`டாக்ஸி டிரைவர்’, `ஷட்டர் ஐலேண்ட்’ ‘தி உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’, ‘தி ஐரிஷ்மேன்’ போன்ற பல படங்களை இயக்கியவர் உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி.
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ தனக்குத் திருப்புமுனையாக படங்களான `டாக்ஸி டிரைவர்’, `ரேஜிங் புல்’ உட்பட பல படங்களில் ஸ்கார்செஸியுடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் ரேஜிங் புல் படம் அவருக்கு வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் ஸ்கார்செஸி, ராபர்ட் டி நீரோவுக்கும் தனக்குமான நட்பு குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் மார்ட்டின் ஸ்கார்செஸி.
“நான் யார், எங்கிருந்து வருகிறேன் என்று டி நிரோவுக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால் அதைப் பற்றி தெரிந்தவர்களில் இவர் மட்டுமே இப்போது உயிருடன் இருக்கிறார். அவர் என் ஊருக்குப் பக்கத்திலிருந்துதான் வருகிறார். எங்களின் 16 -வது வயதில் முதன் முதலாக சந்தித்தோம். இப்போது எங்களுக்கு 80 வயது. 60 ஆண்டுகளுக்கு மேலான நட்பு இது.
நான் இயக்கிய `மீன் ஸ்ட்ரீட்ஸ்’ மற்றும் `டாக்ஸி டிரைவர்’ படங்கள் மூலமாகதான் எங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகளைத் தெரிந்துகொண்டோம். ஒரே மாதிரியான மனநிலை, உணர்ச்சிகள் என எங்களுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் எங்கள் நட்பின் அடித்தளம். ” என தங்கள் நட்பின் தொடக்கத்தைப் பற்றி விவரிக்கும் மார்ட்டின் ஸ்கார்செஸி. 16-வது வயதிலேயே இவர்களுடைய நட்பு தொடங்கியது என்றாலும், இடையில் சிறிது காலம் இந்த நட்பு தொடர்பற்றுப் போயிருந்தது. ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் பிரையன் டி பால்மாவால்தான் மார்ட்டின் ஸ்கார்செஸியும் ராபர்ட் டி நீரோவும் மீண்டும் சந்தித்துக்கொண்டு தங்கள் நட்பை மீண்டும் தொடர முடிந்தது எனவும் தெரிவிக்கிறார் ஸ்கார்செஸி. என்னுடைய பாணியிலான படங்களை மட்டுமே இயக்குவேன் என்று விடாப்பிடியாக ஹாலிவுட் திரையுலகத்தோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்த தனக்கு டி நீரோ எப்போது துணையாக இருந்ததாக மார்ட்டின் ஸ்கோர்செஸி நினைவு கூர்ந்திருக்கிறார்.
“ஆஸ்கர் வாங்கிய பின் ஹாலிவுட்டால் தவிர்க்க முடியாத பெரிய நடிகரானார் டி நீரோ. அந்தக் காலகட்டத்தில் இயக்குநர்களுக்கு ஒரு பிரச்னை இருந்தது. நம்முடைய படங்களைத் தயாரிக்கும் ஸ்டூடியோக்கள், இயக்குநர்களிடமிருந்து அப்படங்களுக்கான உரிமையைப் பறித்துவிடும். உங்களுடைய படத்தை அவர்களுடைய படமாக மாற்றிவிடுவார்கள். பல நடிகர்களும் ஸ்டூடியோக்களுடன் இணங்கிப் போய்விடுவார்கள். ஆனால் என்னுடைய படங்களுக்கு அப்படி நிகழவில்லை. ஏனென்றால், டி நீரோ ஒருபோது அப்படி செய்யவில்லை. என் பக்கம்தான் நின்றார். என்னையும் என் படங்களையும் காப்பாற்றினார்” என்று விளக்கினார்.
இருவரும் இணைந்து முதன்முதலில் 1973 ஆம் ஆண்டு மீன் ஸ்ட்ரீட்ஸ் இணைந்து பணியாற்றினர். அதைத் தொடர்ந்து, `டாக்ஸி டிரைவர்’, `ரேஜிங் புல்’, `தி கிங் ஆஃப் காமெடி’, `குட்ஃபெல்லாஸ்’, `கேசினோ’, `தி ஐரிஷ்மேன்’ என நீண்டு, விரையில் வெளியாகவுள்ள `கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ படம் வரை உறுதியாக நிற்கிறது இவர்கள் நட்பு.
அக்டோபர் 27 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ படத்தில் மார்ட்டின் ஸ்கோர்செஸி, லியோனார்டோ டி காப்ரியோ, ராபர்ட் டி நீரோ ஆகியோரை முதல் முறையாக ஒன்றாக நடிக்கிறார்கள். லியோனார்டோ டிகாப்ரியோ பற்றி ஸ்கார்செஸி கூறும்போது, “டி நீரோவுக்கும் டிகாப்ரியோவுக்கும் சினிமா மீது ஒரே மாதிரியான கண்ணோட்டம் இருக்கலாம். ஆனால், அவர்களின் வேலை செய்யும் பாணியானது முற்றிலும் வெவ்வேறானதாக இருக்கிறது. லியோனார்டோ டி காப்ரியோவை எனக்கு அறிமுகப்படுத்தியது டி நீரோ. `லியோ ஒரு நல்ல பையன். ஏதாவது ஒரு படத்தில் நீ அவனுடன் பணிபுரிய வேண்டும்’ என்று டி நீரோ சொன்னார். இப்படி எல்லாம் அவர் எப்போதாவதுதான் சொல்வார். லியோவுடன் ‘கேங்ஸ் ஆஃப் நியூயார்க்’ படத்தில் வேலை செய்தேன். அடுத்து ‘தி ஏவியேட்டர்’ படம் என நீண்டது லியோவுடனான பயணம்” என்று கூறினார்.
`தி ஏவியேட்டர்’ படத்தில் லியோவுடன் பணியாற்றும்போதுதான், டி நீரோவிற்கும் லியோவிற்கும் உள்ள ஒற்றுமையை உணர்ந்ததாக மார்ட்டின் ஸ்கோர்செஸி கூறுகிறார். “இருவருமே தங்களுக்கு வழங்கப்படும் கதாபாத்திரங்களுக்காக அசாத்திய உழைப்பையும் பயமில்லாது புதிய புதிய முயற்சிகளையும் எடுப்பவர்கள். அதனால், அவர்களுடன் பணிபுரியும் இயக்குநர்களை வெவ்வேறு எல்லைகளுக்கு நகர்த்துவார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours