியர்கள் துணை நிற்கிறார்கள் என்பதும், இதற்கு மாதச் சம்பளமாக சில லட்சங்கள் பெறுகிறார்கள் என்றும் காட்டியிருக்கிறார்கள். இதெல்லாம் என்ன லாஜிக் பாஸு?
மதுரைக்கு வெளியே ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கும் இந்தப் பயணம், சர்வதேச குற்றவாளிகள் அளவுக்கு லிங்க் இருக்கிறது என்று மாறுகிறது. ஆனால் இதை விசாரிக்க த்ரிஷாவும், ஒரு கான்ஸ்டேபிலும் மட்டும் போதும் என்கிற இயக்குநரின் முடிவு நமக்கு மலைப்பைத் தருகிறது. அதுமட்டுமல்லாமல் குற்றத்துக்குத் தொடர்பானவர்கள் எல்லாம், “பெட்டிக்குள்ள போன பாய் இங்க வந்துட்டேன்” என்று மீராவின் வாழ்வைச் சுற்றியே இருப்பது குபீர். மேலும் ஷபீரின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், இணை கதை பிரதான கதையாக ஒரு கட்டத்துக்கு மேல் மாறி விடுகிறது.
ஒளிப்பதிவாளர் கே.சி.வெங்கடேஷ் த்ரில்லர் காட்சிகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் கேமரா கோணங்கள் பயத்தை உருவாக்கும் அளவுக்குச் சிறப்பாகவே இருக்கின்றன. ஆனால் மற்றொரு இணை கதைக்கான ஒளிப்பதிவில் குறும்படத்துக்கான தரத்தை மட்டுமே கொடுத்துள்ளார். படத்தொகுப்பாளர் ஏ.ஆர்.சிவராஜ் நான்-லீனியர் கதைக்கான சுவாரஸ்யத்தைக் கூட்டவில்லை. அதிலும் கத்திரி போட வேண்டிய காட்சிகள் ஏராளம். பின்னணி இசை மற்றும் பாடல்களில் சாம் சி.எஸ்-ஐ எங்குத் தேடியும் காணவில்லை.
மொத்தத்தில் நெடுஞ்சாலையில் ஆரம்பித்த இந்த `தி ரோட்’ பயணம், நம்மைப் பாதை தெரியாத குண்டு குழியுமான நம்பகத்தன்மையற்ற திரைக்கதையமைப்பில் சிக்க வைத்து “போதும்ப்பா சாமி எங்கள இறக்கி விட்ருங்க” என மன்றாட வைத்திருக்கிறது.
+ There are no comments
Add yours